175. நான் ஏன் மதம்/மனம் மாறினேன்..? 9

09.07.2006

 

இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 7-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 21 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.

1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் – ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? – இது என் கேள்வி.

(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )

இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? – குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? – சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.

3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!

4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:

Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . – தருமி

இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. ஆனால், நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.

“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”

5) படைப்புக்கொள்கை – “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”

- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.

- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும். எனக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை.

“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் – ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !

ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். 4-வது கேள்வி, அதன்பின் முக்கியமாக 5-வது கேள்வி – அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வி:

குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ – கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு ‘கீதையின் விதிகள்தான்’ எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -

இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?

கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் – நிச்சயமாக கொலை செய்தவனால் – காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.

 

19 பதில் சொல்லி இருக்காங்க


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சரியானது. இஸ்லாம் கொடுக்கின்ற தண்டனைகளை பாதிக்கப்பட்டவனின் கண் கொண்டு பாருங்கள். அல்லது உங்கள் தாயை அல்லது சகோதரியை ஒருவன் கற்பழித்திருந்தால் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள். (மன்னிக்கவும்- படிப்பவர்களுக்கு குற்றத்தின் கடுமையை உணர்த்தத்தான்.)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது (அல்குர்ஆன்2:178)
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்2:179) என்று கூறுவதோடு

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.(அல்குர்ஆன்42:43) என்றும் கூறுகிறது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொல்வது எழுதுவதற்குத்தான் நன்றாகயிருக்கும். செயல்படுத்த முடியாதது. சொல்பவர்கள் கூட செயல்படுத்த மாட்டார்கள் அல்லது முடியாது. இதுதான் மனித இயற்கை. இயற்கைக்கு எதிரான சட்டங்கள் இஸ்லாத்தில் இல்லை.

குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்தவர்கள்தான் முஹம்மது நபி(அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அவர்கள். ஒரு மனிதனைக் கொல்வது ஒரு சமூகத்தை கொன்றதற்கு ஒப்பாகும் என்பது அன்னாரது வாக்கு அதாவது இஸ்லாமிய கொள்கை. (சமீபத்தில் நமது முதல் இந்தியக் குடிமகன் காஷ்மீரில் பேசும் போது கூட இதைக் குறிப்பிட்டார்)

இஸ்லாம் சில குறிப்பிட்ட அல்லது தக்க காரணங்களுக்காக ஒரு மனிதன் கொல்லப்படலாம் என்கிறது. இந்த குறிப்பிட்ட அல்லது தக்க காரணங்கள் என்பது கொலைக்குப் பதில் அல்லது கொலையை விடக் கொடிய குற்றங்கள் – அவற்றை இஸ்லாம் தெளிவாக்கி விட்டது.

ஒருவன் கொல்லப்படக் கூடிய குற்றம் செயதிருந்தாலும் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள அரசிடம் முறையிட்டு அரசின் முறையான விசாரனைக்குப் பின்னர் அரசுதான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இதுதான் நபி(அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அவர்கள் காட்டித் தந்த வழி. தவறு செய்தவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்பது இஸ்லாமிய வழியல்ல.

மனதில் இருந்த சில குர்ஆன் ஆதாரங்களைத் தந்திருக்கிறேன். பணியிலிருக்கம்போது எழுதிய பின்னூட்டம். தாங்கள் விரும்பினால் மேலும் ஆதாரங்கள் தருவேன்.

கடைசியாக கேட்ட கேள்விக்கு இந்த பதிலில் உங்களுக்கு திருப்தியில்லையென்றால், உங்களின் மற்ற கேள்விகளையும் படித்து விட்டு, நாகூர் ரூமியின் பதிலுக்குப்பின், மேலும் விளக்க முயற்சிப்பேன்.


அன்புள்ள சுல்தான் அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கத்தி தூக்கிக் கொண்டால் இவ்வுலகு என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் இன்றைய உலகில்

///அல்லது உங்கள் தாயை அல்லது சகோதரியை ஒருவன் கற்பழித்திருந்தால்
///

மட்டும் தான் கத்தி தூக்கப் படுகிறதா இல்லையே இந்த நிலையில் யாரால் வரையுறுக்க முடியும்? இந்த பாதகங்களுக்காக மட்டுமே ஒருவர் கொலை செய்யலாம் இல்லை கூடாது என்பதை?

பலர் இன்று தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல் பட்டாலே அது சகோதரியை கற்பழிப்பதை விட படு பாதகமான ஒரு குற்றம் என்று யோசித்து கத்தி தூக்கிக் கொண்டால் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பசியால் திருடினால் மனிதாபிமானம் கொண்டு விட்டு விடலாமா இல்லை கையைத் துண்டிக்க வேண்டுமா என்பதை நிர்ணயம் செய்யாமல் கையை வெட்டி விட அனுமதிப்பது சரியா?

உங்கள் மத நம்பிக்கைகளை புண் படுத்த எழுதவில்லை உணர்தலே எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதால் என் புரிதலை வெளிப் படுத்தி இருக்கிறேன். இதில் தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

தவறு இருப்பது மதத்திடமா மனிதனிடமா என்பதையும் தாங்கள் மாற்றுப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே என்று கூட சில கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கலாம் அதனை தவறாக எடுத்துக் கொண்டு தவறிழைத்தால் அது மனிதன் தவறா மதத்தின் தவறா?

எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்.

அன்பு வழி அற வழியே சிறந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது என்பது சமூகத்தின் மீது. தனி மனிதனுக்காக என்று வைத்துக் கொண்டாலும் – அவன் பழி தீர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் முலமாகத்தான்.
இஸ்லாமிய சட்டத்தின் படி கொலைக்கு கொலைதான் தண்டனை. பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து பிணைத்தொகை பெற்றுக் கொண்டு விட்டு விட்டாலே தவிர. இதிலே முரண்பாடு எங்கே?

அன்பின் செல்வன், டார்வின் தியரி என்பது தியரிதான் – மாறக்கூடியது. நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. அதை விட சிறந்த தியரி அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அதை மாற்றக்கூடும்.

அன்பின் காந்தித்தொண்டன், பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக கத்தி தூக்கக்கூடாது – அரசு,சட்டம், நீதிமன்றம் முலமாகத்தான் எதையும் செய்யவேண்டும் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அல்லது எல்லாத் தவறுகளுமே மன்னித்து விடப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் உலகில் சட்டம், நீதித்துறை என்பதெல்லாம் தேவையற்றது என ஆகி, அது தவறுகள் பெருகவே வழிவகுக்கும்.

/இன்று தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல் பட்டாலே அது சகோதரியை கற்பழிப்பதை விட படு பாதகமான ஒரு குற்றம் என்று யோசித்து கத்தி தூக்கிக் கொண்டால்/
இஸ்லாம் ‘உண்மையிலிருந்து பொய் தெளிவாகி விட்டது’, ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் விருப்பம். ‘என் வழி எனக்கு உன் வழி உனக்கு’ என்று மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மையை போதிக்கிறது. அதன் பின்னும் யாரேனும் கொலை செய்தால் (அவரைக் கொன்று)தண்டிக்கச் சொல்கிறது.

பசியால் திருடியவனுக்கெல்லாம் கை வெட்டப்படுவதில்லை. ஒருவரை பசியால் துடிக்க வைத்து திருட
வழி வகுப்பதை முழுச்சமூகத்தின் மீதான குற்றமென இஸ்லாம் சொல்கிறது. அவரை விட்டு விட மட்டுமல்ல அவருக்கு சரியான ஏற்பாட்டையும் செய்ய வேண்டுமென இஸ்லாம் நிர்ணயித்துள்ளது.

/கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே/
எல்லா தவறு செய்தவனும் ஒரு நியாயம் கற்பிக்கத்தான் செய்வான். அதனால் தண்டனையே கொடுக்கக்கூடாது என்று சொல்வது மனிதத்தை தவறான பாதையில்தான் செலுத்தும்.

/எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்/
சரியானதை தவறென்று புரிந்து கொள்வது, புரிந்து கொள்ளுதலின் தவறு. அதனால் சரியானது தவறாகி விடாது.

தவறு இஸ்லாத்திலில்லை அதைப் பின்பற்றுகிற மனிதர்களிடம்தான்.
அதற்காக இஸ்லாம் பின்பற்ற முடியாயததுமில்லை. இஸ்லாம் மார்க்கம் எளிமையானது.
ஒரு சிலர் செய்யும் தவறு பூதாகரமாக காட்டப்படுவதாலும், மேற்கத்திய மற்றும் உயர்சாதி ஊடகங்டகளின் திரித்தலினாலும்தான் இஸ்லாத்தைப் பற்றிய இன்றைய தவறான புரிதல்.

அன்பு வழி அற வழி சிறந்ததுதான் அதற்காக நீதிமன்றம், தண்டணைகள், இ.பி.கோ. எதுவும் தேவையில்லையா என்ன!
கேள்விகள் கேட்கப்படும் பொழுதுதான் தெளிவுகள் பிறக்கும். தனிமனித விமர்சனங்களும், காழ்ப்புணர்வும்தான் தவறு நண்பரே.


என் பின்னூட்டத்தில் சில குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. கீழ்கண்ட கேள்விகள் எல்லாம் தருமி அவர்களைப் பார்த்து வைத்தது. ஆனால் சரியாக சொல்லாததால் சுல்தானைப் பார்த்தே வைத்த கேள்விகள் போல தோன்றிவிட்டது.

///
தவறு இருப்பது மதத்திடமா மனிதனிடமா என்பதையும் தாங்கள் மாற்றுப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே என்று கூட சில கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கலாம் அதனை தவறாக எடுத்துக் கொண்டு தவறிழைத்தால் அது மனிதன் தவறா மதத்தின் தவறா?

எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்.
///

மேலும்
///
அன்பு வழி அற வழியே சிறந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
///

இது என்னுடைய signature. ஒவ்வொரு தடவையும் italics போன்று பார்மேட் செய்வதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. அதனால் அப்படியே விட்டு விடுவது வழக்கமாகி விட்டது. மற்றபடி என்னுடிய எல்லாக் கேள்விகளுமே புரிதல்களுக்காகவே.

கடைசியாக ஒன்று கூறிக் கொள்கிறேன் மனிதனால் உருவகிக்கப்பட்டதுதான் மதம் ஆகவே இதனால் தொல்லைகள் ஏற்படுகிறது என்று தெரியும் சமயம் அதனை சீர் தூக்கிப் பார்ப்பது தவறல்ல.

அன்பு அற வழியில் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியாது என்பது உண்மை ஆனால் பல பிரச்சனைகளுக்கு அன்பு வழியில் சென்று தீர்வு காண்பதே நலம்.

//உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே அபுமுஹை ஒரு பதில் பதிவளித்திருப்பது தெரிந்து அங்கே போனேன். மற்றபடி எனக்கு என்ன ஜோசியமா தெரியும்! குறிப்பிட்டமைக்கு நன்றி.

கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.

//

கலக்குறீங்க புரொபசர்! உங்க பதிவ எல்லாரும் ஜோசியம் தெரிஞ்சு தான் படிக்கிறாங்களா?

குமுறல் என்னன்னூ சொன்னா நானும் பாக்குறேன். வந்ததைப் பதிவு செய்யும் ஒரு basic courtesy கூடவா இல்லை உங்களிடம்?

உடனே போகும் பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க முடியாது என நழுவ வேண்டாம்

அது உங்களுக்கு பதில் அளிக்கும் பதிவாக இருப்பதால் தான் courtesy குறித்துப் பேசுகிறேன்.


Comments are closed.