172. இடப் பெயர்ச்சி

Saturday, August 19, 2006

மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் – எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!

அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு – ஒரு மனுசிதான் – மதிக்கு நன்றி – வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.

ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் ‘பே’ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் ‘பே’ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.

இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.

போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா…அம்மாடி…நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க…அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல… இது அதையும் தாண்டி… அந்த நேரத்தில வலியில ‘ஓ, ஜீசஸ்’அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்…ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே ‘அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்’ அப்டின்னேன். ‘அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது’ – இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி…எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க…பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.

நல்ல வேளையா, ஒரு ‘கவைக்கு’ இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy ‘n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு – பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.

கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்…அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)

சரி…எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை – வெப்லாக்ஸை – இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா…!

posted by Dharumi @ 8/19/2006 11:01:00 AM

>
——————————————————————————–
< 27 Comments:
முத்து(தமிழினி) said...
இத்தெல்லாம் சரிதான்.ஆனா இந்த டெம்பிளேட் நல்லா இல்லையே..நிறைய திருத்தணும் அய்யா...

வெப்பிளாக்கில் இருந்து ஓடியதில் என் பங்கும் கொஞ்சம் இருக்காமே?:))

8/19/2006 12:56:30 PM
செல்வன் said...
வீடு மாறியபின் முதல் பின்னூட்டம் எனது தான்.நம்ம ராசி வர்க் அவுட் ஆச்சுன்னா பின்னூட்டமா பொழியும்.சுத்தமா வரலை என்றாலும் நீங்க தான் அதில் நம்பிக்கை இல்லாதவராச்சேன்னு சொல்லி சமாளிச்சுடலாம்:)))

ப்ளாக்கரிலேயே வகைப்படுத்தும் முறை இருக்கு தெரியுமா? www.beta.blogger.com போயி ஒரு பதிவை துவக்குங்க.வெப்லாக்சில் இருக்கும் அத்தனை வசதியும் அதிலே இருக்கு

8/20/2006 08:20:13 AM
சதயம் said...
ஹி..ஹி..குருப்பெயர்ச்சி...குருபெயர்ச்சின்னு சொல்லுவாங்களே அது இதுதானா...

இனி ப்ளாக்ஸ்பாட்ல கலக்குங்க...

வாழ்த்துக்கள்

8/20/2006 02:00:02 PM
பொன்ஸ் said...
Mouse problem.. -> No tamil. :(

Not to worry, We will make this Blogspot look like WordPress.. You will again dare to be different :) )))

8/20/2006 09:22:38 PM
sam said…
This post has been removed by the author.

8/24/2006 12:40:04 AM
DHARUMI said…
test III

8/24/2006 12:41:50 AM
குறும்பன் said…
நிறைய வூடு கட்டுவிங்களாட்ட தெரியுது. இது தான் கடைசி வூடா இல்ல இன்னும் புதுசா வூடு கட்டுவிங்களா?

8/24/2006 12:55:24 AM
Thekkikattan said…
இப்படி ஒத்த ஆளா உங்கள புலம்ப விட்டுடங்களே, தருமி ஐயா மண்டபத்திலே தனியாவ இருக்கீக… பாத்து காத்து கருப்பு வந்து அடிச்சுடப் போகுது ;-) )

8/24/2006 01:08:43 AM
dharumi said…
This post has been removed by a blog administrator.

8/24/2006 11:02:40 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.

8/24/2006 11:04:16 PM
sam said…
now i am not getting even my own comments in my posts :(

8/24/2006 11:06:12 PM
lakshmi said…
Hi Sam,

‘Everything is for good’ . Looking forward to your next post.

8/25/2006 01:10:59 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.

8/26/2006 04:53:53 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.

8/26/2006 05:01:02 PM
sam said…
testII

8/26/2006 05:12:17 PM
dharumi said…
testIII

8/26/2006 05:12:48 PM
Dharumi said…
This post has been removed by the author.

8/26/2006 05:20:50 PM
Dharumi said…
test
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!

8/26/2006 05:28:44 PM
Anonymous said…
test4 – as anonymous

8/26/2006 11:50:03 PM
Anonymous said…
This post has been removed by a blog administrator.

8/26/2006 11:50:17 PM
Anonymous said…
ஒரே டெஸ்ட் மயம்தான்…எல்லாம் நேரம்தான்…!! டெஸ்ட் 4

8/27/2006 12:02:19 AM
ralsam said…
test – sam

8/27/2006 10:17:09 AM
இராமநாதன் said…
பெரீய்யப்பா,
திரும்ப பூர்வீக வீட்டுக்கே வந்துட்டீங்க.

வருக வருக.

8/27/2006 11:03:07 AM
Dharumi said…
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!
test II

8/29/2006 10:03:57 AM
பொன்ஸ் said…
தருமி,
வருக வருக.. மீண்டும் ப்ளாக்ஸ்பாட் :)

எப்படி படம் போடுறதுன்னு சீக்கிரமே சொல்றேன்.. வெப் லாக்ஸ் மாதிரியே இதையும் கலக்கிடுவோம்.. :)

8/29/2006 03:38:24 PM
மணியன் said…
Return of the prodigal son ! Let him be resurrected !!

9/04/2006 12:21:47 PM
Narayanaswamy.G. said…
Sir

Stylesheetsla mouse hover link colour appadinu oru samasaram irukkum. Adhu whitenu irukku. adhai vera dark colourukku mathunga. illaina endha link mela mouse kondu ponalum link kaanapoodum!

9/05/2006 08:49:17 PM
Post a Comment

174. IF I WERE THE …. …. ?

Thursday, August 31, 2006

174. IF I WERE THE …. …. ?

நம் மாநில முதலமைச்சர் கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் என்ற கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் தேர்தல் என்னும் கேலிக்கூத்துக்களை மனதில் கொண்டு, அந்த கிராமங்களில் ஒழுங்கான தேர்தல்களும், தலித்துகளின் முழுமையான அரசியல் பங்கேற்பும் நடை பெறும்வரை அவைகளின் ‘ரிசர்வ்டு’ நிலை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆயினும் இதனால் எல்லாம் அங்குள்ள பெருவாரியான தேவர்(கள்ளர்?)சாதி மக்கள் மனம் தளர்ந்து விடப் போகிறார்களா என்ன? அவர்கள்தான் ஆளமட்டுமே பிறந்தவர்களாச்சே! அவர்கள் விட்டுக் கொடுத்தோ, அவர்களை விட்டுக் கொடுக்க வைத்தோ தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த சாதியைச் சேர்ந்த சிலரோடு பேசிப் பார்த்ததிலேயே இந்த உண்மை புரிகின்றது. விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் கதைதான். அந்த பெருவாரியான சாதியினர் கொடாக் கொண்டான் என்றால் அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கங்களும் விடாக் கொண்டான் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரசாங்கம் தன் முழு பலத்தோடு இறங்கினால்தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும். ஓட்டுக்களில் கண்ணை எப்போதும் வைத்திருக்கும் எந்த சனநாயக அரசும் அந்த முடிவுக்கு வராது. எப்போதும் போல ‘தேர்தல் நாடகங்கள்’தான் நடந்தேறும்.

தலித் தலைவர்களும், தலித் கட்சிகளுமாவது இதில் முழு முனைப்போடு இருக்கிறதா, இருக்குமாவெனில், அதுவும் இல்லை. இந்த நிலையில் தலித் மக்கள் முழு வீச்சில் புரட்சியில் எழ முடியுமாவென்றால் அது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமல்ல; அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெருவாரிச்சாதியினரை அண்டிப் பிழைக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது. தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்.

இந்த நிலையில் என்னதான் நடக்கும்; நடக்க முடியும்?

கனவுகள்..கனவுகள்… IF I WERE THE ——-

IF I WERE THE C. M. OF TN….

எளியோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் இந்த நான்கு கிராமங்களில் முதலில் நடக்கும். ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்பதைவிடவும் அந்த ஒவ்வொரு கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள், அரசாங்க விவசாயத்துறையின் நேரடி மேற்பார்வையும், உதவியும், முக்கியமாக எல்லாவகை பாதுகாப்பு, – இவைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் செய்து தந்து இந்த மக்கள் தலை நிமிர, வயிற்றுப்பாடு முற்றிலும் தீர, மக்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவடைய எல்லாமும் செய்யப்படும்.

IF I WERE THE COLLECTOR OF THAT DISTRICT …..

இந்த நான்கு கிராமங்களில் நிச்சயமாக தலித்துகள் தனியாக ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு தனிச் சேரிகளில்தான் வாழ்வார்கள். அந்தப் பகுதி மட்டும் மாவட்ட அதிகாரிகளின் தனிக்கவனம் பெறும். அவர்களுக்கு வேண்டிய தண்ணீர், சாலை, பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்களும், அங்கு இந்த சாதிவெறி இல்லாத காவல் துறையினரும், மாவட்ட அதிகாரியினால் முழுமூச்சில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் விரைந்து அளிக்கப்படும். முக்கியமாக இடுகாடுகளும் அதற்குச் செல்ல தனிச் சாலைகளும் (!) அமைத்துத் தரப்படும். wantonly all the basic amenities will be DENIED to the other “high” caste. they have to wait for those things till the next elected panachyat is formed. obstinance has to be paid back by utter obstinance.

IF I WERE ONE AMONG THE MAJORITY CASTE …

(நான் மட்டும் விதி விலக்காகவா இருந்திருக்கப் போகிறேன்?)

காலங்காலமாய் எங்க காலடியில் கிடந்ததுகள், நாங்க சொன்னதக் கேட்டுக்கிட்டு இருந்ததுகள், ஒரு வாய் சோத்துக்கு எங்கள விட்டா நாதியில்லாததுகள் … இதுக பிரசிடெண்டா இருந்து எங்கள ஆளன்னும்னு நினச்சா அது முடியுமா? அவங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? எங்கள ஆளணும்னு நினச்சாலே அவங்கள உண்டு இல்லன்னு பாத்துற மாட்டோமா..? சும்மா உட்ருவமா, என்ன? “நாங்க” யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? எவன் என்ன பண்ண முடியும்னு பாத்துருவோம்….

IF I WERE ONE AMONG THOSE DALITS ….

ஊர்ல உலகத்துல எல்லோரும் என்னமாவது சொல்லிட்டுப் போயுறுவீக..இங்கன நாங்க எங்க தினசரி பொழப்ப பார்க்கணுமே. வீம்புக்கு தேர்தல்ல நின்னு அவங்கள எதுத்துக்கிட்டு நிக்கணும்னா எங்களுக்கு என்ன பலம் இருக்கு? யாரு சப்போர்ட்டுக்கு இருக்கா? ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க’ய்யா…என்ன தேர்தல் ..என்ன தலைவர் பதவி … மொதல்ல உசுரோட இருக்கணுமே!

… மனுசனுக்கு உசிரு மேல ஆச இருந்து தொலையுதே, இந்த கேடு கெட்ட சாதியில பொறந்த பிறவும்… என்ன பண்ணச் சொல்றீக.. சொல்லுங்க … எங்கள விடுங்க .. வெந்தத தின்னுட்டு விதி வந்தா போய்ச் சேரணும்ங்கிறது எங்க தலையெழுத்தாகிப் போச்சு..

====================

ஒரு நடந்த கதை:

கல்லூரியில் முதல் தலைமுறையினருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் ஒரு தலித் மாணவன் சொன்னது:
இன்றைக்கும் அவர் பஸ் விட்டு இறங்கி தன் சேரிக்குச் செல்லும்போது அந்தப் “பெரிய”சாதிக்காரர்களின் பகுதியைத் தாண்டித்தான் போகவேண்டும். அப்படிப் போகும்போது தங்கள் காலணிகளைக் கையில் எடுத்துத்தான் செல்ல வேண்டுமாம். நல்ல வேளை சட்டையைக் கழட்டச் சொல்வதில்லை அந்தக் கிராமத்தில்!

மாணவனிடம், சரி, உங்களைப் பார்க்க நானே வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்னையும் அப்படி எதிர்பார்ப்பார்களா என்று ஆசிரியர் கேட்ட போது நிச்சயமாக என்றார் மாணவர். அப்படியே அந்த வரைமுறை தெரியாமல் நீங்கள் என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் போனபிறகு என்னைக் கூப்பிட்டு ‘ஊர் கட்டுமானத்தைச் சொல்லிப்பிடு; அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்கக் கூடாது’ என்று சொல்வார்கள் என்றார்.

நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!

ஜெய்ஹிந்த்.

another naked truth of casteism has been shown here in this post in all its rawness.

 

>

<

36 Comments:

சிறில் Alex said…
எனக்குத் தெரிந்து வலைப்பதிவுகளில் ‘வேறொரு’ மேல்சாதி ஆதிக்கத்தை முதன் முறையாகப் படிக்கிறேன்.

எல்லோரும் இன்னொரு மைனாரிட்டி சாதியை சாடிக்கொண்டிருக்க தமிழகத்து மெஜாரீட்டி(?) சாதி/ஓட்டு வங்கியின் அநியாயப் போக்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

ஓட்டுவங்கி சனநாயகத்தில் சமூகநீதியெல்லாம் மண்ணாங்கட்டிதான்.

8/31/2006 08:38:02 PM  
அப்பாவித்தமிழன் said…
வீட்டுக்கு ஒர் கலர் டி.வி வழங்குவது எப்படி, பெரியார் பெண்டாட்டியாய் குசுப்பு நடிக்கலாமா, கூடாதா? (பலாப்பழம் எங்கு விளைகிறது என்பது குசுப்புவுக்கு தெரியாது என்பது ஒரு கிளைப்பிரச்சினை) போன்ற முக்கியமான பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் இருக்கும்போது, இது போன்ற அற்ப விஷயங்களை ஊதி பெரிதாக்குவது உயர் சாதி ஊடகங்களின் திட்டமிட்ட திசைதிருப்பல் முயற்சியே ஆகும்.

8/31/2006 09:30:20 PM  
Thekkikattan said…
:-( நீங்க இந்தியாவில இருந்துதான் எழுதுறீங்கள இல்ல எங்காவது ஆஃப்ரீக்கா காடுகளில் (Bush) இருந்து ரிப்போர்ட் செய்ரீங்கள.

ஒரு ரெண்டு லாரி வைச்சு அந்த ஊரு பெரிரிரிரிய ஆளுங்கள அந்த ஊர விட்டு ஒரு 600 கி.மீ தள்ளி வடக்கே கொண்டு போயி, உலகம் இதனைத் தாண்டியும் உள்ளதுவோய்ன்னு கொஞ்ச நாளைக்கு தொலைச்சுப் புட்டு வந்தா ஒரு வேளை கண்ணு தொறக்குமோ???

If I were the God… அவங்க தூங்கி முழிக்கும் பொழுது ஜப்பான் மாதிரி ஒரே பரபரப்பா இருக்கிற டோக்கியோ போன்ற நகரங்களில் கண் முழிச்சு இவிங்களுக்கு வேலை இல்லாமா… திண்ணைக்கொண்டையில உட்கார்ந்துகிட்டு தேமேன்னு முழிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி… ஒரு நாலு நாளைக்கு இருக்க வைப்பேன்…

//நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!//

இப்ப நான் ஊருக்காட்டுப் பக்கம் வரவா வேண்டாமா???

ஜெய்ஹிந்த்.

8/31/2006 09:38:01 PM  
சிறில் Alex said…
//If I were the God… அவங்க தூங்கி முழிக்கும் பொழுது ஜப்பான் மாதிரி ஒரே பரபரப்பா இருக்கிற டோக்கியோ போன்ற நகரங்களில் கண் முழிச்சு இவிங்களுக்கு வேலை இல்லாமா… திண்ணைக்கொண்டையில உட்கார்ந்துகிட்டு தேமேன்னு முழிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி… ஒரு நாலு நாளைக்கு இருக்க வைப்பேன்…
//

சூப்பர் ஐடியா தெகிட்டான்..

8/31/2006 10:14:47 PM  
Dharumi said…
சிறில், தெக்ஸ்,
நெஜமாவே கேட்கிறேன் – நீங்கள் என்ன reality விட்டு அவ்வளவு விலகிப் போய்விட்டீர்களா என்ன? முன்பே ஒரு பதிவில் கொஞ்சம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இப்போது இங்கு வந்து நிலவரங்களைப் பார்த்தால் உங்களுக்குக் கட்டாயம் cultural shock கிடைக்கும் போல் தெரிகிறதே!

9/01/2006 09:51:22 AM  
வஜ்ரா said…
//
நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
//

இந்த சாதிப் பிரச்சனைக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்…
முதலில் தலீத் மக்களுக்கு community sense இல்லை. மேல் சாதி மக்கள் ஒரு பிரச்சனை என்றால் சேர்ந்துகொள்ளுவார்கள்…அது போல் தலீத் மக்கள் சேர்வதில்லை. பயம்!

அதை அவர்களுக்கு கத்துக் கொடுக்க முயற்சிகள் “கலெக்டரோ” “சீ. யெம்” வந்து எடுக்க முடியாது…!! தாங்களாக முன்னுக்கு வந்தாலொழிய அது முடியாது, (நாடார்கள் ஒரு காலத்தில் தலீத்களாக இருந்து இன்று பிற்பட்ட வகுப்பினர் அந்தஸ்து பெற்றுவிடும் அளவிற்கு முன்னேறியுள்ளனர், எப்புடி? காமராசர் செய்தாரா? )

பிரச்சனையின் முடிவு அதில் தான் இருக்கிறது… நீங்க என்ன ரோடு போட்டுக் கொடுத்தாலும், தண்ணி வரவெச்சாலும் சாதிப்பிரச்சனை இருந்துகொண்டே தான் இருக்கும்…!!

இத்தகய சாதிக்கொடுமைகளுக்கு ஆளாகும் தலீத்துக்கள், இன்ன பிற தலீத்துக்களை அதே போன்ற சாதிக் கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றனர்…!!

உங்கள் எண்ணங்கள் ஏனோ எனக்கு ஏட்டுச் சுரைக்காய் போல் தெரிகின்றது….

9/01/2006 11:51:51 AM  
சந்திர S சேகரன். said…
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது ஆச்சர்யத்தை விட ஐயம் அதிகமாக எழுகிறது..

ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கின்றவர்களிடம் இருக்க வேண்டிய தொலைநோக்கு பார்வையையும்
// கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள்,//

மேல்சாதி மேல்சாதி என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருப்பர்களின் சாதி வெறியையும் ,
//”நாங்க” யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? //

அடிமட்டதில் அவதிப்படுகின்ற மக்களின் மனநிலையையும்
// ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க’ய்யா…//

மிகச்சிறந்த வார்த்தைகளின் மூலம் விவரித்துள்ளீர்கள்…..

// தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்? // இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் 60 ஆண்டுகள் கழித்தும் விடை கிடைக்குமா என்பது ஐயமே..

அன்று கூட நமக்கு சுதந்திரம் வந்து 120 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே !! என்றுதான் சொல்லுவோம் என நினைக்கிறேன்..

இக்காலத்து அரசியல் பேசுபவர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிப்படுத்திய விதம் பாராட்டுதற்க்குரியது..வாழ்த்துக்கள்.

9/01/2006 02:53:37 PM  
நெல்லைகிறுக்கன் said…
இங்க வலைத் தளத்துல சாதிய வச்சு அடிச்சுக்கிடுதவுக எல்லாம் கொஞ்சம் தென் மாவட்டங்களப் போய் பாக்கனும். அங்க யார யாரு நசுக்குதாங்கங்கறது புரியும்.

தலித் மக்கள் ஒன்னு சேர மாட்டாங்கன்னு யார் சொன்னது. அவங்களும் முடிஞ்ச வர எதித்து போராடிக்கிட்டு தான் இருக்காக.

அய்யா தருமி சொல்லிருக்கது உணர்வுபூர்வமானது. தென் மாவட்டத்துல இருந்து வந்தவன்கிற முறயில அத நான் சொல்லுதேன். தலித்தப் பத்தி சென்னையில பொறந்து வளந்தவுகளுக்கு என்னய்யா தெரியும்? தெக்க வந்து வாழ்ந்து பாத்தா தான் அதெல்லாம் புரியும்

9/01/2006 07:14:20 PM  
Dharumi said…
வஜ்ரா ,
//நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
//

இந்த சாதிப் பிரச்சனைக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்…//

இருப்பதாக நான் நினைக்கிறேன்.

//உங்கள் எண்ணங்கள் ஏனோ எனக்கு ஏட்டுச் சுரைக்காய் போல் தெரிகின்றது…. // right, you got it. தலைப்பையே பார்க்கவில்லையா நீங்கள்?

9/01/2006 08:42:29 PM  
Dharumi said…
சந்திர S சேகரன், நெல்லைகிறுக்கன்,
இருவருக்கும் மிக்க நன்றி.
மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சனையின் பரிமாணங்கள் புரிகிறதோ…?

9/01/2006 08:47:07 PM  
வணக்கத்துடன் said…
தருமி அய்யா,

கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய இடங்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த தலித்துகளும் அதிகாரத்தில் பங்கேற்க ஒரே ஒரு சிறந்த வழி இருக்கிறது. அது உங்கள் பதிவில் காணவில்லை.

அது, இரட்டை தொகுதி. இது குறித்த உங்கள் கருத்தை எழுதினால் மகிழ்வேன்.

இப்படி, இடை நிலையும், கடை நிலையும் அடித்து உருண்டால் தான், ஆகாசத்தில் இருந்து கொண்டு அனுபவிப்பவர்களுக்கு ஆபத்து வராது என்று திட்டமிட்டே, பாபா சாகெப் அம்பேட்கரை ஏமாற்றி, இரட்டை தொகுதி முறையை தடுத்தனர், அதனால் இன்று(ம்) பயனடைவோர்.

****
//நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
//

இந்த சாதிப் பிரச்சனைக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்…//

இருப்பதாக நான் நினைக்கிறேன்.
****

இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் விலக முடிவு செய்தவுடன், பெரியார் என்ன நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை நேர்மையாக அனுகினால் இவ்வுண்மை புரிய வரும்.

9/01/2006 09:42:04 PM  
வணக்கத்துடன் said…
//வஜ்ரா said…
நாடார்கள் ஒரு காலத்தில் தலீத்களாக இருந்து இன்று பிற்பட்ட வகுப்பினர் அந்தஸ்து பெற்றுவிடும் அளவிற்கு முன்னேறியுள்ளனர், எப்புடி? காமராசர் செய்தாரா? //

இல்லை. கிருத்துவ மிஷனரிகள்! அவர்கள் தாம் பெரும்பகுதி நாடார்களை மதம் மாற்றி (எப்படி மாற்றினார்கள், என்பது தற்போதைய விவாத கருத்துக்கு அப்பாற்பட்டது), அவர்கள் வசிக்கும் பகுதியில் கல்வி நிலையங்களை திறந்து, அவர்களுக்கு (மதம் மாறாத நாடார்கள் உட்பட) சரஸ்வதியை வழங்கி அவ்வினத்தின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு வித்திட்டனர்.

******
டிஸ்கி: இதை சொன்னதுக்காக, நான் மத மாற்றத்தை ஆதரிக்கறதா, அதுக்கு வால் புடிக்கிறேன், ஆள் புடிக்கிறேன்னு எல்லாம் சொன்னீங்கன்னா, நான் ஒரு தனி பதிவு போட்டுத்தான் பதில் சொல்லனும், என் நிலையை விளக்க. இப்போதைக்கு என்னால அது ஆகாது.

அதனால, டாபிக் மாத்தாம, தலித் விடுதலைக்கு முதல் படியான, அவர்களின் அதிகார பங்கேற்பை உறுதி செய்யும் வழிகளை பற்றி மட்டும் இங்கே பேசலாமே!

9/01/2006 09:56:01 PM  
enRenRum-anbudan.BALA said…
Dharumi,

Very Good Post, thanks !

9/01/2006 10:27:51 PM  
narayana said…
வணக்கம்.

உண்மை சுடும்!

சுடுகிறது!

இன்றும் தேவரினத்தோர் தலித்துகளையோ, மற்ற சாதியினரையோ ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதே நிதர்சனம்.

கல்லூரியில் வகுப்பெடுக்கும், நகரத்தில் வசிக்கும் சில தேவர்கள் மட்டும் வேண்டுமானால் விதி விலக்கு ஆக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இதே நீடிக்கும்.

என் காதுக்கு வந்த ஒரு சேதி.

சிவகாசி, ராஜபாளையம் வட்டாரங்களில் இன்னும் தலித்துகள் கோவிலில் முடி காணிக்கை செலுத்தகூட சம மரியாதை கிடையாது. தேவர்களுக்கு மழிக்கும் நாவிதன் தலித்துகளுக்கு கோவிலில் வைத்து மழிப்பதில்லை. மழித்தால் தேவரைய்யா வீட்டு அரிவாள் அவனை கிழிக்கும். ஆனால் அதே நாவிதன் சிவகாசியிலோ, ராஜபாளையத்திலோ சலூன் வைத்திருந்தால் அங்கே தலித்துகளுக்கு மழிப்பு உண்டாம். காசு வாங்கி கொண்டு.

ஆண்டவன் முன் அனைவரும் சமமாம்!

எருமைச்சாணி. (Bullshit)

சலூனில்தான் சமத்துவம் போலிருக்கிறது.

9/02/2006 12:28:00 PM  
குமரன் எண்ணம் said…
இந்தியா இந்தியன் என்றெல்லாம் பெருமை பட விடாமல் வெட்கி தலை குனியும் விதமாக இந்த நிகழ்வுகள் உள்ளன. வருத்தம் என்னவெனில் இது போன்ற கொடுமைகள் இருப்பதே அறியாமல் இந்தியா என்னவோ முன்னேறிய நாடு எல்லா வளங்களும் இங்கு இருக்கின்றன, சமத்துவம் நிழவுகிறது என்றெல்லாம் தவறான எண்ணங்களைக் பலர் கொண்டிருப்பதுதான். சுதந்திரம் கிடைத்தும் மக்கள் இன்னும் அடிமையாகவே இருப்பது இந்தியாவில் தான் என்று என்னும் பொழுது நான் இந்தியன் என்பதில் வெட்கம் கொள்கிறேன்.

9/02/2006 02:16:23 PM  
சுல்தான் said…
அற்புதமான பதிவு.
எல்லோரும் இது குறித்து சிந்தித்தால் வழி பிறக்கும்.
தலித் மக்களோடு ஒட்டிப் பழகிப் பார்த்த போதுதான் அவர்களின் வலியை ஓரளவுக்காவது உணர முடிகிறது. அவர்கள் தவறே செய்யாத போது தண்டனையை அனுபவிக்க விடுவது பெரும் பாவம்.

சமீபத்தில் பொதிகையில் கேட்டது.
ஒரு பள்ளியில் சத்துணவு செய்யப்பட்டு சீண்டுவாரில்லாமல் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைகளை சாப்பிட அழைத்தால் ‘அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட மாட்டோம்’ என்று சொல்கிறார்களாம். பிஞ்சிலேயே நஞ்சை வைக்கும் மிகப் பெரும் கொடுமை.

தலித்களை மனிதர்களாக மதிக்கும் பண்பை குழந்தையிலிருந்தே கண்டிப்புடன் ஊட்ட வேண்டும். வந்தே மாதரம் சொல்வதை விடவும் ‘நாமனைவரும் உடன் பிறவா விட்டாலும் சகோதரர்களே’ என்ற உண்மையைச் சொல்லச் சொல்லி நடைமுறைப் படுத்த திட்டம் வகுத்து கற்றுத் தரப்பட வேண்டும்.

9/02/2006 10:50:09 PM  
Dharumi said…
வணக்கத்துடன்,
நீங்கள் சொல்லும் இரட்டை ஒட்டுரிமை பற்றி மேலெழுந்தவாரியாகத்தான் எனக்குத் தெரியும். இன்னும் தெரிந்து கொள்ள ஆவல். சரியான ஆளோ, புத்தகமோ இன்னும் கிடைக்கவில்லை.

(ஒரு திசை திருப்பல்: தெற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு நீங்கள் சொன்னது போல் கிறித்துவ மிஷனிரிகள் காரணம்தான்; ஆனால் மற்ற இடங்களில் அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.)

மீண்டும் -டாபிக் மாத்தாம, தலித் விடுதலைக்கு முதல் படியான, அவர்களின் அதிகார பங்கேற்பை உறுதி செய்யும் வழிகளை பற்றி மட்டும் இங்கே பேசலாமே!

9/03/2006 03:14:14 PM  
பொன்ஸ் said…
//நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
//
நாளுக்கு நாள் சந்தேகமாகத் தான் இருக்கிறது!!

9/03/2006 03:56:46 PM  
Dharumi said…
நெல்லைக் கிறுக்கன்,
//அவங்களும் முடிஞ்ச வர எதித்து போராடிக்கிட்டு தான் இருக்காக. //
அது பற்றாது என்பது என் ஆதங்கம். அதிலும் குறிப்பாக, அவர்கள் ‘சாதிக்குரியதென்று”
அவர்கள் மேல் ஏற்றி வைக்கப்பட்டுள்ள ‘குலத்தொழிலில்’ இருந்து அறவே வெளியேற வேண்டும்.

9/03/2006 04:46:37 PM  
Dharumi said…
என்றேன்றும் அன்புடன் பாலா,
நன்றி

9/03/2006 04:48:48 PM  
Dharumi said…
நாராயணா,
//சலூனில்தான் சமத்துவம் போலிருக்கிறது…//
இல்லை..இல்லை…10 ஆண்டுகளுக்குப் பிறகு ,நேற்றுதான் முடி வெட்டுவதற்காக சலூனுக்குச் சென்றேன் – சலூன்காரர், பேரப்பிள்ளையோடு சென்றபோது மிகவும் கேட்டுக் கொண்டதால் !
தான் எப்படி கேவலமான பேச்சுக்கள் கேட்க வேண்டியதுள்ளது என்றார் – அதுவும் அந்த ஜாதியினரிடமிருந்துதான். பிள்ளைகளை நிச்சயம் இந்த வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்ற அவரது முடிவுக்கு என் சந்தோஷத்தைச் சொல்லிவிட்டு வந்தேன்.

9/03/2006 04:53:17 PM  
Dharumi said…
குமரன்,
இது உங்கள் மயில்தானா? வாசித்ததும் இந்த ஐயம் வந்தது!

9/03/2006 04:55:18 PM  
Dharumi said…
சுல்தான்,
முதல் முறையாக வந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். நன்றி

//தலித் மக்களோடு ஒட்டிப் பழகிப் பார்த்த போதுதான் அவர்களின் வலியை ஓரளவுக்காவது உணர முடிகிறது. ..//
symapthy, empathy – என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. பழகிப் பார்ப்பவர்களுக்கே இப்படியென்றால், அனுபவிப்பவர்களுக்கு – அதுவும் காலங்காலமாய்…

9/03/2006 04:57:48 PM  
Dharumi said…
//நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
//
நாளுக்கு நாள் சந்தேகமாகத் தான் இருக்கிறது!!

ஆம், பொன்ஸ். நமக்கோ சந்தேகம் மட்டும்;அவர்களுக்கோ அது நிச்சயமாகவே இருக்கிறது.

9/03/2006 04:59:18 PM  
தேன் துளி said…
எந்த வித வழிமுறைகளையும் செய்யாமல், வாய்ப்புகளை ஏற்படுத்தவும் செய்யாமல் நீங்களாகவே முன்னேறவேண்டும் என்று சொன்னால், அரசாங்கம் ஒன்று எதற்கு? உங்கள் பழைய பதிவுகளை எல்லாம் இனிமேல்தான் படிக்கவேண்டும்

9/03/2006 07:06:30 PM  
திரு said…
தருமி அய்யா,

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் எதார்த்த நிலையை அப்படியே இந்த பதிவில் பார்க்கிறேன்.

நீங்கள் முதல்வராக, ஆட்சித்தலைவராக இருந்து சொல்லியிருக்கிற தீர்வு திட்டங்கள் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையுள்ளவை. புறக்கணிக்கப்பட்டு அச்ச உணர்வு உருவாக்கி அடக்கப்பட்ட மக்களின் சக்தி ஒருங்கிணைந்தால் தான் விடுதலை பெற முடியும். அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களது சுதந்திரத்தை நிறுவ கூட்டு முயற்சி திட்டங்களே அவசியம். அப்படி ஒரு அமைப்பியல் மாற்றம் வந்தால் தலித் மக்களை புறக்கணிக்கிற தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள், சமூகம் அனைத்தும் மாறவேண்டிய சூழல் உருவாகும்.

தஞ்சை, கும்பகோணம், திருச்சி, மதுரை, நெல்லை, குமரிமாவட்டம் என பரவலாக தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். இது ஏட்டுச்சுரைக்காயல்ல, உண்மை. உங்களுக்கு மாணவர் சொன்னது போன்ற வேறு விதமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது (அதை தனிப்பதிவாக விளக்குகிறேன்).

தலித் மக்கள் ஒன்று சேர்கிறார்கள், போராடுகிறார்கள் இருந்தும் சுதந்திரம் இன்னும் வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் நில உரிமை, வேலை, பொருளாதாரம் என பல காரணங்கள்.

சுதந்திரம் இன்னும் வரவில்லை தான்! அதிகார மையம் பிரித்தானியாவிலிருந்து புதுடில்லிக்கு மாறியிருக்கிறது. யூனியன் ஜாக் கொடியிலிருந்து மூவர்ண கொடிக்கு மாறியிருக்கிறோம்.

டில்லியில இருந்து வந்து சேர தொலைவு தானே அதாங்க காலதாமதமாகுது! :D

9/04/2006 03:39:46 AM  
narayana said…
இந்த பதிவிற்கு பசும்பொன் அவர்களிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்!

9/04/2006 12:01:23 PM  
Dharumi said…
வர வேண்டும் பத்மா..நாட்கள் பலவாகி விட்டன…

9/05/2006 10:33:44 AM  
Dharumi said…
This post has been removed by the author.

9/05/2006 10:43:04 AM  
Dharumi said…
திரு,

//தலித் மக்கள் ஒன்று சேர்கிறார்கள், போராடுகிறார்கள் …//

அப்படியா சொல்கிறீர்கள்?
மற்ற சாதிக்காரர்களையும் விட அவர்கள் பிளவு பட்டு நிற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறதே.
நீங்கள் சொல்வதுபோல், பொருளாதாரம் அதோடு கல்வி, மனத்துள் ஆழப்புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மை…எல்லாமாகச் சேர்ந்து கழுத்தில் கட்டிய கல்லாய், காலுக்கிட்ட விலங்காய் அழுத்துகின்றன.
விடியல் அருகில் தெரிவதாயில்லை என்பதே வருத்தம்.

9/05/2006 10:45:01 AM  
துளசி கோபால் said…
சாதிச் சனியனை ஒழிக்கவே முடியாதா?

எப்படி இப்படிப் பத்திக்கிட்டு எரியுது?

9/05/2006 10:55:58 AM  
குமரன் எண்ணம் said…
நீங்கள் என்னை எந்த குமரன் என்று நினைத்துக் கொண்டு சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை அனேகமாக ஆன்மீக குமரன் என்று என்னை நினைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் அவர் அல்ல. மேலும்
///
குமரன்,
இது உங்கள் மயில்தானா? வாசித்ததும் இந்த ஐயம் வந்தது!
///
என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏன் இப்படி சொன்னீர்கள் என்று முழுமையாக புரியவில்லை. இப்பொழுதெல்லாம் சில காலங்களாக பப்களிலும், டிஸ்கோதேகளிலும் காலத்தைக் களித்து வரும் இளைஞர் இளைஞிகளைக் காணும் பொழுது. இவர்களுக்குத் தான் சுதந்திரம் என்பது முழுமையாக கிடைத்துள்ளதோ என்று தோன்றுகிறது. இவர்களுக்கெல்லாம் இது போன்ற மக்கள் இருக்கிறார்கள் துன்பப்படுகிறார்கள் என்று கூடத் தெரியாது. ஔசுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளில் இன்னும் மக்கள் அடிமை படுத்தப் படுவதைக் கண்டால் இந்தியன் என்று என்னை நானே சொல்லிக் கொள்வதில் சிறுமைப் படுகிறேன்.

9/05/2006 11:15:37 AM  
G.Ragavan said…
மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான். முதற்கண் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதெற்கெல்லாம் நேரமிருப்பதாகத் தெரியவில்லை. அம்மாக இருந்தால் அன்னதானம் செய்வதிலும் ஐயாவாக இருந்தால் கலர்டீவி தானம் செய்வதிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது கேட்டால் அழகு தமிழில் பழகு மொழியில் நாசூக்காக பதில் சொல்வதோடு சரி.

ஓட்டு வங்கியை மட்டுமே குறிவைத்துத்தான் அரசியல்வாதிகள் எல்லாரும் செயல்படுகிறார்கள் என்ற மட்டமான நிலையை ஒத்துக் கொள்வதே பலருக்குக் கசப்பாக இருக்கையில்…இந்தப் பிரச்சனையெல்லாம் ஒரு பிரச்சனையாகவே தெரியாது. வயிறு மட்டும் எரிந்து கொண்டேயிருக்கிறது.

9/05/2006 11:16:16 AM  
திரு said…
//மற்ற சாதிக்காரர்களையும் விட அவர்கள் பிளவு பட்டு நிற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறதே.//

பிளவுபட்டு இருந்தால் தானே மற்றவர்களுக்கு இலாபம். பிளவை உருவாக்குவது மற்றவர்கள் தானே! இது பார்ப்பனீய, சாதி எதிர்ப்பு போரில் வரலாற்று காலம் முதல் நடந்து வருவது தானே! அடக்கப்பட்டவன் தடைகளை தாண்டி ஒன்று சேர்வான். ஒன்று சேர வெறும் கல்வி மட்டுமல்ல நம்பிக்கை தரும் அனுபவங்களும் நிகழ்வுகளும் அவசியம். நம்பிக்கை தானே விடியலை உருவாக்க கொள்கையுடன் போராட வைக்கிறது.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பேருந்திலிருந்து இறங்கி செருப்பை கையில் எடுத்து நடக்க நிற்பந்திக்கபட்டு அச்ச உணர்வில் தள்ளப்படுகிற தலித் மக்கள், அடக்குமுறையை மீறி செருப்பு அணிந்து நடக்க முயன்றால் அதுவே நம்பிக்கையின் முதல் அடி. அடுத்தவை தொடரும்… இந்த முதல் அடி எடுத்து வைப்பதே ஒரு மாபெரும் முயற்சியும் போராட்டமும். மற்ற எல்லா விடயங்களை விட காலங்காலமாக ஊட்டப்பட்ட அச்சமும், தாழ்வு உணர்வும் தலித் மக்கள் விடுதலைக்கு சவாலாக உள்ள காரணிகள். இது ஒரு தலைமுறை இடஒதுகீட்டால் மாறாது. வரலாற்று காலம் முதல் இன்றுவரையான பல போராட்டங்களிலிருந்து நாம் இது பற்றி கற்க நிறைய உள்ளது. மார்பை மறைத்தால் தண்டம் கட்ட வைத்த பார்ப்பனீயத்தை உடைத்து அழகான ஆடைகள் அணியவில்லையா நம் மக்கள்? பார்ப்பனீயமும் அதன் வர்ணாஸ்ரம கொள்கையும் இடஒதுக்கீடு சம்மட்டியால் உடையும், அரசியல் விழிப்புணர்வும் தொடர்ந்த தன்னலமற்ற போராட்டங்களும் விடியலை தரும்.

அரசியல்வாதிகள் பற்றி பேசும் முன்னர் இலக்கியவாதிகளாக, எழுத்தாளர்களாக தங்களை முன்னிறுத்துகிற பலரது சமூகநீதி பார்வையை கேள்வி எழுப்புவது நல்லது.

9/05/2006 04:14:35 PM  
டிசே தமிழன் said…
பல கேள்விகளை எழுப்பும் பதிவு. நன்றி தருமி.
…..
திருவின் கருத்துக்களோடு அதிகம் உடன்படமுடிகின்ற அதேவேளை தலித்துக்களின் இன்னும் தீவிரமாய் ஒன்றுபடமுடியாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். தலித்முரசில் தேர்தல்காலங்களிலும்…. பின்னாலும்… நேரடியாக களத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளை முன்வைத்து நீண்ட கட்டுரை http://www.keetru.com/dalithmurasu/jul06/azhakiya_periyavan.html)
எழுதியுள்ள அழகியபெரியவனும் இதேயேதான் வற்புறுத்துகின்றார் (there should be another link too). ஏனைய சாதிகள் ஒன்றிணைந்ததுமாதிரி ஏன் தலித்துக்கள் ஒன்றுபடமுடியாது (முக்கியமாய் இன்னும் எம்ஜிஆரின் தீவிர இரசிகர்களாய் இருந்து தலித்துக்கள் அதிமுகவை இன்றுவரை கேள்விகள் இல்லாது ஆதரிப்பது உட்பட) இருப்பதற்கான காரணங்கள் குறித்து தலித் அரசியல்வாதிகளும், தலித்துகள் மீது அக்கறை கொண்டவர்களும் அவசியம் யோசிக்கவேண்டும் என்கிறார். அண்ணல் அம்பேத்கார் கூறியதுமாதிரி, அரசியல் அதிகாரங்களை பெறுவதே தலித்துக்களின் விடுதலைக்கான ஒரே மார்க்கமாய் இருக்குமே தவிர வேறென்றும் இப்போதைக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய மார்க்கங்களாய் தென்படவில்லை என்பதே நடைமுறை யதார்த்தம்.
…….
/அரசியல்வாதிகள் பற்றி பேசும் முன்னர் இலக்கியவாதிகளாக, எழுத்தாளர்களாக தங்களை முன்னிறுத்துகிற பலரது சமூகநீதி பார்வையை கேள்வி எழுப்புவது நல்லது./
திரு கூறுகின்ற இந்தப்புள்ளிகுறித்து அவதானம் நம அனைவருக்கும் அவசியமானது என்று நினைக்கின்றேன். முக்கியமாய் அண்மைக்காலமாய் (மீண்டும்) தேவர்களின் ஜாதிவெறியை மறைத்து, ‘வாளெடுக்கும் வீரர்களான’ பல படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஷங்கர் தனது படங்களில் பார்ப்பனர்களின் ‘பெருமிதங்களை” வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல ஏற்றுவதைக் கண்டிக்கவேண்டிய அவசியம் நமக்கிருப்பதுபோல, இவ்வாறு தேவர், கவுண்டர் பெருமைகளைப் பேசும் படங்களையும் கண்டித்து இனங்காண வேண்டும் என்று நினைக்கின்றேன். நன்றி.

9/06/2006 12:36:03 AM  
Dharumi said…
//எப்படி இப்படிப் பத்திக்கிட்டு எரியுது? //
அடிவயிறுதானே, துளசி. இன்னும் எத்தனை காலம்தான் இந்நிலையோ?

9/06/2006 09:20:10 AM  

> <