160. இன்னொரு guinea pig – மதுமிதாவிற்கு.

வலைப்பதிவர் பெயர்: G. Sam George
வலைப்பூ பெயர் : தருமி
சுட்டி(url) : http://dharumi.weblogs.us/

ஆங்கில வலைப் பூ: http://sixth-finger.blogspot.com
புகைப்படங்களுக்கான வலைப்பூ: http://singleclicks.blogspot.com/
ஆயினும் அளிக்கப்படும் தகவல்கள் என் தமிழ்ப்பதிவை அடிப்படையாகக் கொண்டவையே.

ஊர்:  மதுரை
நாடு:  நம் நாடுதான்.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: அது ஒரு விபத்துதான்.(விபத்து எனக்கல்ல!)முதலில் பார்த்தது தேசிகனின் பதிவு. அதன் மூலம் மெரினா கடற்கரைப் பதிவர் கூட்டத்திற்கு ஆஜர். அங்கே கிடைத்த உந்துதல்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24.04.05

இது எத்தனையாவது பதிவு:160

இப்பதிவின் சுட்டி(url):http://dharumi.weblogs.us/2006/05/30/225

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கொஞ்சூண்டு மொழிக் காதல்; இத்தினிக்கூண்டு சமூக அக்கறை; அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, ஓய்வு பெற்றதும் ஏற்பட்ட ‘காலி இடம்’ — இம்மூன்றின் ஒட்டு மொத்தக் கூட்டுதான் பெருங்காரணி.

சந்தித்த அனுபவங்கள்:

சந்தோஷமான அனுபவங்கள்: (சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும்  தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.

வருத்தமான அனுபவங்கள்: படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.

பெற்ற நண்பர்கள்: நிறைய; ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.

கற்றவை: வலைப்பதிவர் உலகம் ஒரு microcosm. வெளியுலகத்தின் சிறு நகல். எல்லாவித மனிதக் குண நலன்களையும் இச் ‘சிறு வெளியில்’ பார்ப்பதே ஒரு தொடர்கல்விதான். முடிவில்லாதது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழுசு.  நினைத்ததை எழுதுகிறேன்.

இனி செய்ய நினைப்பவை: இதுவரை செய்ததையே மேலும் தொடருவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
 முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இங்கே…

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்ப் பதிவுகள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை; இன்னும் தவழும் குழந்தைதான். ஆனால், இது வளர்ந்து சமுதாயத்தின் ‘நான்காவது தூணின்’ முக்கிய ஒரு பகுதியாக உயர்ந்து, சமூகத்தின் ‘thinking tank’ ஆக மாறும் நாள் விரைவில் வர பேராவல்.
நகைச்சுவைப் பதிவுகளும், மற்ற வித light hearted பதிவுகளே அதிகமாக வந்து கொண்டிருந்தாலும், சமூகத்தைப் பிரதிபலித்து – ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் – தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும். பேராசை இல்லையே?

 

if need be: http://i2.tinypic.com/1198htd.jpg

159. நாமும் தமிழும், ஆங்கிலமும்

 ”வசந்தத்தின் முதல் மொட்டுக்கள்”

‘எனக்கு டமில் வராது, சார்’  (  I don’t know Tamil) என்று என்னிடம் கூறிய மாணவர்களின் முகத்தில்,  தொனியில் கவலையோ வெட்கமோ இருந்ததில்லை. ஆனால், ‘நான் தமிழ் மீடியம்,சார்’ என்றவர்களின் முகம் மட்டுமல்ல முழு உடம்பே வெட்கத்தால் கூனிக் குறுகி நிற்கும். இந்த நிலை தலைகீழாக இருந்தால் சரியாக இருக்கும்.  ஆனால் நமக்கு ஆங்கிலம் என்றால் அதில் முழு பாண்டித்தியம் இருக்கவேண்டும்; தமிழ் என்றால் ‘கிடக்குது, போ’ என்ற நினைப்பு. எப்படி வந்தது இந்த மனநிலை? புரியவில்லை!

அவ்வளவு எதற்கு? நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவுகள் வைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் முடிந்தவரை தவறின்றி தட்டச்சி, ஒரு முறைக்குப் பல முறை தவறிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்து அதற்குப் பின்பே பதிவிடுகிறேன். ஆனால், தமிழ்ப் பதிவுகளில் அவ்வளவு மெனக்கெடுவதில்லை. தமிழ் தவறின்றி வந்து விடுகிறதென்றா பொருள்; அப்படியெல்லாம் இல்லை. பின் ஏன் இந்த இரு வேறுபட்ட நிலைப்பாடு?  ஆங்கிலத்தில் தப்பு செய்துவிட்டால் ஏதோ பெரிய தவறு போல நினைக்கும் நான், தமிழில் பதிந்த பிறகு தெரியும் தப்புகளைக் கூட பல சமயங்களில் கண்டு கொள்ளாமல் செல்வதுண்டு. எந்த இலக்கணப் பிழையும் ஆங்கிலத்தில் வந்து விடக்கூடாதே என்ற கவலையும், கவனமும் ஏன் தமிழில் எழுதும்போது வருவதில்லை.

அதோடு நம் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படும் தமிழ் ஒரு தனிவகை. ஒரு சில பதிவர்களைத்தவிர after all, language is just a carrier of ideas என்பதை மற்றவர்கள் அனைவருமே அப்படியே கடைப்பிடிக்கிறோம். சமீபத்தில் துணைவியார் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள்; ஒரு தாளில் ‘எங்க அம்மா நல்லவங்க’ என்று ஒரு சொற்றொடர்; தமிழாக்கப் பகுதி, தவறு என்று x போட்டிருந்தார்கள். என்னடா, இது சரியாகத்தானே இருக்கிறது என்று நினைத்து, கொஞ்சம் அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன்.’ எங்கள் அம்மா நல்லவர்கள்’ என்பதுதானே சரி என்ற பின்தான் எனக்கும் உறைத்தது. காரணம் வேறொன்றுமில்லை. இப்போதெல்லாம் நான் மட்டுமல்ல, பதிவர் பலரும் இப்படித்தான் எழுதுகிறோம்.

நம் மொழியில்தான் இந்தத் தகராறு என்று நினைக்கிறேன். பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மிகுந்து வேறு பட்டு இருக்கின்றன. நிச்சயமாக ஆங்கிலத்தில் இவ்வளவு வேறுபாடு இருப்பதில்லை. I wanna write about it என்று நாம் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல நிச்சயமாக எழுதுவதில்லை. அப்படியே அதிக அமெரிக்கத் தாக்கம் ஏற்பட்டவர்கள்கூட மிஞ்சிப்போனால் It sucks ; howdy..என்று கொஞ்சமே கொஞ்சம் எழுதுகிறார்கள் ஓரோரிடத்தில், எப்போதாவது. அவ்வளவே!

பேச்சுத் தமிழை நல்ல தமிழ் எழுத்துக்காரர்கள் நல்ல தமிழாக அங்கீகரிக்கப்பதில்லை. ஆனால் நாம், பதிவர்களோ அப்படியே எழுதப் பழகிவிட்டோம். எழுதுபவர்களில் என்னைப் போன்ற ‘வயசாளிகள்’ வெகு சிலரே. ஏனையோராகிய நீங்கள் எல்லோரும் 25-35 வயதுக்காரர்களாகத்தான் இருக்கிறீர்கள்.  உங்கள் எழுத்தே எதிர்காலத்தில்  அங்கீகாரம் பெறும் நிலை. அப்படியானால் இதுவே வழக்கில் நிலை நின்று விடுமா? அப்படி நின்று விடின், அது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததா இல்லையா?

பதில் எனக்குத் தெரியவில்லை. (தருமிக்கு கேள்வி கேட்க மட்டும்தானே தெரியவேண்டும்!) உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்!!

மொழிக் கல்வி பற்றி இங்கே கொஞ்சம் அழுதிருக்கிறேன்; வந்து பாருங்களேன்.

 

பிற்சேர்க்கை:

 அடப் பாவி மக்கா!
நான் மட்டும் என்ன தனித்தமிழியக்கத்தின் தனிப் பெரும் தலைவனா என்ன?
நானும் உங்க கட்சிதாம்’ப்பா! பேச்சுத்தமிழ்ல்ல எழுதுறதுதான் சுகமாவும் இருக்கு; நல்லாவும் இருக்கு; ‘டார்கெட்டு’க்கும் போய்ச்சேருது.இல்லைங்கல…இது நல்லதா கெட்டதான்னு ஒரு பட்டிமன்ற சான்ஸ் கொடுத்தேன். என்னப் போட்டு இப்படி புரட்டி எடுத்தா எப்படி?

இளவஞ்சி, (என்(சிவா)புராணம்) சிவா, ஆசீஃப் மீரான் – இந்த மாதிரி ஆளுகளுக்கு அவங்கவங்க வட்டார வழக்கு நல்லா வருது. பொளந்து கட்றாங்க;  நான் என்ன பண்றதுன்னா, பின்னூட்டங்களில இத கொஞ்சம் எடுத்து உட்டுட்டு, பதிவுகளில் கொஞ்சம் அடக்க வாசிக்கிறதுன்னு ஒரு ‘பாலிசி’; அம்புடுதன்..!

இத பின்னூட்டத்தில போடறதா இல்ல, பதிவில போடறதான்னு யோசிச்சு, எதுக்கு வம்பு எல்லாருக்கும் போய்ச்சேரணுமேன்னு ரெண்டுலயும் போட்டுர்ரதுன்னு முடிவு பண்ணியாச்சி…

 

 

Š

158. சின்னத்திரை இயக்குனர்களுக்கு…

 

G.K.Chesterton எழுதிய ‘On reading habit” என்ற கட்டுரை என்று நினைக்கிறேன். வாசிக்கும் பழக்கம் எவ்வளவு நல்லது என்று கூறும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருவன் திடீரென தான் வாசித்துவரும் தொடர்கதையில் கதாநாயகிக்கு அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற நினைப்பு வந்ததும், ‘சரி, அதைப் படித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாமென நினைத்துத் திரும்பிவிடுவான் என்று எழுதுவார். நம்ம ஊரு சின்னத்திரை மெகாசீரியல்கள் எடுக்கும் இயக்குனர்கள் இதே போல எத்தனை எத்தனை தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ, யாருக்குத் தெரியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றியும் அவர்கள் எடுக்கும் சீரியல்கள் பற்றியும் மக்கள் நிறைய பேருக்கு கிண்டலும் கேலியும். நியாயப்படி அவர்களை நம் சமுதாயம் தனிப்பட்ட முறையில் கெளரவிக்க வேண்டும்.

 

இப்போ பாருங்க, நடக்கப்போற தேர்தலில் ஒரு கட்சி நாங்கள் வென்றால் கலர் டிவி தருவதாக வாக்களித்துள்ளார்கள். அது மட்டும் நடக்கட்டும்; எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்து விடும்! இரவுகளில்தான் முக்கிய மெகா சீரியல்கள் நடக்கும். எல்லோரும் சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் இரவு சாப்பாடுபற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? மெகா சீரியல்களில் இப்போதே சகுனம், சாத்திரம், ஜாதகம், தலையெழுத்து போன்ற நல்ல விஷயங்களை கதைகளில் சொல்லுகிறார்கள். இனி அவைகளை இன்னும் கொஞ்சம் ஏற்றிச் சொன்னால் மக்கள் ‘எல்லாம் நம் தலைவிதி’ என்ற தத்துவத்தில் தங்கள் சுக துக்கங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன? இத்துணை நல்ல விஷயங்களை நமது மெகா சீரியல்கள் மூலமாக நடைப்படுத்த நம் சின்னத்திரை இயக்குனர்கள் நிச்சயமாக முனைவார்கள் என்பதில் எனக்கு ஒரு சின்ன எபிசோடு அளவுகூட சந்தேகமேயில்லை!

 

இவ்வளவு நல்லது செய்யும் நம் சீரியல் இயக்குனர்களுக்கு நான் ஒரு சில டிப்ஸ் கொடுக்க நினைக்கிறேன்; சில கேள்விகளும்தான். அதற்கு முந்தி எனக்கு இந்த சீரியல்களில் வரும் நடிக, நடிகையர்கள் பெயரெல்லாம் தெரியாது. ராதிகா, தேவயானி இவர்கள் பெயர்தான் தெரியும். மற்றவர்களைப் பற்றிப் பேச அவர்கள் நடிக்கும் ரோல்களை வைத்துதான் சொல்ல முடியும். அதென்னமோ தெரியவில்லை, நம் சீரியல்களில் வரும் ‘திருமுகங்கள்’ எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றே தெரியவில்லை. நமது இயக்குனர்களுக்குள்ள aesthetic sense அவ்வளவுதானா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. மெட்டிஒலியில் ஒரு பெரிய பெண் பட்டாளம்; அதில் சகோதரிகளாக வந்த நடிகைகள்(முதல் மகள் தவிர) + மாணிக்கத்தின் தங்கை+மாணிக்கத்தின் தம்பியைத் திருமணம் செய்த பெண்+ பின் காதலித்த பெண் – இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம். அதில் பெரிய ஆச்சரியம் அதில் பெரும்பாலோர் புதிய பல சீரியல்களில் வருவதுதான். கொஞ்சம் அழகானபெண்களுக்கு அவ்வளவு பஞ்சமா, என்ன? அல்லது அழகான பெண்ணாக இருந்தால் கொஞ்ச நாளில் தற்கொலை செய்து கொள்கிறார்களா? (சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு நடிகைகள் நன்றாகவும் இருந்தார்கள்; நன்றாகவும் நடித்தார்கள்; பாவம்) சரி, நடிகைகள்தான் இப்படி என்றால் நடிகர்கள் அதைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் – at least எனக்கு அப்படி தோன்றுகிறது. கோலங்களில் வரும் கதாநாயகனும், வில்லனும் – less said better for them. இதிலும்கூட விஜய் ஆதிராஜ் நன்றாகவும் நடித்து, பார்க்கவும் ஸ்மார்ட்தான்; ஆனால் ஆளே காணோம்! லிஸ்ட் போட்டால் நீண்டுகொண்டே போகும். இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது; ஆள் மாற்றினார்கள்; இப்போது பழைய ஆள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இயக்குனர்களே, கொஞ்சம் அழகுணர்ச்சியோடு உங்கள் நடிக, நடிகையர்களைத் தேர்ந்தெடுங்களேன். எங்களை ரொம்பவும் சோதிக்கணுமா, என்ன?

 

என்னடா இவ்வளவு சீரியல்களை இந்த மனுஷன் பாத்துக்கிட்டு இருக்கானேன்னு தோணுமே. அதற்கும் நம் இயக்குனர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது. (அப்படி ஒன்று இருந்தால்தானே!) வெறும் சம்பவங்களின் தோரணங்களாகவே இருப்பதால் கதை எப்போதும் புரியும். இந்த அளவு திறமையோடு நம் இயக்குனர்கள் ‘கதை’களை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். இப்படியே இருங்க.

 

இன்னொண்ணு இந்த சகுனம், சோதிடம் என்று அந்த நம்பிக்கைகளை வளர்க்கிறது மாதிரி கதையைக் கொண்டு போகாதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்; அதனால் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், இந்த காட்சி அமைப்புகளில் வழக்கமாக வரும் ஒரு விஷயம்: ஒரே காமிராவை வைத்து படம் எடுப்பதலா இல்லை குறைந்த செலவில் எடுக்க முற்படுவதாலா எதனால் என்று தெரியவில்லை – உங்கள் சீரியல்களில் வரும் கேரக்டர்களில் ஒரு சீனில் மூன்று பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பேசும் நபர் காமிராவைப் பார்த்துதான் பேசுகிறார்; அதாவது, ஆடியன்ஸைப் பார்த்து. பழைய நாடகங்களில் நடிக்கும்போது ஒரு பொது விதி சொல்வார்கள். ஸ்டேஜில் நடிகர்கள் தவறியும் ஆடியன்ஸுக்கு – - – க் காட்டக் கூடாது என்று.(முதுகைத்தான் சொன்னேன்!) அந்த ட்ராமா விதியை அப்படியே நமது சின்னத்திரை இயக்குனர்கள் கடைப்பிடிப்பது நல்ல வேடிக்கை. முக்கால்வாசி நேரங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவதைவிடவும், ஆடியன்ஸைப் பார்த்துக்கொண்டு, மற்ற கதாபாத்திரங்களுக்கு – - – க் காட்டிக்கொண்டு பேசுகிறார்கள். நல்ல வேடிக்கையாக இருக்கிறது. இன்னொன்று கதாபாத்திரங்கள் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நானும் வீட்டில் ஓரிரு முறை அதே மாதிரி முயற்சித்தேன்; மனைவி, மக்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது ஆடியன்ஸுக்குப் புரிய வைக்க இப்படி ‘நோட்ஸ்’ போடுகிறார்கள்; ஆனாலும் ஆடியன்ஸ் அவ்வளவு மோசமா?

 

எது எப்படியோ, நீங்கள் உங்கள் வழியில், உங்கள் ரசனையில் கொண்டுபோய்க்கொண்டிருங்கள்; எங்கள் தலைவிதி உங்களைத் திட்டிக் கொண்டேகூட நாங்கள் உங்கள் சீரியல்களைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.

157. தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்

   

நம் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப்பொருத்தவரை அது நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள்தான். அவர்கள் நம் தமிழ்க் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து, காப்பாற்றுவது போல் வேறு யாருமே செய்ய முடியுமா என்ன?

நம் பழைய தமிழ்ப் படங்களில் ராஜா ராணி படமென்றால் குதிரையில், சமூகப் படமென்றால் ஒரு ஃபியட் காரில் கதாநாயகர் வருவார். குதிரைக்கோ, காருக்கோ தண்ணீர் தாகம் எடுக்கும். உடனே அங்கே ஒரு நீர் நிலை. தண்ணீர் எடுக்கப் போவார்.கதாநாயகி குடத்தோடு வந்து அங்கே மிகச்சரியாக ‘பொத்’தென்று விழுவார். நம்ம தலை ‘படாரென’த் தூக்குவார். இனி ‘தொட்ட’ பாவம் அவரை விடாது. ‘என்னைத் தொட்டுத் தூக்கியவரே இனி என் நாதர்’ என்று நாதி சொல்லிவிடுவார். அனேகமாக இதை அடுத்து ஒரு one-night stand இருக்கும்; நாதியும் கர்ப்பமாகி விடுவார். அதெல்லாம் விடுங்க..தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ அந்தக் கற்புக்கரசிகளின் வாயிலாக நம் இயக்குனர்கள் நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பை எப்படிக் காப்பாற்றி விட்டார்கள், பாருங்கள்!

நாதா, நாதி stage போய், ‘மாமா’ stage, அடுத்து அத்தான் stage வந்தது. அதிலும் இந்தக் கற்புக் கதைதான் தொடர்ந்தது. chain snapping என்பதற்குப் பயந்து தாலியை வீட்டில் பத்திரமாய் கழற்றிவிட்டு, பதிலாக ஒரு பித்தளைச் சங்கிலியைத் தாலிமாதிரி போட்டுக் கொள்வதோ, வெயிலுக்கும் இல்லை சாதாரணமாகவே கூட வீட்டில் தாலியைக் கழற்றி வைப்பதோ இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாய் ஆகிவிட்டது. அதில் ஏதும் தவறு இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. ஆனால் நம் இயக்குனர்களுக்கோ இன்னும் அந்த தாலி செண்டிமெண்ட்  எக்கச்சக்கமா ஒர்க் அவுட் ஆகுது. தாலியை அறுத்துவிடுவது போல் வில்லன் பக்கத்தில் வந்தாலே அதே நேரத்தில் தாலி கட்டியவன் உயிரே போய்விடுவது போல நம் கதாநாயகிகள் போராடுவார்கள். அதைவிட, (சின்னத்தம்பியில்) ஒரு வயதான கைம்பெண் – அவரின் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றினாலே ஏதோ அமிலம் ஊற்றினது மாதிரியும், குங்குமத்தை நெற்றியில் இட்டாலே என்னவோ ஆனது மாதிரியோ, ஆகிவிட்டது மாதிரியோ நம் இயக்குனர்கள் செண்டிமெண்டை உருக்கி ஓடவிட்டு விடுவார்கள். தாலியை வீட்டில் கழற்றிவிட்டு திரையரங்கிற்கு வந்திருக்கும் நம் தமிழ்க் குலப் பெண்களும் பதைபதைத்து விடுவார்கள் என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மாங்கா புளிச்சுதோ, வாய் புளிச்சுதோன்னு இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம்.
ஆகவே கொஞ்சம் தனித் தனிப் படங்களைப் பார்க்கலாமா?

பெளர்ணமி அலைகள்: நல்ல படம். இளம் விதவை (அம்பிகா)வும், வீட்டுக்கு வாடகைக்கு வந்த எழுத்தாளனும் (சிவகுமார்) நன்கு பழக, அம்பிகாவின் மாமனார் தன் மருமகள் மறு திருமணம் செய்துகொண்டால் நல்லது என்று நினைக்க, மாமியார் அதைத் தவறு என்று கணவனிடம் வாதாடுவார். விதவைத் திருமணத்தைப் பற்றிய சமூகத்தின் இரு நிலைப்பாடுகள் அந்த இரு பாத்திரங்கள் மூலமாய் அழகாய் விவாதிக்கப்படும். மாமனாரின் கருத்து வெல்கிறது. இதுவரை படம் பார்க்கும் அனைவருக்குமே மறு மணம் என்பது ஆதரிக்கப் பட வேண்டிய ஒன்று என்ற மனநிலையை வெற்றிகரமாக நிறுவிய இயக்குனருக்கு (யாரென்று மறந்து போய் விட்டது) அதற்குப் பிறகு நம் சாபக்கேடான filmy compromises நினைவுக்கு வந்து அச்சுறுத்த, அதனால் கதாநாயகன் குங்குமம் வைத்ததும் தன்  நெற்றியில் நெருப்பினால் சுட்டுக்குகொண்டு பாவப்பரிகாரம் செய்து கொள்வதாக முடித்து விடுவார். மறுமணம் செய்து கொண்டால் என்ன ஆகும் நம் தமிழ்ப் பண்பாடு என்று நினைத்திருப்பார் அந்த இயக்குனர்.

இதற்கு விமர்சனம் எழுதிய குமுதம் தன் ‘புத்திசாலித்தனத்தை’ நன்கு காண்பித்திருந்தது. பெளர்ணமியன்று கடலில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பது போல் அவ்விதவைப் பெண்ணின் வாழ்க்கையிலும் சில உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்ற பொருளில் இயக்குனர் அழகாக வைத்த பெயர் என்பது புரியாமல், இந்தப் படத்துக்கும் பெளர்ணமி அலைகளுக்கும் என்ன தொடர்போ என்று தன் விமர்சனத்திற்கு முட்டாள்தனமாக முத்தாய்ப்பு வைத்திருந்தது.

அந்த ஏழு நாட்கள்: இயக்குனர் பாக்யராஜ். கல்யாணமான உடனேயே கணவனுக்கு (ராஜேஷ்) தன் மனைவி (அம்பிகா) ஏற்கெனவே காதலித்த கதை தெரிய, காதலனையும் (பாக்யராஜ்) தேடிப்பிடித்து அவனிடம் ஒப்படைக்கும்போது காதலன் தாலியைக் காட்டி..blah…blah…

இதில் வேதனை என்னவென்றல் பாக்யராஜ் இப்படத்தின் கிளைமேக்ஸாக இரு முடிவுகள் – ஒன்று தாலி செண்டிமெண்ட்; இன்னொன்று காதலனோடு சேர்ப்பது – வைத்திருந்தாராம். முடிவெடுக்க தன் இயக்குனர் பாரதிராஜா, சீனியர் இயக்குனர் பாலச்சந்தர் இருவரையும் அழைத்து ப்ரிவியூ காண்பித்து இரண்டில் எதை வைக்கலாம் என்று கேட்டு, தாலி செண்டிமெண்ட்தான் என்று மூவருமாகத் தீர்மானித்தார்களாம். இதே டைரக்டர்கள்தான் ‘மனசுல ஒருத்தன சுமந்துகிட்டு இன்னொருத்தனோடு எப்படி வாழ்றது’ன்னு பக்கம் பக்கமா வசனம் எழுதவும் செய்வாங்க… கேட்டா இப்படி படம் எடுத்தாதான் படம் ஓடும் அப்டின்னு ஒரு தியரி…நம்ம ஆளுக சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ படத்துக்கு  சுப முடிவைத் தமிழ் நாட்டுக்கும், சோக முடிவை கேரளாவிற்கும் வைத்து ஒரே படத்துக்கு இரண்டு க்ளைமேக்ஸுகள் செய்தவர்கள்தானே!

புதுப் புது அர்த்தங்கள்: இயக்குனர் திலகம் பாலச்சந்தரின் படம். இரண்டு ஜோடிகள். தத்தம் துணைகளால் அல்லல் பட்டு கதாநாயகனும் (ரகுமான்), கதாநாயகியும் தற்செயலாகச் சந்தித்து தங்கள் கதைகளைப் பகிர்ந்து, தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொண்டு திருமணத்திற்குத் தயாராகும் நிலைக்கு வருகிறார்கள். இங்கு நம் தமிழ்ப் பண்பாடு குறுக்கே வந்து விழுந்து விடுகிறது. பைத்தியமாகிவிட்ட தன் மனைவியிடம் கதாநாயகனும், காலிழந்த கணவனை – அந்தக் கொடுமைக்காரக் கணவன் மனம்கூட திருந்தவில்லை; காலை மட்டும்தான் இழக்கிறான் – கண்டதும் ஓடிப்போய் தாங்கிக்கொள்கிறாள் நம் தமிழ்க்குலப் பெண். இவர்கள் மீண்டும் சேருவதற்கு எந்த நல்ல காரணங்களும் சொல்லப் படுவதில்லை. இதில் பெரிய சோகம் அந்தப் படத்திற்கு வைத்த தலைப்பு. எந்தவித சமூக பொறுப்பும் அற்ற ஒரு கதை – பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்; கல்லானாலும் கணவன்..blah…blah… என்பதையே கட்டுறுத்தும் இந்தக் கதைக்கு எப்படி இந்தத் தலைப்பு பொருந்துகிறதோ எனக்குத் தெரியவில்லை.

இப்படியாகப் பல படங்கள்; ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள். சமூகம் என்னவோ தன் போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் இன்னும் தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் (!?) கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இயக்குனர்கள். இந்த நேரத்தில் ஒரு வார்த்தை; நம்மில் பலருக்குமே இந்த ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற வார்த்தையில் ஒரு மயக்கம் உண்டு. அது ஏதோ உண்மை என்று நம்மை நினைக்க வைத்த பெருமை நம் தமிழ்ப் பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், முக்கியமாக நமது சினிமாக்காரர்களுக்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்யை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. உலகம் முழுவதும் இருக்கிற பண்பாடுதான் நம்ம ஊர்லயும். இங்க மட்டும் ஒழுக்கக் குன்றுகளாக மனிதர்கள் இருப்பது போலவும் மற்ற மக்கள் எல்லோரும் மாக்களாக உலாத்துவது போலவும் ஒரு பிரம்மை. இங்கே ஒருவன் ஒருத்தி என்றிருந்திருந்தால் சிலப்பதிகாரம் வந்திருக்காது; பிறன்மனை விழையாமை என்ற வள்ளுவ அதிகாரம் வந்திருக்காது. நாமும் மற்றவர்கள் போலவே நல்லதும் கெட்டதும் கலந்த குணக்காரர்கள்தான். நாம் ஒன்றும் ஸ்பெஷல் ஐட்டம் இல்லை.