156. சிவாஜி –> கமல் –> ???

சிவாஜி நல்ல நடிகர்தானா என்று கேள்வி கேட்போரும் உண்டு. அந்தக் கேள்வியிலும் நியாயம் உண்டு. நாம் நல்ல நடிப்பு என்று கருதும் விஷயங்களின் அளவுகோல்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை வைத்துதான். ஹாலிவுட்டில் பல நடிகர்களின் நடிப்பு சிறந்ததாகக் கருதப்பட்டாலும் மார்லன் ப்ராண்டோ தனக்கெனத் தனியிடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. அவரது On the water front என்ற படத்தை மும்முறை பார்த்திருக்கிறேன். நாம் வழக்கமாகச் சொல்லுவோமே -’அவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கவில்லை; அந்த்ப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்’ என்று, அதேபோல்தான் அந்தப் படத்தில் மார்லன் ப்ராண்டோ அந்தக் கதா பாத்திரமாகவே மாறியிருப்பார். எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும்.  அதேபோல் Godfather படத்தில் சிறிதே மாறுபட்ட மேக்கப்புடன், அவர் வழக்கமாக உதடுகள்கூட அசையாமல் பேசுவாரே அந்தப் பேச்சும், நடிப்பும் அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் என்றும் பேசப்படும்.  இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னொரு நடிகர் Antony Quinn. அவர் நடித்த Hunchback of NotreDame, La Strada மனதை விட்டு அகலாத, அவரது  நடிப்புதிறனை வெளிக்கொணர்ந்த படங்கள். அதிலும் Umar Muktar என்ற படம் அச்சு அசலாக நமது கட்டபொம்மன் படம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும் – சுதந்திரத்திற்காக ஆள வந்த அயல்நாட்டுக்காரர்களை எதிர்த்த இரு புரட்சியாளர்களின் கதை. ஆக்கப்பட்டிருந்த விதங்களில் அவைகள் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன.  இந்த ஆங்கிலப்படங்களில் அந்த நடிகர்களைக் காணும்போது இது போல் சிவாஜியால் எளிதாக நடித்திருக்க முடியும்; ஆனால் அவரை அவ்வாறு நாம் நடிக்க விடவில்லை என்ற உண்மைதான் மனதில் தைக்கிறது. அவருக்கும் சினிமாவைப் பற்றிய ஒரு பறவைப் பார்வை இல்லை. அதுவும் சினிமாவைப் பற்றிய உலகளாவிய ஒரு பார்வையோ, அது பற்றிய ஞானமோ சுத்தமாக இல்லவே இல்லை. நமது கைதட்டல்களும், விசில்களும் அவரை நாம் ஏற்றி வைத்த பீடத்திலிருந்து அவர் இறங்கி வந்து ஏற்கெனவே நன்கு வளர்ந்திருந்த மற்ற நாட்டுப் படங்களின் போக்கைப் பற்றிய உய்த்துணர்தல் ஏதும் இன்றி அவரை ஒரு ‘தனிக்காட்டு ராஜா’வாக முழுமையாக ஆக்கி விட்டது.  இப்போது அவரைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் He had all tha potential; but Tamil film world did not utislise his talents fully’ என்ற cliche -வைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்படியாகி விட்டது. அவராகவே முடிவெடுத்தோ அல்லது அந்தப் பட டைரக்டர் பந்துலு (?) சொன்னதின் பேரிலோ கப்பலோட்டிய தமிழன் படத்தில் ‘அடக்கி வாசித்திருந்தார்’. ஆனால், அந்தப் படம் வெளியான போதோ பெரும் தோல்வியைச் சந்தித்தது. Our taste buds never relish newer and even better tastes ! at least சினிமாவைப் பொறுத்தவரையாவது. கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதை யாரும் கேள்வி கேட்பதேயில்லை. காரணம் கமல் தன்னை ஒரு விஷயம் தெரிந்த நடிகனாக ஆக்கிக் கொண்டுள்ளார். உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம். ஆயினும் தமிழ் சினிமா உலகத்துக்கே உரித்தான பல்வீனம் அவரையும் பாதித்துள்ளது. பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். அவரது ‘தளபதி’ படத்திற்கான அந்தக் கதைக்கு அவர் யாருக்கும் royalty தராமலேயே ஒரு நல்ல கதையைப் பெற்று, அதை நல்ல திரைக்கதையாக்கி ஒரு வெற்றிப் படம் அளித்தார்!  மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ. தாங்களே கதாசிரியர்களாக மாறி, தாங்களே திரைக்கதை, வசனம்…இப்படி பல பொறுப்புகளையும் தங்கள் தலைகளில் ஏற்றிக்கொண்டு நம் டைரக்டர்கள் ‘சுமை தூக்கும் கழுதை’களாக மாறி விடுகின்றனர். (பாரதி ராஜா இதில் கொஞ்சம் விதி விலக்கு)கமலுக்கு இந்த ஆசை கொஞ்சம் அதிகம். படத்தில் தன் முழு ஆளுமை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அவரே பல விஷயங்களிலும் தலையிட்டு, நடிகன் என்ற தனிப் பொறுப்புக்கு செலவிட வேண்டிய தன் சக்தியை வீணடிக்கிறார். அவரது சிந்தனை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து புதுப் புது விஷயங்களைக் கதைக்களன்களாக மாற்றும் கதாசிரியர்கள் இல்லை. அதற்காக அவரே மற்ற மொழிப்படங்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு நம் ரசனை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் என்பதற்கேற்ப அவைகளை மாற்றும் ரசாயன வித்தைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இத்துணை வசதிக்குறைகளோடும், அவர் இன்னொரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதுள்ளது. அது ஏற்கெனவே சொன்னது போல, ‘எங்கள் ரசனைகளை மாற்றிக் கொள்ளவே மாட்டோம்’ என்ற கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமுதாயம்! இங்கே கதாநாயகன் படங்களில் தனியொருவனாக நின்று பெரும்படையையே எதிர் கொண்டு அழித்தாலும், தரையிலிருந்து எம்பி எத்தனை அடி குதித்தாலும், எவ்வளவு முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் பரவாயில்லை; ஒரு ‘பஞ்ச் டயலாக்’ சொல்லணும்; கடைசியில எல்லாம் நல்ல படியா முடியணும் அவ்வளவுதான். சகிக்க முடியாத முக லாவண்யம் இருந்தாலும், அந்த நடிகனோ நடிகையோ ரெண்டு படத்தில் வெற்றிகண்டால் போதும் அவர்களுக்குப் பின்னே கூட்டம் போட்டு விசிலடிக்கத் தயார். இந்த ஃபார்முலாக்களில் இருந்து நம் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சமும் மாறுவதாயில்லை. எனவே இங்கு புத்திசாலித்தனமும் திறமையும் மதிக்கப்படுவதில்லை; அதிர்ஷ்டமும், வியாபார லாபமும்தான் நமது அளவுகோல்கள். இந்த சூழலிலும் தனித்து நிற்கும் கமலைப் பாராட்டவேண்டும்.

முன்பேகூட ஒரு பதிவில் கேட்டிருந்தேன் – ஏன் நமது தமிழ்நாட்டில் இரண்டாந்தரங்கள் எப்போதும் சுத்த அக்மார்க் முதல் தரங்களாக மக்களால் போற்றப்படுகின்றன என்று.  சிவாஜி – எம்.ஜி.ஆர்.;  கமல் – ரஜினி என்ற தொடரில் இன்று மக்கள் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நல்ல சில நடிகர்களைப் புறந்தள்ளி முன்னணி நடிகராக இருப்பது நம் வழக்கமான ஃபார்முலாப் படிதான். stereotyped cast, புதிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிடவும் எடுக்கவே மாட்டேன் என்று கூறுவதும் அவரின் தனித் தன்மை. இப்போது உள்ள  இளம் நடிகர்களில் நல்ல நடிகர் யார் என்ற கேள்விக்கு எத்தகைய தயக்கமின்றி நான் சொல்லும் பதில் – சூர்யா. முதலில் வந்த சில படங்களில் கொஞ்சம் பாவமாகவே இருந்தது – அவரது தந்தை சிவகுமாரை உயர்ந்த மனிதன் படத்தில் பார்த்தது போல. அதன் பிறகு நல்ல பிரமிப்பு
தரும் வளர்ச்சி. முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. சடை வளர்த்து அதற்கு மேல் ஒரு போலீஸ் தொப்பியை வைத்துக் கொண்டு அந்தப் பதவியை ஒரு mockery செய்த நடிகர்களே அதிகம். ஆனாலும் அந்தப் படத்தின் நடிப்பு இயக்குனரின் ‘அடக்கு முறையால்’கூட வந்திருக்கலாம். ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான். இறுதி சீன், கதையமைப்பு, charectersation – இவைகளே அந்தக் கடைசி சீனில் விக்ரமையும் அந்த சீனில் அவர் நடிப்பையும் நம் மனதில் நிலை நிறுத்தியது. தண்ணி அடிச்சிட்டி ‘அப்டியா?’ன்னு கேக்குற இடமெல்லாம் தமிழ்ப் படத்துக்கு ரொம்பவே புதுசு. சூர்யாவின் நடிப்பு பட்த்துக்குப் படம் மெருகேறி வருவது கண்கூடு. இதுவே அவரை நம் தமிழ்த் திரை உலகத்தின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

155. HAIL ‘THE HINDU’ !

THE HINDU பேப்பரை இன்னைக்கிக் காலையில் பார்த்ததும் அப்படி ஓர் அதிர்ச்சி; சந்தோஷமும் கூட. எப்படியாவது நாலு பேத்துக்காவது அதைப் பற்றிச் சொல்லிடணும்னு ஒரே ‘இது’! அதனாலதான் இந்த ‘இது’.

வழக்கம்போல முதல் பக்கத்தை மேஞ்சிட்டு, ஸ்போர்ட்ஸ் பக்கம் போனா ஆச்சரியம்னா அப்படி ஒரு ஆச்சரியம். வழக்கமா 20,21-ம் பக்கங்களில் கிரிக்கெட்டின் தனி ஆவர்த்தனம்தான் இருக்கும். கிரிக்கெட் செய்தி இல்லாவிட்டாலும், டெண்டுல்கர் வீட்டு நாயின் வலது காலின் இடது பக்கத்தில் உள்ள முதல் விரலின் கடைசி எலும்பு பிசகியுள்ளதற்காக எடுக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகள் பற்றியாவது இருக்கும்.

இன்றைக்கு அங்கங்கே கொஞ்சம் கிரிக்கெட் செய்தி இருந்தாலும் முக்கிய செய்திகளாகக் கால்பந்து பற்றிய செய்திகள் முதலிடம் பெற்றிருந்தன. என்ன ஆச்சு, ஹிண்டுவுக்கு?  உலகக் கோப்பைக்காக இருக்குமோவென்று நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை. உலகக் கோப்பை என்றால் நம் திருநாட்டைப் பொருத்தவரை 8-10 நாடுகள் (அதில் 3-4 உப்புக்குச் சப்பாணி நாடுகள்!) சேர்ந்து, சட்டைகூட நனையாத விளையாட்டு ஒன்று விளையாடுவார்களே, அதானே உலகக் கோப்பை பந்தயம். என்னன்னே புரியலை. அதைவிடவும் தெண்டுல்கரின் பிறந்த நாள் விழா புகைப்படம் 19-பக்கம் வந்திருந்தது. அது எப்படி முதல் பக்கத்தில் வரவில்லையென்ற ஆச்சரியத்தில் மூழ்கியவன் இந்த நேரம் வரை (மாலை 4.23) எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

யாராவது கைதூக்கி உடுங்கப்பா, please!

 

 

வால் செய்தி: நேற்று இரவு சன் செய்திகள் 8 – 8.30 பார்த்தேன். விளையாட்டுச் செய்திகள் என்ற பகுதி வந்தது. டெண்டுல்கர் பிறந்த நாள் கேக் தானே வெட்டி (பக்கத்தில் யாருமே இல்லை ?!) தானே சாப்பிட்டதைக் காட்டி அதையே செய்தியாகச் சொல்லி முடித்தது.
அதுதான் கொள்கைப் பிடிப்பு என்பது!!

154. பிள்ளையாரும் பால் குடித்தார்…

 

 

அது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்னு தெரியலை; ஆனா எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஊரென்ன உலகமே ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு. லண்டன் பிள்ளையார் கோவிலில் குடம் குடமா பிள்ளையார் குடிக்கிறதுக்காகப் பால்  ஊத்தினதைப் படமாக எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள்.
அன்றைக்கு நடந்தது இன்னும் நல்லா நினைவில் இருக்கு. வீட்டுக்கு வெளியே நான் என் குடும்பத்தாரோடு நின்று கொண்டிருந்தேன் – ஏதோ தெருவும் ஊரும் வித்தியாசமான கல கலப்போடு இருந்தது மாதிரி இருந்ததால். அப்போது எதிர்த்த வீட்டுப் பையன் – ஒன்பதாவது படிக்கிறவன் – அவன் அம்மாவோடும், அக்காமார்களோடும் விரைந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். வேகமாக எங்களிடம் வந்து ‘பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்’ என்றான். சரியாக விஷயம் புரிபடாமல் ‘என்னப்பா? ‘ என்று கேட்டேன். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்; பார்க்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். பிள்ளையாராவது, பால் குடிக்கிறதாவது என்று சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். ஆனாலும் தெருவில் சல சலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் – நாங்கள்தான் கிறிஸ்துவர்கள் ஆயிற்றே – வேற சாமி பால் குடிச்சி அதிசயம் பண்ணுதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

கொஞ்ச நேரம் ஆச்சு; அடுத்த தெருவுக்குப் போன எதிர் வீட்டு பையன் ஓடிவந்து ‘நிஜமா அந்த வீட்டுல இருக்கிற பிள்ளையார் பால் குடிச்சார்’ அப்டின்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான். அப்பவும் நான் கண்டுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் ஓடிவந்த பையன் பரவசத்தோடு, ‘எங்க வீட்டுப் பிள்ளையாரும் குடிக்கிறார்; அப்பா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க’ அப்டின்னான். சரி, பிள்ளையாரத்தான் போய் பார்த்துட்டு வந்துருவோமேன்னு போனேன். அங்கே ஏற்கெனவே பிள்ளையார் பால் குடிச்சிருந்தார். பையனோட அப்பா, நம்ம நண்பர் ராமச்சந்திரன் ஒரு தட்டில் இருந்த பிள்ளையார் முன்னால் அமரிக்கையாக  உட்கார்ந்து பால் குடுக்க, நல்ல பிள்ளையாக பிள்ளையார் கொடுத்த பால் முழுவதையும் குடித்துக்கொண்டிருந்தார்.  ஒரு ஸ்பூனில் பாலைக் கொண்டு போய், அவரது தும்பிக்கை வயிற்றிற்கு மேல் வளைந்து இருக்கும் இடத்தில் வைத்ததும், பிள்ளையார் பாலை சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சார் பாருங்க…அப்படியே நான் அசந்துட்டேன். என்னடா இது கலிகாலமா போச்சேன்னு நின்னுக்கிட்டு இருந்த போது நண்பர் என்னிடம் ஸ்பூனை நீட்டினார். நானும் பாலை ஸ்பூனில் கொடுக்க பிள்ளையார் அதே மாதிரி சர்ருன்னு உறிஞ்சிட்டார். வெலவெலத்துப் போய்ட்டேன்.

இருந்தாலும் புத்தி கேட்கலை. வேற வேற இடத்தில வச்சுப் பார்த்தேன். சில இடத்தில பால் உறிஞ்சப்பட்டது; சில இடத்தில் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய, நான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைச் சுவற்றில் இணைப்பதற்காக உள்ள கீலில் இருந்த சின்ன இடைவெளியில் ஸ்பூனை வைத்தேன்.இப்போவும் பால் சர்ரென்று உறிஞ்சப்பட்டது. நண்பர் ஐயப்பர் பக்தர். அந்த சிலை ஒன்று சிறியது இருந்தது. ஐயப்பனையும் பால் குடிக்க வைத்தேன். நண்பர் குடும்பத்தினருக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. பிள்ளையார் மட்டுமல்லாமல், ஐயப்பன் குடிச்சாகூட பரவாயில்லை; கதவின் கீல் கூட குடிக்குதேன்னு ஆச்சரியம். ‘எப்படி அங்கிள்’ என்ற பையனிடம் ‘தெரியலைப்பா; ஏதோ இயற்பியல் விஷயம் இருக்கு; ஒருவேளை capillary action ஆக இருக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். (பின்னால் அது surface tension என்று சொன்னார்கள்.)

எங்கள் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் என்னாயிற்று என்று கேட்டார்கள். ‘கொஞ்சம் பாலும் ஒரு ஸ்பூனும் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த மேரி மாதா சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மாதாவின் கால் பக்கம் உள்ள வரை ஒன்றிலும், கூப்பிய கைகளுக்கு அருகிலும்  ஸ்பூனை வைத்ததும் மாதாவும் பால் குடித்தார்கள்! பிள்ளைகளிடமும் கதவுக் கீல் பால் குடிப்பதையும் காண்பித்தேன்.

அடுத்த நாள் கல்லூரியிலும் பரபரப்பு. கிறித்துவ நண்பர் அகஸ்டின் நம்பிக்கையில்லாமல் ‘அதெப்படி பிள்ளையார் பால் குடிப்பார்; சுத்த ‘இதுவா’ இருக்கேன்னார். நான் ‘என் கண்ணால் பார்த்தேன்’ என்றேன். அதெப்படி என்றார். நடந்ததைச் சொன்னேன். இயற்பியல் துறை ஆட்களிடமும் கேட்டேன். அவர்களும் என் தியரி சரியாக இருக்கலாமென்று சொன்னார்கள்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். பிள்ளையார் கதை எல்லாம் ஆறின கேஸாக ஆகிப் போயிருந்தது. அப்போது ஒரு நாள் நண்பர் அகஸ்டின் ஒரு ஃபோட்டோ காப்பி ஒன்றுடன் என்னிடம் விரைந்து வந்தார். எத்தியோப்பாவில் அமெரிக்க சிப்பாய் ஒருவன் sand storm ஒன்றைப் படம் எடுத்து அதைப் பிரிண்ட் செய்து பார்த்த போது அந்த சூறாவளியில் ஏசுவின் முகம் தெரிந்ததாக ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் வந்திருந்த படத்தின் நகல் அது. பயங்கர பிரமிப்புடன் அதை என்னிடம் கொண்டு வந்து அதைக் காண்பித்தார் – ஒரு மத நம்பிக்கையற்றவனை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் நோக்கமாக அது எனக்குத் தோன்றியது!

‘ஏனய்யா, ஒரு வருஷத்துக்கு முன்பு வேற மதத்து சாமி பால் குடிக்கிதுன்னு சொன்னப்போ, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதெப்படி நடக்கும் என்று அன்று கேள்வி கேட்க முடிந்தவருக்கு, இன்று நீங்கள் நம்பும் மதம் என்றால் மட்டும் எப்படி அப்படியே நம்ப முடிகிறது?’ என்றேன். அதோடு, இதே மாதிரியாக கொடைக்கானல் மலை,மேகம் இவைகளின் ஊடே கண்ணாடி போட்ட மாணவன் ஒருவனின் முகம் தெரிவது போல விளையாட்டாக நான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்றையும் காண்பித்தேன். உண்மையை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாத அரைகுறை மனதோடு சென்றார்.

இதைத்தான் நான் எனது மதங்கள் பற்றிய பதிவுகளில் நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity – யோடு பார்க்க முடிவதில்லை என்றும் முதல் பதிவின் முதல் பாயிண்டாகவே கூறியுள்ளேன். அதை இங்கே பாருங்கள்.என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்; பிறந்ததிலிருந்து ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து மனதை விடுவிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமல்லவே! Every coin has got two sides  என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. அவர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்…

Š

153. இது ஒரு (1/4) மீள்பதிவு

வேற ஒண்ணுமில்லை.. பதிய ஆரம்பித்த சின்னாளில் பலநாள் கனவாக நான் ஆங்கிலத்தில் எழுதின ஒன்றை (அது எந்த category-ல் வரும்; கதையய, கட்டுரையா, fantasy-யா என்று தெரியவில்லை!) பதிவிட்டிருந்தேன். இரண்டு பேர் பார்த்திருப்பார்கள் கட்டாயம் – குழலியும், என் மாணவன் அவ்வையும். (இரண்டே பின்னூட்டம்-அதனாலேயே இந்தக் கண்டுபிடிப்பு).
ஏனோ இன்று இட்லிவடையின் பதிவினையும் (49.5%), அதற்கான எதிர்வினையாக குழலியின் பதிவும்  என்னை அப்பதிவை மீண்டும் வாசிக்க வைத்தது. அப்போது அந்த ‘இரண்டாம் நாளை’ மட்டுமாவது மீண்டும் பதித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் ஒரு எச்சரிக்கை: முதல் நாள் படிக்காவிட்டால் இரண்டாம் நாள் புரியாமல் போகலாம். ஆகவே முதல் நாள் விஷயத்திற்கு அங்கே போகவும்…
The second day begins.

Reservation policy remains with the following conditions: First generation candidates get the full extent of the advantages of the existing reservation policy. Second generation gets only one third of the benefits. Children from financially sound families – identified from their respective security numbers fall under common pool. On the other hand children form poor families irrespective of their castes get the ‘one third benefits’.  The minority ‘rights’ are to be replaced by minority ‘protection’.

152. சோதிடம் – 13…முடிவுரை

முந்திய பதிவுகள்: 1*,2*, 3*, 4*, 5*, 6*, 7*, 8*, 9*, 10*, 11*, 12*.

 

 

இந்த சோதிடப் பதிவுகள் அனுமார் வால் மாதிரி நீண்டு போச்சு.  ஆனாலும் ஜாதகம் பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே சிலரின் மாற்றுக்கருத்து பார்க்க முடிந்தது. வாஸ்து,  எண்கணிதம் என்று பலர் முனைப்போடு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சாதகம் மட்டுமே மக்கள் மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்பதையே இது காண்பிப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சொன்னது போல வயதானவர்கள் தங்கள் மேல் நம்பிக்கையிழந்து, சுற்றி நிற்கும் பிரச்சனைகளால் மனம் கலங்கி ஏதாவது ஒரு கொழு கொம்பு கிடைக்காதா என்ற சோகச்சூழலில் இந்த “விஞ்ஞானங்களைத்” தேடிச் செல்வதையாவது ‘அய்யோ பாவம்’ என்ற முறையில் விட்டுவிடலாம். வாழ்வின் இளமைக்காலத்தில் ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில்’ இளைஞர்கள் எவ்வளவு மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும்; அதை விட்டு விட்டு பெயரை மாத்தினால் நல்ல வேலை கிடைக்குமா, மோதிரத்தில் கல்லை மாட்டிக் கொண்டால் எதிர்காலம் வெளிச்சமாகுமா என்று இந்த ‘விஞ்ஞானிகள்’ பின்னால் செல்வது சரியான ஒரு வயித்தெரிச்சல் சமாச்சாரமாக எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றிய பதிவுகளில் நான் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன் – உண்மையாகவே அவைகளுக்குப் பதில் தெரியாத காரணத்தாலயே அவைகளைக் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லாததால் இன்னும் என் பழைய நிலையிலேயேதான் இருக்கிறேன்.

இப்பதிவுகளை எழுதக்காரணமே நம் இளைஞர்களில் பலருக்கும் வாஸ்து, எண் கணிதம், பெயர் மாற்றம் போன்ற பலவற்றில் புதிதாக ஏற்பட்டுள்ள ஈர்ப்பே காரணம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விஷயங்கள் மேல் மக்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு, ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பார்த்த பிறகே அதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து,  இப்பதிவுகளை எழுதலானேன்.

வழக்கமாகவே சோதிடத்தில் நல்லது ஏதாவது சொன்னால் அதை அப்படியே யாரும் நம்புவதில்லை – people take it with a pinch of salt. ஆனால் அதுவே கெட்டது நடக்கும் என்றால் மனம் பேதலித்து நிற்பது என்பது சாதாரணமாகப் பார்க்கும் ஒரு விஷயம்தான். கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம் தன்னம்பிக்கையை பாழடிக்கும் என்று தெரிந்தும் அதில் வீழ்வது புத்திசாலித்தனமாகாது.

அடுத்து கடைசியாக சாதகத்திற்கு வருவோம். இதைப்பற்றிய பதிவுகளுக்குத்தான் நம்பிக்கையாளர்கள் சிலர் பதிலளிக்க வந்தனர். நன்றி அவர்களுக்கு. நம்பிக்கையாளர்கள் வழக்கமாகச் சொல்லும் ஒரு விஷயம்: சாதகம் ஒரு கணக்கு; ஆனால் சிலரே அதை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர்கள். அந்தக் கணக்கு தெரியாதவர்கள் கணிக்கும்போது ஏற்படும் தவறுகளை வைத்து சாதகமே தவறு என்று சொல்வது தவறு என்பது அவர்களின் ஒரு விவாதம். இவ்விவாதத்திற்கு தொப்புளான் சொன்னதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி அதற்குரிய பதிலாகத் தருகிறேன்: கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

அடுத்து, இந்த சாதக அமைப்புகள் நம் “தலைவிதி” என்றே கொள்வோம். அப்படியாயின் அது கடவுள் கொடுத்த ஒன்றாயின் பின் எதற்கு அந்த அமைப்புகளில் காணும் ‘தோஷங்களுக்கு’ப் பரிகாரங்கள்? கடவுளுக்குக் கையூட்டு கொடுத்து, கிரஹங்களின் ‘தாக்கத்தை’ மாற்றுவதா இது?  இந்தப் பரிகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது, சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சம்மட்டி சொன்னதை மீண்டும் நினைவு கூர்வது நன்றாயிருக்கும்:

“தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !. ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணிதாங்களே நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.”

இன்னொரு காரியம்: சாதகம் கணிக்க குழந்தை ‘ஜனித்த’ சரியான நேரம் தெரியவேண்டும் என்பதில் ‘சரியான நேரம் எதுவென்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகளையும் முன் பதிவில் பார்க்கலாம். கருச்சிதைவுக்கு எதிராகக் கருத்து சொல்லும் கிறித்துவ, இஸ்லாம் (மற்ற மதக்கோட்பாடுகள் பற்றி தெரியவில்லை) மதங்களிலும் தாயின் கரு சூல் (fertilization) ஆன உடனேயே அங்கே ஓர் உயிர்  தோன்றி விட்டதாகவே கருதுகின்றன. அப்படியாயின் நான் ஞானவெட்டியானிடம் கேட்ட கேள்வி:
-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் – ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் – திருக்கணிதத்தையும் சேர்த்தே – எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

நறுக்கென்று ஞானவெட்டியான் இதற்குத் தந்த பதில்:

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

ஞானவெட்டியான் மேலும் சொன்னது:

எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

தருமியின் கடைசிக் கேள்வி: மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு? இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் – அதனால் உங்களையுமே – நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?

பின்குறிப்பு:

ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்  – இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி – last but one para – வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…

 

இதைப் பற்றி இங்கேயும்…

Š

151. இதுதாண்டா காங்கிரஸ்…!

 

அது என்ன ராசியோ, என்ன மாயமோ தெரியலை..அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ‘நெஹ்ரு குடும்ப-அடிமை சிண்ட்ரோம்’ என்ற வியாதி. நம்ம தமிழ் நாட்டுக் காங்கிரஸுக்கு ரெண்டு வியாதி – எப்பவுமே. முதலாவது: தில்லிக்கு எப்பவுமே சலாம்; இரண்டாவது: இங்கே எப்பவும் கோஷ்டி அரசியல்.

 

இதில நம்ம மக்கள் பலருக்கு -காமராஜரையும் கக்கனையும் மட்டும் மனசில வச்சிக்கிட்டு, இப்போ 40 வருஷமா திராவிடக் கட்சி, அதிலேயும் கருணாநிதி வந்ததாலதான் தமிழ்நாடு கெட்டு சீரழிஞ்சு போச்சு; காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தா தேனும் பாலும் ஓடும் என்று ஒரு அசைக்க முடியாத hypothesis.

150. சோதிடம்…12. ஜாதகம்

முந்திய பதிவுகள்: 1*, 2*, 3*. 4*, 5*, 6*, 7*, 8*, 9*, 10*, 11*.  

 

கைரேகை, ராசிக்கல், வாஸ்து, எண்கணிதம் – என்று நான் இதுவரை எழுதி வந்த போது எதிர்க் கேள்விகளோ, பதில்களோ இல்லாமல் என்னோடு இணைந்த ஒத்தக் கருத்துக்களே அதிகம் வந்துள்ளன.
இதிலிருந்து என் முடிவு என்னவெனில்:
(1) நம் பதிவாளர்கள் அதிகம் பேர் என்னோடு இந்த விஷயங்களில் ஒத்தக் கருத்து கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
(2) நம் பதிவாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே நல்ல கல்வியறிவும், வளர்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களது கருத்துக்களும் தெளிவாகவே இருக்கும் என்பதால் நான் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை; எல்லோருக்கும் தெரிந்த, உடன்பாடான விஷயங்களையே சொல்லி வந்துள்ளேன் என்ற முடிவுக்கே வந்துள்ளேன்.

ஆயினும் இனி சொல்லப் போகும் ஜாதக விஷயம் அதுபோல் பலரின் ஆமோதிப்பைப் பெறுமா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றுதான்….ஏனெனில், நம்பிக்கையிருக்கிறதோ இல்லையோ பலருக்கு ஜாதகம் பார்ப்பது என்பது சமூகத்தாலோ, குடும்பத்தாலோ ஒரு கட்டாயப் படுத்தப்படும், தொன்று தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதை மீறுவதோ, ஒதுக்கித்தள்ளுவதோ பலரால் இயலாத காரியம். பலி ஆடுகள் மாதிரியாவது தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் காரியமாக பலருக்கும் அமைந்து விடுகின்றது. அதற்காக நான் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விடுவதா, என்ன?

*  ஜாதகம் என்றதுமே அது ஒரு விஞ்ஞானம், ஒரு கணக்கு என்பவர்களுக்கென்றே பல கேள்விகளை வைத்தாயிற்று. இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல / கேட்க விழைகிறேன். ஒரே ஜாதகத்திற்கு ஆளுக்கேற்றாற்போல் பதில்கள் / பலன்கள் வருமெனில், இதை எப்படி விஞ்ஞானம் / கணக்கு என்ற தலைப்புக்குள் கொள்வது?

*  எனக்குத் தெரிந்த வரை ஜாதகம் “கணிக்கப்படும்” போது நவக்கிரஹங்களின் இருப்பிடம் அந்த ஜாதகக்காரரை எப்படியெல்லாம் “ஆட்டி’ வைக்கும் என்பது தெளிவாகக் கணக்கிடப்படுகிறது. இதில், அடிப்படையாக இரு கேள்விகள்:
         1.  ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது? இந்த ராது, கேது விவகாரம் வேறு தனியாக இருக்கிறது. பக்கத்தில் இருப்பதால் அதன் பலனும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒருவேளை நம்பிக்கையாளர்கள் சொன்னால், ஜாதகக் கணிப்பில் அதுவும் ஒரு கோளாகவே கருதப்படுவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு அடிப்படைத் தவறாகக் கருதுகிறேன்.

        2.  ஒன்பது கோள்கள்; அதில் சந்திரன் ஒரு கோள் அல்ல – இந்த கேள்வி எழும்போதே இப்போது 10வது கோளைக் கண்டுபிடித்து, பெயரும் வைத்தாகி விட்ட பின்பும் (2003 UB313, the 10th planet – இன்னும் பாப்புலர் பெயர் வைக்கவில்லை.) இன்னும் நவக்கிரகங்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வீடு, ஒன்றோடு ஒன்று சேர்ந்து பலன் அளிப்பது என்றால், இந்த 10-வது கோளுக்கு ஜாதகக் கணிப்பில் இடம் உண்டா, இல்லையா? ஒரு வேளை சந்திரன் அருகில் இருப்பதால் அதை எடுத்துக்கொண்டது போல, இந்த புதுக்கோள் விலகி இருப்பதால் அதை விட்டு விட்டதாகக் கூறலாமோ? ஒருவேளை அப்படிச் சொன்னால் இந்த தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

*  ஜாதகக் கணிப்பில் இந்தக் கோள்களின் இடத்தைப் பற்றியும், அவைகளின் movements பற்றியும் கூட தெளிவாகவெல்லாம் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்களே என்று ஒரு விவாதம் உண்டு. அது astronomy -லிருந்து astrology ‘லவட்டிக்கிட்ட’ விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.

*  மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.  ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம்.  நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!! :-)

ஆனாலும் எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரியும். நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை கைவிடுவது என்பது எளிதல்ல. எத்தனை கேள்விகளை அவர்கள் முன் வையுங்கள். ஒன்று ஏதோ மனசுக்கு வந்த ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்வார்கள்; இல்லை, ச்சீ..இதெல்லாம் விதண்டாவாதம் என்று புறந்தள்ளி தன் போக்கில் போவார்கள். கொஞ்சமாவது இந்தக் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா என்று பார்ப்போமே என்ற மனநிலை யாரொருவருக்காவது வந்தால் சந்தோஷமே – வராது என்று தெரிந்திருந்தாலும், ஒரு அற்ப ஆசை. என் சந்தேகங்கள் சில நம்பிக்கையாளர்களுக்குக் கூட சந்தேகம் ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் கூட தாங்கள் இதுவரை நம்பி வந்ததைவிட்டு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள் – question of prestige? அப்படி ஒருவேளை யாருக்காவது பதில் இருந்தால் கூறட்டுமே என்றுதான் இந்தக் ‘கடை பரத்துதல்’! கொள்வார் கொள்ளட்டும் !!  நல்லவேளை, மதங்களைப் போல் கேள்வி கேட்பதே தப்பு என்று யாரும் இதற்குக் கூற மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என்ன செய்வது: தருமி, கேள்விகள் கேட்பதின்று வேறொன்றும் அறியான், வலைஞர்களே !!!
Š

149.கேளிர், ஒரு சொல் கேளீர்..

இப்பதிவின் நோக்கம் நம் வலைஞர்களுள் ஒருவரான  பிரேமலதா  நல்லதொரு முயற்சி ஒன்று மேற்கொண்டுள்ளார். அதனை இப்பதிவின் மூலம் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதே.

NDTV-ல் வெளிவந்த சேதி ஒன்று மதுரையில் ஏழைப் பெண்களுக்காக நடத்தப்படும் விடுதி ஒன்றில் கடைப்பிடிக்கப்படும் வேதனையான ஒரு பழக்கம் பற்றியது. அதனை இங்கே பாருங்களேன்.

 

ட்

 

 இந்த வழக்கத்தை மாற்றி அப்பெண்களின் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிடும் அந்த விடுதியாளர்களின் போக்கை மாற்ற ‘ஏதாவது’ செய்ய வேண்டும் என்று பிரேமலதா சொன்ன போது, எனக்கும் பலரைப்போல் ‘நாம் மாற்ற வேண்டிய காரியங்கள் – இதைவிடவும் பெரிய, மோசமான காரியங்கள் – நிறைய இருக்கும்போது இது என்ன ஒரு பெரிய விஷயமா?’ என்றுதான் தோன்றியது. ஆனால் பிரேமலதா அதற்காகவே கொடுத்துள்ள ஒரு பதில் எனக்கு மிகவும் பிடித்ததால் நானும் என்னாலானதைச் செய்ய, அவர்களோடு சேர நினைத்தேன். அந்த பதில்கள் இதோ:

1) Less serious issue means less complications for us.
2) not politicised
3) we can have a small but focussed objective. for example: improving the facilities, i.e. building few more toilets for the girls.
4) as it is a “small” objective, there is a possibility of us seeing it happening in real sense. “small” means less “money” needed. So, there is a possibility of “making this happen” in real sense.

Premalatha continues:
We are also planning to collect some fund ourselves. It might be a fund raising event. Nothing is finalised yet. Your suggestions are welcome.

இம்முயற்சிக்கு அவர்களின் முதல் கோரிக்கை – spread the word.

அவர்களின் தனி முகவரி:  http://premalatha_balan@yahoo.co.uk

அவர்களின் ப்ளாக் முகவரி: http://premalathakombai.blogspot.com
அவர்தம் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Š

Premalatha is gathering signatures for a petition and is trying to find a way of helping to build toilets for the girls. Please sign on.