147. சோதிடம்..11 -எண் கணிதம்

முந்திய பதிவுகள்:1*, 2*, 3*. 4*, 5*, 6*, 7*, 8*, 9*, 10*.

 


உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆனானப்பட்ட நம்ம ஐயன் திருவள்ளுவரே எண் கணித சோதிடம் பற்றிச் சொல்லியிருக்காராமே தெரியுமா?  அவர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”னு சொல்லிட்டு போனாலும் போனார்; நம்ம ஆளுங்க அவரையே quote பண்ணிட்டாங்க…’பாத்தீங்களா, நம்ம ஐயன் திருவள்ளுவரே எங்க numerology பற்றிச் சொல்லியிருக்காராக்கும்’ அப்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… பாவம்’பா…விட்டுருங்க.. உங்களுக்கு சப்போர்ட் வேணும்னா அதுக்காக இப்படியா?

எல்லா மட்டத்திலேயும் இந்த ‘வியாதி’ பரவியிருச்சு; பகுத்தறிவாளர்களாகட்டும், கை நாட்டுகளாக இருக்கட்டும். என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்டின்கிற நினப்பு போல. வை.கோபால்சாமி வைகோ ஆயிடரார்; அவ்வளவு எதுக்கு, எல்லா விஷயத்திலும் முற்போக்காளராக இருக்கும் கமல ஹாசன் ஏன் பெயரை மாத்திக்கிட்டாரென தெரியவில்லை.(இந்திக்காரர்களுக்குப் பரிச்சயமான பெயர் அது என்று சொன்னதாக நினைவு. சரியோ, தவறோ தெரியாது.) எனக்குக் கூட ஒருத்தர் பெயரை நான் மாத்திக்கிட்டா பெரிய ஆளா வந்திருவேன்னு சொன்னார்; அதுவும் sam அப்டிங்கிற பெயரை sham என்று மாத்திக்கச் சொன்னார். சாமி, sam அப்டிங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (பேராவது அழகா இருக்கட்டுமேன்னு அப்பா பெரிய மனசு பண்ணி வச்சிருக்காரு.). அதோட,  sham- அப்டிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா, என்னக் கேவலப்படுத்துறதின்னே முடிவெடுத்திட்டியான்னு கேட்டு விரட்டவேண்டியதாப் போச்சு!
சில சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்க ஆவல்.
 1. பெயரை மாற்றுவதால் என்ன நடக்கிறது? (vibration அது இதுன்னு சொல்றாங்களோ?)
 1. அந்த மாதிரி பெயரை மாற்றுவதால் (eg. sam -> sham  :-(   ) என்ன ஆகிறது?
 3. என் பெயரை மாற்றினாலாவது உச்சரிக்கப்படும் சத்தம் வேறுபடும். Murugan என்பதை Murugun என்று மாற்றுவதாக வைத்துக்கொண்டால், பழையபடி முருகன் என்றுதானே அந்த நபர் அழைக்கப்படுவார். பிறகு ஒலிமாற்றம் எப்படி ஏற்படும்? ஒலிமாற்றம் இல்லாவிட்டால் எழுத்துக்களை -spelling-யை மாற்றுவதால் என்ன பயன்?
 4. முருகன் என்ற சாமியின் பெயரால் அழைக்கப்பட் வேண்டுமென்று பெயர் வைக்கப்பட்டு, பிறகு Murugun என்று அழைக்கப்பட்டால், அந்த முருகனின் மேலேயும் நம்பிக்கையில்லை; அவரையே ‘(ஏ)மாற்றி’ விடுகிறோம் என்று பொருளில்லையா?
 5. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் மதிப்புகொடுத்தது எப்படி? (யாரோ ஒரு பிரான்ஸ் நாட்டு ‘மேதாவி’ கொடுத்ததாக ஒரு நண்பனும், இல்லை..இல்லை நம்ம சித்தர் ஒருத்தரு கொடுத்தார் என்று இன்னொருவனும் சொன்னார்கள்; எனக்குத் தெரியாது. ) யார் கொடுத்திருந்தாலும் ஏன் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படியானால் இந்த numerology-ன் மூலம் இங்கிலாந்தா?
 6. உச்சரிப்பைப் பொருத்தே vibration  இருக்கும். vibration-யைப் பொருத்து பலன்கள் இருக்கும் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியா உச்சரிக்கிறோம். என் பெயரே என்னென்ன பாடு படும் என்று எனக்குத்தான் தெரியும்! sam, sham, shiam, john, சாம், சாமி, – தொலைபேசியில் என் பெயரைச் சொல்லி அடுத்த முனையில் இருப்பவரைப் புரிய வைக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்!
 7. ஆங்கிலமே தெரியாதவருக்கும், ஆங்கிலமே தெரியாத நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி சார்ந்த எண்கணிதம் எப்படி சரியாக இருக்கும்?
 8. ஆங்கில முறையில் பெயரின் எழுத்துக்களை மாற்றினாலும் தமிழில் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கப்பட்டால் அதனால் என்ன வித்தியாசம் வரும்? பலன் என்ன மாறும்? சான்றாக, நம்ம முதல் அமைச்சர் தன் பெயரை ஆங்கிலத்தில் jeyalalithaa என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால், jeyalalithaa என்று ஆங்கிலத்தில் சொல்வது போலவேதான் jeyalalitha என்ற பெயரையும் உச்சரிக்க முடியும். அப்படியானால் என்ன vibration changes வந்துவிடும்? பெயர் உச்சரிக்கப்படுவது ஒன்றாகவே இருப்பின், எதற்கு இந்த மாற்றம்?(இது 3-வது பாயிண்ட் மாதிரியே இருக்குல்ல? எட்டு என்றாலே இப்படித்தாங்க… இது எப்படி இருக்கு?)
 9. எண்களுக்கு சில கணித மதிப்பு இதன் அடிப்படை விஷயம். இந்த கணித மதிப்புக்கு என்ன அடிப்படை? யார், எதற்காக, எப்படி, ஏன் இந்த மதிப்புகளை இந்த எழுத்துக்களுக்கு - ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே - கொடுத்தார்கள்?
10. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்கூட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து முடிச்சு போட்டு விடலாம். ஆனால் இந்த பிறந்த தேதிக்கும், பெயரின் கூட்டல் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

  இன்னும் நிறைய கேள்விகள் இருக்கலாம்; தெரிந்தவர்கள் கேள்விகள் கேட்டு கேள்விகளின் எண்களைக்கூட்டினால், அந்தக் கூட்டுத்தொகை மாறுமல்லவா? அந்த மாற்றங்களுக்குத் தனிப் பலன்கள் உண்டு. அவைகளை நமது நிலைய ஜோதிடர் உங்களுக்கு ஒரு தாயத்துடனும், ஒரு தகடும் வைத்து அனுப்புவார். தாயத்தை அணிந்து கொண்டு, தகட்டை வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் புதைத்து வைத்தாலோ எல்லா அஷ்டதேவிகளும் உங்களைத்தேடி ஓடி வருவார்கள். வேண்டுவோர் இதை வாசித்த 9 நாட்களுக்குள் ரூபாய் 236.34 (பாத்தீங்களா- கூட்டுத்தொகை 9 வருதா…?) அனுப்பவும். தபால் செலவு தனி. வழக்கமாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு 18% தள்ளுபடி உண்டு.

146. சோதிடம்..10: – வாஸ்து

  சோதிடம் தொடர்: முந்திய பதிவுகள் – 1*, 2*, 3*. 4*,
5*, 6*, 7*, 8*, 9*.

“வாஸ்து பார்த்துதான் கட்டியிருப்பாங்களோ……..?”
 

 கேட்டா கடந்த 5000 வருஷமா இது நம்மகிட்ட இருக்கு அப்டிங்கிறாங்க. ஆனா இப்ப பத்து பதினைந்து வருஷமாதான் ரொம்ப அடிபடுது. எது எப்படியோ? இதையும் விஞ்ஞானம் அப்படிங்கிறாங்க. ஏற்கெனவே விஞ்ஞானம் என்றால் என்ன என்று முன் பதிவுகளில் சொல்லியாயிற்று. ஒரு கேள்விக்கு ஒரு பதில் இருந்தாதான் அது விஞ்ஞானம். ‘தமிழ்நாட்டு வாஸ்துஅறிஞரும்’ ‘மலையாள வாஸ்து அறிஞரும்’ ஆளுக்கொண்ணு சொன்னா அது எப்படி விஞ்ஞானமாகும். ‘ரெண்டு வாத்தியாரிட்ட மூணு கேள்வி கேட்டா நாலு பதில் வரும்’ என்று ஜோக்கடிப்பாங்க. ரெண்டு வாஸ்து ஆளுககிட்ட ஒரே ஒரு கேள்வி கேளுங்க. எத்தனை பதில் வருமோ. அதெல்லாமே …. உங்க பண வச்தி, மன நிலை (அதாவது, எந்த அளவு நீங்க போவீங்க அப்டிங்கிறது பொறுத்து.), வாஸ்துக்காரருக்கும் உங்க வீடு கட்டுறவருக்கும் உள்ள தொடர்பு, வாஸ்துக்கரரின் பணத்தேவை, – இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்தது.

 

நண்பன் ஒருவன் வேலையில் செய்த – தெரிந்தே செய்த – தப்புக்காகத் தண்டிக்கப்பட்டு, வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தான். வீட்டில் சும்மா இருக்கலாமா? ஒரு வாஸ்துக்காரர் வந்து வீட்டைத் தலைகீழாக மாற்றச்சொன்னார். மாற்றியதும் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில். அதில் பெரிய மாற்றம் – வங்கிக் கணக்கு! ரொம்ப மெலிஞ்சு போச்சுது. ஆனாலும் ஆசை யாரை விட்டது. அடுத்து வந்தவர் தமிழ்நாட்டின் தலைவிதியையே நிர்ணயிப்பவரின் ஆஸ்தான வாஸ்துகாரராம். அவருக்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து, தடபுடலாக வீட்டுக்கு வரவழைத்து, பின் அவர் சொல்லிச்சென்ற மாற்றங்களைச் செய்ததும் வாழ்க்கையில் இன்னும் பெரிய முன்னேற்றம்: இப்போ வங்கிக்கணக்கு சுத்தமா தொடச்சாச்சு. வேற வழியில்லாம வீட்டை வித்துட்டுப் போயிட்டான். அதன் பிறகு சமூகத்தில அஞ்சு வருஷத்துக்கொரு முறை நடக்கும் மாற்றங்களால் மறுபடியும் பழைய நிலைக்கு வந்ததும், கொஞ்ச நாளில் புதுவீடு கட்டினான்; அதற்கும் வாஸ்து கட்டாயம் பார்த்திருப்பான். சூதாட்டத்தில ‘விட்டத பிடிக்கிறது மாதிரிதான்’!

 

வாஸ்து என்ற பெயரில் படுக்கை அறை கிழக்குத் திசையில் இருக்கவேண்டும். அது சரி; மாலை வெயில் விழுவதால் மேற்குப் பக்கம் உள்ள அறை இரவும்கூட உஷ்ணமாயிருக்கும். வாஸ்து என்ற பெயர் இதுக்குத் தேவையில்லை. common sense போதும். ஆனால், அடுப்பு கிழக்குத் திசை பார்த்து இருக்கணும்னு என்ன அவசியம்? அப்போதான் அடுப்பு எரியுமா? அதுகூட பரவாயில்லை; ஒரு அறை 10 x16க்கு இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ( எனக்கு இந்த அளவுகள் எல்லாம் தெரியாது; ஒரு உதாரணத்துக்குத்தான்!) அதை 11 x 16 அல்லது 10 x17 வைத்தால் என்ன ஆகும்? இதில் என்ன விஞ்ஞானக் கணக்கு? இவ்வளவு cubic meter-க்கு இவ்வளவு ஐஸ்வர்யம் வரும்னு ஏதாவது கணக்கா என்ன?

 

இன்னொரு மெத்தப் படித்த நண்பன் வீட்டில் வாஸ்துபடி, படுக்கை அறை ஏதோ ஒரு திசையில் சில inches மட்டுமே உயரமாக இருக்கும்படி தரையை மாற்றினான். வீட்டைக் கழுவினால் தண்ணீர் வடிவதற்கு வேண்டுமானால் இது பயனுள்ளதாயிருக்கும்; வேறென்ன பயன் என்று கேட்ட போது, ‘இதுக்கே சண்டைக்கு வர்ரீங்களே; வாஸ்துக்காரர் அந்த அறையில் மட்டும் elelctric switch-களை மட்டும் மாற்றி வைக்கச்(american style?) சொல்லி, அப்படியே வைத்துள்ளேன்’ என்றான்! swithces மாத்திறது கூட அந்தக் காலத்துல சொன்னவங்க சொல்லிட்டு போயிட்டாங்களா, என்ன?

 

ஒவ்வொரு விஞ்ஞானத்திற்கென்றே அடிப்படையான நிலைப்பாடுகள் ( facts) இருக்கும்; அதன் மேல் கருத்துக்கள் (hypotheses) எழுப்பப்பட்டு, அவைகளை நிரூபணம் செய்யவேண்டி ஆராய்ச்சிகள் (research / experiments) செய்து, நிரூபணங்களிண் மேல் (evidences) புதிய நிலைப்பாடுகள் (facts) எழும். இந்த நிலைப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும், யாராலும், எங்கேயும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவைகளுக்கு ஒரே மாதிரியான முடிவுகளே (results) வரவேண்டும்; வந்தால்தான் அது ஒரு விஞ்ஞானம். இப்படியே படிப்படியாகவே விஞ்ஞானம் வளரும்.

 

அப்படி ஏதுமின்றி -

- பலர் சத்தமாகக் கூறுவதாலேயோ,

- ஆண்டாண்டு காலமாய் நம்மிடம் இருந்துவரும் ஒரு விஷயம் என்பதாலேயோ,

- சொன்னவர்கள், சொல்பவர்கள் எல்லாருமே அறிவில்லாதவர்களா என்று கேட்பதாலேயோ,

- பலரும் நம்பிக்கை வைத்திருப்பதாலேயோ -

? இதை எப்படி விஞ்ஞானம் என்று சொல்வது?

சொல்பவர்கள் அதை ஏதேனும் ஒரு வகையிலாவதாவது நிரூபிக்க வேண்டாமா? அல்லது, இதுவும் கடவுள் நம்பிக்கை போல் – this is something personal; one has to ‘feel’ it and believe it….. – அப்டிங்கிறதுதான் பதிலா?

 

எனக்குள்ள கேள்விகள்:

* வாஸ்து பலன்களின் அடிப்படை என்ன?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்? எங்கே? எப்போது? ஏன்?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்?  – கடவுளா, மனிதனா?

* வாஸ்து பலன்கள் நிரூபிக்கப் பட்டுள்ளனவா? நிரூபிக்க முடியுமா?

* நம் நாட்டில் மட்டுமே (சைனாவிலும் உள்ளது; அது வேறு வகையானது என்ற பதிலைத்தவிர..) வாஸ்து பார்த்துக் கட்டுவது ஏன்?

இன்னும் பல ஏஏஏஏஏஏஏஏஏஏன்கள்??????????

 

நம்பிக்கையாளர்களே, இது என் நம்பிக்கை; கடவுள் நம்பிக்கை மாதிரியேதான் இதுவும் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போங்கள். உங்கள் காசு…உங்கள் வீடு…உங்கள் சந்தோஷம்…உங்கள் திருப்தி. அதை சொல்ல நான் யார்?

ஆனால், அது விஞ்ஞானம் என்று சொன்னால் கொஞ்சம் புரிந்துகொள்ள உதவுங்கள்… PLEASE!

145. இரட்டை எச்சரிக்கை:

இதனால் நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ஒன்றல்ல இரண்டு எச்சரிக்கைகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்:

தமிழில் எழுதிக் ‘குவிப்பது’ பற்றாது என்பதுபோல் இப்போது தருமிக்கு ஆங்கிலத்திலும் எழுதிக் குவிக்க ஆசை வந்தால் அது உங்கள் தலைவிதி; தருமியை என்ன சொல்ல முடியும், பாவம்.

ஏற்கெனவே முதலில் ஆங்கில இடுகை ஒன்று ஆரம்பித்து, அதன் பிறகு தமிழ்மண ‘ஜோதி’யில் கலந்ததும் ஆங்கில இடுகை மறந்தே போச்சு; இப்போ ப்ளாக் தேசம் வந்திருச்சா, பழைய நினப்புடா பேராண்டின்னு ஆயிப்போச்சு. defunct ஆகிப்போன அந்த ப்ளாக்கில் இருந்த விஷயங்களை வைத்து மீண்டும் உங்களை தொல்லைப்படுத்த புதுசா ஆங்கிலத்தில ஆரம்பிச்சிட்டேன்ல… எல்லாம் உங்கள நம்பிதான்… ‘உங்கள் பொன்னான ஆதரவை நம்பி’ அப்டின்னு timely வேண்டுகோளோடு -ஆறாவது விரல் / sixth finger – என்ற தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன்; கண்டுக்குங்க…அதில உள்ள tagline-ல சொல்லியிருக்கிறது மாதிரி என் சந்தோஷங்களையும், வயித்தெரிச்சல்களையும் உங்களோட பகிர்ந்து கொள்றதா ஒரு திட்டம்.

சில நல்ல மனுஷங்க (ஒண்ணிரண்டு பேரு மட்டும்தான்; மற்றவங்க யாரும் கண்டுக்கிட்டதே இல்லை என்றாலும்..) என் தமிழ் இடுகையின் ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு படம் என்று போட்டு வந்ததற்கு கொஞ்சம் பாராட்டி விட்டார்கள். அது போதாதா நமக்கு.. உடனே புகைப்படங்களுக்கென்றே இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு… ஆசை யாரை விட்டது, சொல்லுங்க.  முடிஞ்சவரை இரண்டு ப்ளாக்குகளிலும் படங்கள் repeat ஆகாமப் பாத்துக்கிறேன். ( ஏற்கெனவே இந்த தீர்மானத்தை மீறியாச்சு!) அப்பப்போ அங்கயும் வந்து பாருங்க.

144.எப்படி இருந்த நான்… !

தல புராணம் …7

                                                      

 எனது பழைய பதிவொன்றில் மதுரையின் பழம் பெருமை வாய்ந்த ஒரு கட்டிடத்தினைப் பற்றி எழுதியிருந்தேன். எழுதி இரண்டு மூன்று மாதங்களில் அந்த இடத்தைத் தாண்டி செல்லும்போது பார்த்தது ஒரு கணம் திடுக்கிட வைத்தது. ‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ அப்டின்னு சோகமா சொன்னது மாதிரி இருந்தது. . அந்தக் காலத்துப் பெருமையெல்லாம் போய் -  சிலரின் அந்திக் காலத்தில் உடம்பெல்லாம் வற்றிப் போய், துருத்திக்கொண்டிருக்கும் முன்பற்களோடு பரிதாபமாகத் தோற்றமளிப்பார்களே அது மாதிரி – முன்னால் இருந்த அந்த முகப்பு -facade – மட்டும் இடிக்கப்படாமல், அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் உள்வெற்றிடம் வெட்டவெளியாய் தெரிய நின்று கொண்டிருக்கிறது.
எதற்கும் அந்தப் பதிவில் பதிவில் போட்டிருக்கும் படத்தையும் அதன் பழம் பெருமையையும் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஒரு கொசுறு சேதி:  ஒரு காலத்தில் ஊரிலேயே பெரிய தங்குமிடமாக இருந்த போது, இதன் அருகில் ஒரு ‘ஃபேமஸ்’ இட்லிக்கடை இருந்தது என்று எழுதியிருந்தேன். இன்றும் இந்தப் பாழடைந்த கட்டிடத்தின் எதிர்தாற்போல் சுப்ரமணிய சாமி புகழ் முருகன் இட்லிக் கடை உள்ளது. இந்தப் படம் எடுக்கும்போது அந்தக் கடையில் உள்ளவர் ஒருவரிடம்,   ‘இந்த இடத்தில என்ன வரப் போகுதுன்னு’ கேட்டேன். ‘ஓணர் இன்னும் இதை விற்கவில்லை;  அதனால என்ன வரப்போகும்னு தெரியாது’ என்று சொல்லிவிட்டு, ‘என்ன சார், நீங்க பத்திரிக்கைகாரரா?’ என்று கேட்டார்.

யாரும் வாங்கிப் போடறதுன்னா போடலாமேன்னு இந்த ‘டிப்ஸ்’ கொடுத்தேன் :-)

143. சோதிடம்..9 – ராசிபலன்

சோதிடம்: 9 – முந்திய பதிவுகள்: 1*, 2*, 3*. 4*, 5*, 6*, 7*, 8*. 

 

ராசி பலன்களும், ராசிக்கற்களும்…

ஒரு பத்திரிக்கை விடாமல் எல்லா பத்திரிக்கைகளிலும் வரும் ஐட்டம் ஒன்று உண்டென்றால் அது ‘இந்த வார ராசிபலன்’தான். அந்தக் காலத்தில் நான்கூட Peter Vidal அப்டின்னு ஒரு ஆளு I.E.-ல் எழுதுவார்ல அதப் படிக்கிறது உண்டு. அப்போ யாராவது இத ஏன் படிக்கிற அப்டின்னு கேட்டா வழக்கமா நம்ம எல்லோரும் ஒரு பதில் வச்சிருப்போமே – ‘சும்மாதான்’ – அதச் சொல்லிர்ரது. அதுக்குப் பிறகு ஒண்ணு புரிஞ்சிது. பாஸிட்டாவா ஏதாவது சொல்லியிருந்தா அத ஒண்ணும் சீரியசா எடுத்துக்கிறதில்லை; ஆனால் நெகட்டிவா ஏதாவது இருந்தா கொஞ்சம் நெருடலா இருந்திச்சு. ஆனா கடைசியில அது ஒண்ணுமில்லாத விஷயமாத்தான் இருக்கும். அப்புறம் இதப் போட்டு எதுக்குப் பாக்கணும்னு லேட்டா புத்தி வந்திச்சி.

பிறகு ஒரு சமயத்தில இந்த ராசிபலன்களுக்கு ஒன்னொரு பயன் இருப்பது தெரிந்தது. ரொமான்ஸ் பண்ற ஆளுங்க நிறைய பேர்,’ஆஹா, பாத்தியா..நம்ம ரெண்டு பேர் ராசிக்கும் எவ்வளவு ஒற்றுமை’ அப்டின்னு காண்பிச்சிக்கிறதுக்கு அவங்க ரெண்டு பேரோட ராசிகளா வாசிச்சி, அடிக்கோடிட்டு அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நாமும் பார்ப்போமேன்னு வாசிச்சிப் பாத்தேன். அவங்க சொன்னது மாதிரி அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா பொருத்தம் அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க. பரவாயில்லையே, ரொம்ப பொருத்தமாத்தான் இருக்காங்கன்னு நினச்சேன். சரி எதுக்கும் வேற ராசிக்காரங்களுக்கும் இவங்களுக்கும் பொருத்தம் எப்படி இருக்குனு பார்க்கலாமேன்னு பார்த்தேன். பார்த்தா எந்த ராசி எடுத்துக்கிட்டாலும் அங்கங்க நம்மளுக்கு வேண்டிய மாதிரியான பொருத்தங்கள் இருந்திச்சு. அப்போதுதான் புரிஞ்சுது – நல்லது நாலு; அப்பப்ப நடுவில ஒண்ணு ரெண்டு நெகட்டிவா போட்டுட்டு, அதையும் கொஞ்சம் தட்டி கிட்டி அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டுட்டா வாசிக்கிற எல்லாரும் சந்தோஷமா போயிடுவாங்களல்லவான்னு புரிஞ்சுது. மக்களின் மனச நல்ல புரிஞ்சி வச்சிக்கிட்டு நல்லாவே காசு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சுது.

சரி..இதெல்லாம் நம்ம நாட்டு சரக்கு கிடையாது. நம்ம சரக்கு அதவிட எல்லாம் ரொம்ப ஒஸ்தி அப்டின்னு ஒரு விவாதம் வரலாம். நம்ம ராசிபலனில் மொத்தம் 12 ராசிகள்..மேஷம், ரிஷபம் அப்டி இப்டின்னு. வாசிச்சி பாத்தா அதே ‘தத்துவம்’தான்னு புரிச்ஞ்சிது.

இதுல்ல ஒரே ஒரு கேள்வி மட்டும் போதும்னு தோணுது. உலகத்தில இப்போதைக்கு 6-7 பில்லியன் மக்கள் இருக்கிறாங்களா? இதுவரை பிறந்த வாழ்ந்து முடிச்சிவங்க எத்தனை கோடியோ? இன்னும் பிறக்கப் போறது எவ்வளவோ? இந்த எண்ணிக்கை அவ்வளவையும் ரொம்ப சிம்ப்பிளா பன்னிரெண்டே வகையா பிரிச்சி, அவர்கள் எல்லாரும் இந்த இந்த குணநலன்களோடு இருப்பார்கள் என்பதுவும், இத்தகைய பலன்கள் அவர்கள் வாழ்க்கையில் இப்பப்ப நடக்கும் என்பதுவும் ‘கடல் தண்ணிய கடுகில் அடைக்கிறது’ மாதிரிதான் தோன்றுகிறது.  மனுஷ டைப்புகளே 12 மட்டும்தானா? Is it not every human being an individual, a clear and separate entity? எல்லோரையும் பன்னிரெண்டு வகையில் ஏதோ ஒன்றில் அடைக்க முடியுமா, என்ன?

இந்த மாசத்தில் பிறந்தால் நீ இந்த நட்சத்திரம்…உனக்கு இந்த ராசி…அப்போ உன் குணம் இப்படிதான் இருக்கும்..உன் வாழ்க்கை இப்படி இப்படி அமையும்…..இதில் என்ன விஞ்ஞான உண்மைகள் உள்ளன? என்ன தத்துவம் பின்னடங்கியுள்ளது? என்ன லாஜிக் இருக்கிறது? என்ன common sense இருக்கிறது? Is human life so simple to be put into any one of these strait jacket compartments? Is human behaviour such a simplistic affair?  —-பதில்கள் எனக்குத் தெரியவில்லை..

இதை ஒட்டிய இன்னொரு விஷயம்: ராசிக்கல்.
கற்களுக்கு, அதுவும் ஒவ்வொரு கல்லுக்கும், வேறு வேறு ஆட்களுக்கும் தனித்தனி பலனாம். கற்களுக்கு ஒரு effect இருக்குன்னு சொன்னா, இயல்பியல், வேறியியல் இப்படி ஏதாவது ஒன்றின் தயவை நாடலாம் – either to prove it or disprove it. ஆனால் இங்க ஒரே கல் ஆளாளுக்கு, தனித்தனி பலன் கொடுக்குதுன்னு சொன்னா அதை எந்த விஞ்ஞானத்தின் கீழ் கொண்டு வருவது? ஏதாவது செய்து எப்படியாவது காசு பார்க்க மாட்டோமா அப்டின்னு பரிதவிக்கிறவங்க இருக்கிறது வரை இந்தக் கல் வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்தான்.
 

 

Š

Š

142.சோதிடம்..8: நேரம்,நாள்..

142. சோதிடம்…8: நேரம், நாள்.. நட்சத்திரம்…
ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*.  2*.  3*.   4*.  5*.  6*.7*.
 

நம்ம நாட்டுல நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறது சர்வ சாதாரணமா இருக்கு. ஏறத்தாழ பார்க்காதவர்களே இல்லைன்னு சொல்லலாம். இதில் கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் எல்லாருமே அடக்கம்

சில நாட்களை நல்ல நாட்கள் என்றும், சில நாட்களை கரி நாளென்றும் வகுத்தது யார்? அந்த வகுத்தலுக்கு அடிப்படைக் காரணங்கள் ஏதுமுண்டா? ‘செவ்வாய் வெறுவாய்’ என்பதற்கோ, ‘பொண்ணு கிடச்சாலும் புதன் கிடைக்காது’ என்பதற்கோ ஏதாவது காரணம் உண்டா? ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் நிகழ்ந்துள்ள ஒரு விஷயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் சந்தோஷமாக இருக்கு. என் சிறு வயதில் பலரும் ஊருக்குப் போகணும்னா, தெற்கே சூலம், வடக்கே சூலம் அப்டின்னு அதுக்கு ஏற்ற மாதிரி தங்கள் பயண நாட்களை மாற்றிக் கொள்வதுண்டு. இப்போது இந்த அவசர உலகத்தில் அது குறைந்து போனதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் இருக்கவே செய்கிறது – பெளர்ணமி, அமாவாசை, அப்புறம் என்னவெல்லாமோ சொல்வார்களே – பிரதோஷம்… இவைகள் எல்லாம் ஜே..ஜேன்னு போகுது.

இதில் கிறித்துவ மக்கள் இதிலும் ஒரு தனிவழியில் போவதுண்டு. கத்தோலிக்கக் கிறித்துவர்களிடம் சனிக்கிழமை மாதா நாள், செவ்வாய் அந்தோனியார் நாள் என்று சில நாட்களைச் சிலருக்கு ‘அலாட்மெண்ட்’ செய்திருப்பார்கள். அவர்கள் கேட்டார்களா; இவர்களா கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. அவைகளின் பின்னால் உள்ள ‘தாத்பர்யம்’ எனக்குத் தெரியாது. இன்னொரு வகைக் கிறித்துவர்கள் ‘sabath’ என்று ஒரு நாளை – சிலர் அதை ஞாயிற்றுக் கிழமையாகவும், அட்வெண்டிஸ்ட் ஆட்கள் சனிக்கிழமையாகவும் ‘ஃபிக்ஸ்’ பண்ணியிருப்பார்கள். இந்த நாளில், கடவுள் ஆறு நாட்களில் தன் படைப்புத் தொழிலை முடித்துவிட்டு, அக்கடா என்று ‘ஓய்வு’ எடுத்த நாள் என்றும், நாமும் கடவுள் போலவே அன்று ஓய்வு – முழு ஓய்வு – எடுக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இருப்பார்கள். யூதர்கள் தங்கள் வீடுகளில் எந்த வேலையும் செய்யாமல் முழுமையான ஓய்வில் இருப்பார்கள் என்றும், அன்று வீட்டில் மாலை விளக்கேற்றுவதற்குக் கூட வேலையாள் வைத்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் எனக்கு இரண்டு ஐயங்கள்: எல்லாவற்றையும் படைத்தக் கடவுள் அந்த 6 நாட்களில் செய்தது என்ன களைப்பைத் தரும் உடல் உழைப்பா? (manual labour?) என்ற ஐயம் முதலாவது. வானமும் பூமியும் வா என்றால் அதுபாட்டுக்கு வந்துவிட்டுப் போகிறது. இதில் என்ன தேவை ஓய்வு – அதுவும் கடவுளுக்கு. சின்னப் பிள்ளைகளுக்குச் சொன்ன கதை போல இருப்பதை வைத்துக் கொண்டு மக்கள் இவ்வளவு தீவிரமாக இருப்பது எனக்கு வேடிக்கைதான். இரண்டாவதாக, சரி கடவுள் ஆறு நாட்கள் தன் படைப்புத் தொழிலைச் செய்து விட்ட களைப்பில் ஓய்வெடுத்தார் என்றே கொள்வோம். இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நாமும் ஏன் ஓய்வெடுக்க வேண்டும். ஒருவேளை இதற்குப் பதில் சொல்ல வருபவர்கள், ‘இந்த நாள் ஓய்வுக்காக அல்ல; கடவுள் நம்மைப் படைத்ததை நினைவு கூறவும், அதோடு ஜெபம், தவம் என்று இருக்கவே அது ஓய்வு நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது’ எனலாம். அப்படிச் சொன்னால் என் பதில்: அப்படியே நன்றி சொல்ல அந்த ஒரு நாள் மட்டும்தானா; வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும்தானே என்பேன்.

இதில் அவர்கள் -முக்கியமாக ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்கள் – அந்த ஓய்வு நாளில் (சனிக்கிழமைகளில்) எந்த வேலையும் செய்ய மாட்டோம் என்பார்கள். அந்த நாட்களில் இருந்தது என்பதால் தேர்வுகளைக் கூட எழுதாத மாணவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். (அது எங்கள் இஷ்டம்; நன்மையோ தீமையோ அது எங்கள் சாய்ஸ்; இதில் பிறர் சொல்ல என்ன இருக்கிறது? – இப்படியும் கேட்கலாம்!)

சரி, நாள் விஷயம் இப்படி என்றால் ‘நேரம்’ இன்னொரு முக்கியமானது. நிறைய பெயர்கள் உண்டே…யம கண்டம், அது இதுன்னு. இந்த ‘டைம் டேபிள்’ போட்டது யார்? எந்த அடிப்படையில்? பத்து மணினா நல்லதில்லை; பத்து ஐந்து என்றால் எல்லாம் சரியாகி விடுகிறதே எப்படி?

இதில் பிறந்த நேரம் மிகவும் முக்கியமாம். என் நண்பர் an orthodox hindu – பிராமணர் என்று சொல்ல வேண்டியதில்லை – தன் தங்கைக்குக் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறினார். சிஸேரியன் என்று மருத்துவர் கூறி விட்டு, எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று இவர்களிடமே கேட்டாராம். இவர்கள் வீட்டில நல்ல நாள், நேரம் எல்லாம் பார்த்து சொல்ல, அதே சுப யோக நேரத்தில்  குழந்தை ‘பிறப்பிக்கப்’ பட்டதாம். நண்பர் இதைக் கேலி செய்து, ஜாதகம் எழுதுவதைக் கேள்வி கேட்க, ‘உனக்கு சேர்க்கையே சரியில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்’ என்றார்களாம்.

ஒரே நேரத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதைவைத்து ராசி, நட்சத்திரம் என்று சொல்லும்போது – எடுத்துக் காட்டாக, பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் (நம்ம மு. அமைச்சரின் நட்சத்திரம் அதுதானாமே, அப்டியா?) என்று சொல்கிறார்கள். அந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை தரணியும் ஆளலாம்; ரோட்டு ஓரத்தில் பிறந்திருந்தால் பிச்சையும் எடுக்கலாம். பரணியில பிறந்து, ஒரு முதலமைச்சருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா இருந்தா நம்மளும் ஒரு நாள் மு. அமைச்சராகலாம்; இல்லாட்டி மிஞ்சிப்போனா என்ன, ஒரு வலைப்பதிவு வச்சிக்கிட்டு ஏதாவது மனசில தோண்றத எழுதிக்கிட்டு இருக்கலாம்!

சரி..சரி..இதெல்லாம் உங்க நேரம் – இதையெல்லாம் வாசிக்கணும்னு உங்க தலைவிதி’ங்க !

141. சோதிடம்…7 – ‘சாஸ்திரம்’

 

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*.2*, 3*, 4*, 5*, 6*.

பெரியவங்க சொன்னவங்க சும்மாவா சொல்லியிருப்பாங்க;

அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்கல்லா;

காலம் காலமா அப்படிச் சொன்னாங்கன்னா, அதில ஏதாவது இருக்கும்.

-  இப்படி நம்ம முன்னோர்களுக்கு நாம் அப்பப்போ அளிக்கும் நற்சான்றிதழ்கள் அனேகம். அவர்கள் சொன்ன பல நல்ல விஷயங்களை நாம் கண்டு கொள்வதேயில்லை. நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பது? ஆனால் நம் முன்னோர்கள் ரொம்பவே புத்திசாலிகள். பொய் சொல்லதேன்னு சொன்னாலும் நாம் பொய் சொல்லுவோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனால், பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. ஆனாலும், நம்ம ஆளுக இந்த மாதிரி விஷயங்களில் பெரியவங்க சொன்னதைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ‘இது சாஸ்திரம்’ அப்டின்னு சொல்லிட்டாங்கன்னு வச்சுக்குவோம். நம்ம ஆளுங்க டோட்டல் சரண்டர். அதுக்கு மேல கேள்வி எதுவும் கிடையாது.

அய்யா, நம்ம வீட்டுத் தோட்டத்துக்குள்ள நல்ல பாம்பு ஒண்ணு வந்திருச்சி. இயற்கை, பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாம்ப
அடிக்கட்டா, மனசு கேக்குமா? ஒரு வழியா ஆளுகளக் கூட்டியாந்தாச்சு.  ஆனா, நம்ம ஏரியாவில பாம்பு அடிக்கிற எக்ஸ்பெர்ட் அடிக்க வந்த பாம்பு
நல்ல பாம்பு அப்டின்னதும், (அதில கூட நல்ல பாம்புன்னு சொல்லக்கூடாதாமில்ல; ‘நல்லது’ அப்டின்னுதான் சொல்லணுமாம். ஏன்யா அப்டின்னு கேட்டா ‘பெரியவங்க அப்டிதான் சொல்லுவாங்க’ அப்டின்னு பதில்!) பின் வாங்கிட்டார். ‘வீடல பிள்ளதாச்சியா இருக்காங்க; அதனால ‘நல்லதை’ அடிக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க’ அப்டிங்கிறார். அப்புறம் என்ன, நம்மளே அடிக்கிறோம். அடிச்சுக் கொன்ன பிறகு ஒருபாட்டு சனம் நம்ம வீட்ட சுத்தி. எதுக்குங்கிறீங்க? ‘நல்லதுக்கு’ கடைசி காரியம் எப்படி பண்ணணும்னு சொல்றதுக்கு. அங்க என்னன்னா, ஒரு பட்டி மன்றமே ஆரம்பிச்சிருச்சு. ஒரு குரூப், ‘புதைச்சுதான் ஆகணும்’ அப்டிங்குது. இன்னொண்ணு, இல்ல..இல்ல..  எரிக்கணும்னு ஒத்த கால்ல நிக்குது. நானே பாப்பையாவா மாறி, விடுங்க, எரிச்சு புதைச்சுருவோம்னு தீர்ப்பு சொல்லிட்டு எரிக்கச் சொன்னேன். எதுத்த வீட்டுல இருந்து ஒரு பெரியம்மா, ‘தம்பி, கொஞ்சம் பாலு ஊத்திரு’யா’ என்று ஒரு மனு.

இதெல்லாம் என்னங்கப்பான்னு கேட்டா, ஒரே மாதிரியா எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, – ‘பெரியவங்க அப்படிதான் சொல்லியிருக்காங்க’; ‘அது காலங்காலமாய் ஆகி வந்த சாஸ்திரம்’…

ஆனா நான் பார்த்த வரையில் எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். அதன் அடிப்படை என்னவென்று தெரியாமலே நாம் அவைகளைச் சிரத்தையாக நடத்தி வருகிறோம். வாழை இலை போடும் முறை சாஸ்திரம் என்ற பெயரில் சொன்னால் கேட்கிறோம். நல்ல
common sense-யோடு இலையை எப்படிப் போட வேண்டும் என்று சொல்லி, அதை சாஸ்திரம் என்ற பெயரில் கொடுத்ததும் நாமும் அதை அப்படியே
ஒத்துக்கொண்டு செய்து வருகிறோம். இலையின் முனைப்பகுதி ஏன் இடப் பக்கம் வரவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? இதே
போல் நான் ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன் – சாஸ்திரம் என்ற பெயரில் உள்ள நல்ல விஷயங்கள் என்று:

விளக்கு வைத்த பிறகு வீட்டைக் கூட்டினால் லஷ்மி வெளியே போய்விடுவாள்.
விளக்குப் போட்ட பிறகு நகம் வெட்டினால் தரித்திரம்.
பச்சைக் குழந்தையையோ, வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவர்களையோ தாண்டக் கூடாது.
ஒத்தக் காலில் நிற்காதே – தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.
சாப்பிடும்போது விளக்கை அணைக்கக்கூடாது.

 - இப்படி எத்தனை எத்தனையோ… இவைகள் நல்ல விஷயங்கள்; சாஸ்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட காரியங்கள்.

இவைகள் இப்படி என்றால், இன்னும் பல காரியங்கள் சாஸ்திரம் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் நம்மேல் சுமத்தப் படுகின்றன.  எங்கேயும் போகும்போது எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாதாம். கேட்டா போற காரியம் நடக்காதாம். இது male chauvenism இல்லாம வேற எதுவும் இருக்குமா என்ன?

கண்ணாடி சாமான்களைக் கீழே போட்டா உடையத்தான் செய்யும். அதுலயும் சாஸ்திரம். அதுவும் வெள்ளிக் கிழமை உடைச்சா, ரொம்ப விசேஷமாம்!
அட, ஒரு சின்ன பூனை, அதுவும் கறுப்புப் பூனை அதுபாட்டுக்குப் போனா நமக்கென்ன; அது குறுக்கே போச்சுதுன்னா நம்ம ஆளு அவ்வளவுதான்!
பூனையாவது பரவாயில்லைங்க; இந்தப் பல்லி பாவம்; இத்தனூண்டு. அது பாட்டுக்கு சுவர் கூறைன்னு திரியற ஜந்து. அவ்வளவு உயரத்தில போற வர்ரப்போ ஏதோ கையோ காலோ வழுக்கி கீழ விழ நம்மாளு மேல பட்டிச்சின்னா, தலைவர் உடனே காலண்டரின் பின்பக்கம் பார்க்க ஆரம்பிச்சுருவார் – பல்லி பலன் பார்க்க!

இதையெல்லாம் கேள்வி கேட்டால் ‘ஆமா, எல்லாம் படிச்ச திமிரு’ / ”பெரியவங்க அர்த்தமில்லாமலா சொல்லுவாங்க..’  – இப்படி ஏதாவது ஒரு பதில். என் கேள்வி: சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு வழிநடக்கணுமா அப்டின்னுதான்.

.

 

Š

140. ஷோலே – இரண்டாம் பாகம்…

     

ஹாலிவுட் படங்களில் எனக்கு இந்த western படங்கள் என்றாலே ரொம்பவே பிடிக்கும். எல்லா படங்களின் கதைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்: ஹீரோ எங்கிருந்தோ ஒரு ஊருக்கு வருவாரு; வில்லன்களைத் துவம்சம் பண்ணிட்டு, கடைசியில அந்த ஊரு மக்கள் கேட்டுக்கிட்டாலும் எதுவுமே வேண்டான்னுட்டு, தனியாகத்தானே வந்தோம்; தனியாகத்தானே போகணும் அப்டிங்கிற தத்துவத்தோடு அந்தி மயங்கும் ஒரு மாலை வேளையில் தன் குதிரையில் தனி ஆளாகத் திரும்பிப் போய்டுவார். எப்பவுமே ‘சத்தியமே ஜெயதே’ அப்டிங்கிறது மாதிரி, நல்லவனாக, வல்லவனாக வந்து தீய சக்திகளை அழிச்சிட்டுப் புறப்பட்டுப் போயிடுவார். எத்தனையோ நடிகர்கள் நடிச்சிருந்தாலும் சிலருக்குத்தான் அந்த ரோல் பொருந்தியிருந்தது. அதிகம் அலட்டிக்காம, நறுக்குன்னு வசனங்கள் பேசி நடிச்சதில Garry Cooper, John Wayne, Henry Fonda, Joel Mcrea – இவர்கள்தான் என்னைக் கவர்ந்தவர்கள். இவர்கள் காலத்திற்குப் பிறகு Clint Eastwood, Franco Nero, Lee Van Cleef- இவர்கள் என்னைக் கவர்ந்தார்கள். கடைசியாகச் சொன்ன இந்த நடிகர்கள் நடித்தது இத்தாலிய வெஸ்டர்ன் படங்களாகும். இந்தப் படங்களை spaghetti Westerns என்று அழைப்பதுண்டு. இந்தப் படங்களுக்குத் தேவையான இயல்புகள் இவர்களிடம் இயற்கையாகவே இருந்தன. இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன. சரி..அந்தக் கொடுமையை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ஷோலே படம் பார்த்த போது அந்தப் படத்திற்கும் ஆங்கில வெஸ்டர்ன் படங்களுக்கும் இருந்த ஒற்றுமைகள் பளீரெனத் தென்பட்டன. என்ன, வெஸ்டர்ன் ஹீரோக்கள் குதிரையில் வருவது போல் இல்லாமல் நம்ம கதாநாயகர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். ஆனாலும் பல காட்சி அமைப்புகள், கதாபாத்திரப் படைப்புகளில் பல ஒற்றுமை இருந்தன என்பதென்னவோ உண்மை.

    ஒற்றுமைகள்:

ஷோலேயில் இரண்டு நல்ல நண்பர்கள் – தர்மேந்திராவும், அமிதாபும். இதே போலவே பல படங்களில் இரட்டைக் கதாநாயகர்கள் ஆங்கில வெஸ்டர்னில் வருவார்கள்: Henry Fonda-வும் Antony Quinn-ம் “Warlock” (1959)என்ற படத்திலும், John Wayne-ம் Kirk Douglas-ம் “The War Wagon”என்ற படத்திலும், (1967) Burt Lancaster-ம் Kirk Douglas-ம் “TheGunfight at the O.K. Coraala” (1957)என்ற படத்திலும் இதே போல இரட்டை நண்பர்களாகவே வருவார்கள். அதே போல், உள்ளூர் பெரிய மனிதர் (சஞ்சீவ் குமார் )வில்லனைச் ( அம்ஜத் கான்) சமாளிக்க, தர்மேந்திரா, அமிதாபை நாடுவது “The Professionals” (1966) “Vera Cruz” (1954) “Shane” (1953)என்ற படங்களில் உள்ள கதையமைப்பாகும். அமிதாப் இளம் விதவை (ஜெய பாதுரி)மீது காதல் கொள்வதாக ஷோலேயில் இருக்கும். இதே கதையமைப்பே “Hondo” (1953) என்ற படத்திலும், சிறிதே மாறி “Shane” படத்திலும் வரும். இதைவிடவும், அமிதாப் இறக்கும் அந்தக் கடைசி சீன் அப்படியே “The Garden of Evil” (1950)என்ற படத்தின் அப்பட்ட காப்பியாகும். அமிதாப் அந்தக் கடைசி சீனில் செய்வது, பேசும் வசனம் எல்லாமே இந்தப் படத்தின் கதா நாயகன் Richard Widmark செய்வதின் ஃபோட்டா காப்பிதான். ஷோலேயில் ஒரு நல்ல சீன்; தர்மேந்திரா கிராமத்துப் பெண் ஹேமமாலினியைக் கவர தன் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டு தன் வீரப் பிரதாபத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார். அப்போது, அமிதாப் அதைவிட தூரத்திலிருந்து குறி தவறாமல் சுட்டு தர்மேந்திராவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார். இந்த சீனும் Garry Cooper “Dallas” (1950) என்ற படத்தில் செய்வதின் சுத்தமான நகலாகும். ஷோலேயில் A.K. Hangal-ன் பாத்திரப் படைப்பு Karl Malden, Van Heflin போன்றவர்கள் வெஸ்டர்ன் படங்களில் செய்யும் சின்னப் பாத்திரங்களையே ஒத்திருந்தது. கபார் சிங் (அம்ஜத் கான்) ஷோலேயில் நடித்த கதா பாத்திரமும் Burt Lancaster “Vera Cruz” என்ற படத்தில் செய்ததே. ஷோலே வெஸ்டர்ன் படங்களில் இருந்து மாறுபட்ட ஒரே முக்கிய அம்சம் என்னவென்றால், ஹேமமாலினியின் பாத்திரப்படைப்பு மட்டுமே. ஏனெனில் வெஸ்டர்ன்களில் வரும் பெண்கள் ஏறக்குறைய எல்லோருமே நீண்ட சிகரெட்டை ஊதிக்கொண்டு, கொஞ்சமே கொஞ்சம் உடை உடுத்திக்கொண்டு ‘ஒரு மாதிரி’ பெண்ணாகவே வருவார்கள். வீடுகளில் அவர்களைப் பார்க்க முடியாது; எப்போதும் கதாநாயகனும், வில்லனும் மோதும் ‘பார்களில்’தான் இருப்பார்கள். என்னதான் இருந்தாலும் ஷோலே நம்ம ஊர் படமல்லவா; அதற்கேற்றாற்போல ஹேமமாலினியின் பாத்திரம் படைக்கப்பட்டது. இன்னொரு முக்கிய வேற்றுமை – வெஸ்டர்னில் வரும் கதா நாயகர்கள் எப்போதும் தனித்தே இருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவை ‘ஏன் தனியாக இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்க, கதாநாயகன் ‘நான் எப்போதுமே தனியன்தான், கூட்டத்திலும் கூட’ என்பான். வெஸ்டர்ன் படக் கதாநாயகர்களுக்கே உரித்தான இந்த தனித்துவம் சிறிதும் இல்லாமல் தர்மேந்திராவின் பாத்திரப் படைப்பு ஒரு ஜனரஞ்சகமான, கலகலப்பான பாத்திரமாக இருக்கும். வெஸ்டர்ன் படங்களுக்கே உரித்தான ஒரு சோகம் கப்பிய, தனியனாக இருக்கும் கதாநாயகப் பாத்திரம் ஷோலேயில் தலைகீழ். ஷோலே – இரண்டாம் பாகம் வரப் போகிறதாம். அந்தப் படம் எந்தெந்த வெஸ்டர்ன் படங்களைத் ‘தழுவ’ப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! இந்தப் பதிவு என் சொந்தச் சரக்கல்ல; என் நண்பரும், எனக்குக் கல்லூரியில் சீனியருமான ஆங்கிலப் பேராசிரியர் J. வசந்தன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியது. வசந்தன் மெல்லிய நகைச்சுவையுடன் கதை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். பல பத்திரிகைகள் அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து பதித்து வந்துள்ளன. இப்போதும் The Hindu-வின் Metro Plus-ல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் “Down The Memory Lane” என்ற தலைப்பில் எழுதிவருகிறார். He is also a good cartoonist. Mostly his writings will have his own drawings. கோகுலம் என்ற குழந்தைப் புத்தகத்தில் தொடராக வந்த அவரது நகைச்சுவைக் கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. கல்லூரியில் பல ஆண்டுகளாக “Curtain Club”என்ற நாடகக் குழுவை அமைத்து பல ஆங்கில நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அவரது சில சினிமா பற்றிய கட்டுரைகளைத் தமிழில் தர எனக்குள்ள ஆவலின் முதல் முயற்சி இது.  

 

வெளிகண்ட நாதரின் – மீண்டும் ஷோலே

139. எங்கள் கல்லூரி…

படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல.
கல்லூரியின் 125-வது ஆண்டு விழா சென்ற வாரம் நடந்தது. மற்றொரு பெரிய, நகரை விட்டு 15 கி.மீ. தள்ளியுள்ள புதிய வளாகம் ஒன்றில் -satellite campus – பெப்.24-ம் தேதி புதிய கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டது. அடுத்த நாள்: Commemoration Day – வரலாற்றைத் திரும்பி நன்றியோடு நினைவுபடுத்திக் கொள்ளும் நாள். 

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியின் முதல் கட்டிடமான Main Hall கட்டி முடிக்கப்பட்ட 90-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்கப்
பட்டது. அவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருக்க நான் அழைக்கப்பட்டேன். ஒரு முழு நாள் விழாவின் முக்கிய இறுதிப் பகுதியாக ஓர் ‘ஒலி-ஒளி’ நிகழ்ச்சி
நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அக்காட்சிக்கு அந்த மெயின் ஹாலே நிகழ்களமாக ஆக்கி, கல்லூரியின் முதல் இரு முதல்வர்களான (அமெரிக்கர்கள்) Zumbro and Wallace இருவரும் பசுமலையில் இருந்த சிறு கல்லூரியை வைகையின் வடகரைக்கு மாற்றுவது பற்றி பேசி, திட்டமிட்டு, முதல் கட்டிடத்தைக் கட்டி
எழுப்பியதை ஒலி-ஒளி காட்சியின் கருத்தாகக் கொண்டு நடத்தினோம்.

இக்காட்சி பலருக்கும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிறப்பாக அமைந்ததற்குக் காரண கர்த்தாக்கள் இரு நண்பர்கள்: பேரா. பிரபாகரும், பேரா.
சுந்தரும். நாற்பதே மாணவர்கள் படித்துவந்த அந்தக் காலத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொள்ளும் அளவிற்கு ஒரு கட்டிடம் கட்ட முனைந்த
அந்த இரு பெரிய மனிதர்களின் ‘ஆவியே’ இறங்கி வந்ததால்தான் நிகழ்ச்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது என்று நண்பன் சுந்தர் சொல்வதுண்டு.அந்த விழாவின் வெற்றி  ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில்  தொடர்ச்சியாகக் கொண்டாட வழிகோலியது.

 

 

 

 

சென்ற வாரத்தின் 25-ம் தேதி வழக்கம்போல்  காலையிலிருந்து கொண்டாட்டாங்களின் நாளாக இருந்தது. வழக்கத்தை விட மாணவர்களின் கூட்டம் அதிகம். மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தத் திட்டமிட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் 7 மணி வரை செல்ல, 7.30க்கு ஒலி-ஒளி நிகழ்ச்சி ஆரம்பித்தது.  இம்முறை வாலஸ் மாணவர் விடுதி – Wallace Hostel -  நிகழ்களமாக ஆனது.  7.30க்கு எல்லா விளக்குகளும் அணைந்த போது ஒரு சில விசில் சத்தங்கள்.  இருட்டில் 2000-க்கும் மேல் மாணவர்கள் இருக்கும்போது அதுகூட இல்லாவிட்டால் எப்படி? ஒரே ஒரு ஸ்பாட் லைட் எரிய கல்லூரி முதல்வர் அந்த ஒளி வட்டத்துக்குள் வர, மாணவர்கள் பகுதியில் இருந்து சத்தம். ஆனால், எல்லாமே ஏழெட்டு வினாடிகளுக்குத்தான். முதல்வரின் 4-5 நிமிட பேச்சுக்கு ஓர் அழகான அமைதி.

பிறகு ஒலி-ஒளி காட்சி. கல்வி என்பதே கைக்கெட்டாப் பொருளாக,  உயர்சாதியினரின் உடைமையாக இருந்த ஒரு கால கட்டத்தில்,  சமூகத்தின் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடும், “In the service of God and people” என்ற தாரக மந்திரத்தோடும் உழைத்த பெருமக்களின் பரந்த மனத்தை, காலங்காலமாய் மெளன சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் இன்றைய மாணவர்களிடம் சாட்சி பகர்ந்தது; பெரிய ஞானிகளையும், விஞ்ஞானிகளை மட்டுமே உருவாக்குவதற்காக அல்ல இந்தக் கல்லூரி. தன் மடி மீது வரும் ஒவ்வொருவரையும் நல்ல மனிதனாய், மனித நேயனாய் மாற்ற முயலுவதே நம்
முன்னோர்களின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நெருப்புப் பொறியை ஏற்றுவதே இந்தக் கல்லூரியின் நோக்கமும், ஆவலும் என்பது போன்ற வசனங்கள் பின்னால் ஒலிக்க இருண்ட பின்புலத்தில் ஒளியோடு பல காட்சிகள் நடந்தேறின.


‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

- என்ற முண்டாசுக்காரனின் வசனங்களோடும், திடீரென வெடிகள் மூலம் வானில் ஏற்படுத்தப் பட்ட வண்ணக் கோலங்களோடும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது அனைவரின் மனங்களும் உணர்வு வயப்பட்டிருக்க, அண்ணாந்து நோக்கிய முகங்களில் பெருமிதம் பூத்திருக்க விழா முடிந்தது. இந்த ஆண்டு நிகழ்ச்சி முழுமையாக பேரா. பிரபாகரின் மேற்பார்வையில், பழைய மாணவன் ஷண்முகராஜா (விருமாண்டியின் பேய்க்காமன்) -முயற்சியினால் நடந்தேறியது.

கடந்த ஒவ்வொரு வருடமும், இந்த நிகழ்ச்சிகளில் நான் பிரமிப்படைவது எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்த ஒலி-ஒளி காட்சிகளின்போது நடந்து கொள்ளும் விதமே. இந்த ஒலி-ஒளி நிகழ்ச்சிகளில் இளம் வயசுப் பசங்கள் கலாட்டா பண்ணுவதற்கேற்ற நேரமே.  ஏனெனில் அவர்கள் வயது அப்படி; இருண்ட சூழல் வேறு. இருப்பினும் rising to the occasion என்பது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது; எந்த உணர்வு அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது எனக்கு இன்றுவரை பிடிபடுவதேயில்லை. அதுதான் எங்கள் கல்லூரியின் பாரம்பரியமோ…
Š

138. தோல்விச் சுகம்…

நிச்சயமா இதுதான் ‘தேர்தலை’ப் பற்றிய கடைசிப் பதிவு – அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போவது போல ஒரு நினைப்பு.

புதிய முயற்சி. நிச்சயமாக நிறைய முன்னேற்பாடுகள் இருந்திருக்கும். நிறைய நேரம் செலவழித்திருக்க வேண்டும். – இவைகள் எல்லாவற்றிற்காகவும் மனம் நிறைந்த, மனம் திறந்த பாராட்டுக்கள் – நிலாவிற்கு. இன்னும் இதுபோல் பல போட்டிகள் நடத்த எதிர்பார்க்கிறோம்.
நன்றி நிலா.

சிறிலாவது வேலையின் நிமித்தமாய் தனது பார்ட்னருக்குக் கை கொடுக்க முடியாது போயிற்று. என்னளவில் photoshop-ல் வேலை செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு, பொன்னான நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு செலவழிக்காது என் பார்ட்னர் செல்வனின் கழுத்தில் மாட்டிய கல்லாக அவர் வெற்றிச் செல்வனாவதைத் தடுத்து விட்டேன். செல்வனின் தலைவிதி நான் அவர் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பது. விதி என் ரூபத்தில் விளையாடி விட்டது, பார்ட்னர். Sorry about it. :-(
நான் தவறிய விஷயங்களில் எல்லாம் மிகச் சரியாக இருந்து, உழைத்து வெற்றி கண்ட குமரன்-கொத்ஸ் குழு ஒப்பாரும், மிக்காருமின்றி தனிப் பெரும் வெற்றி ஈட்டியமைக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள். Hats off to you, kumaran & Koths.

ஓட்டுப் போட்ட அந்த எண்மருக்கும் (லிஸ்ட் பார்ட்னரின் பதிவில்!) நெஞ்சார்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.
வெற்றிக்குப் பின் சுற்றி நின்று கும்மியடிக்க ஆட்கள் பலர் இருப்பதுண்டு.ஆனால் தோல்விக்குப் பின் தோள் கொடுக்க வருபவர் மிகக் குறைவே. ஆனால் எங்கள் குழுவின் ‘நிகரில்லாத்’ தோல்விக்குப் பின் ஆறுதல் சொல்ல வந்த நல்ல பல உள்ளங்களுக்கு என்றும் நாங்கள் கடப்பாடு உடையோம். மறவோம் இந்த நல்ல உள்ளங்களை, அவர்தம் ஆறுதல் மொழிகளை. அவர்கள் கொடுத்த அறிவுரைகளையும் என்றும் நினைவில் கொள்வோமென உறுதியளிக்கிறோம். பின்வந்து பின்னூட்டமிட்ட அந்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஏனெனில், வெற்றி பெற்றிருந்தால் கூட இது போன்ற மனசைத் தொடும் பின்னூட்டங்கள் வந்திருக்குமா, என்ன? பெற்ற தோல்வியால் வந்த உங்கள் அனைவரின் பின்னூட்டங்கள் மயிலிறகாய் வருடிச்சென்றன.

தோல்வியில் இத்தனை சுகமா?

நன்றி….