135.நிலா காயுது…

ஹலோ நிலா மேடம்,

ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில தலைவர் பாடற பாட்டைமட்டும் போட்டுட்டோம். படத்துக்கே முழு விளம்பரத்தை எங்க மல்லிகைக் குழுவிடம்தான் சங்கர் ஒப்படைக்கப் போறார். அப்படிப்பட்ட எங்க டீமின் படங்களை நீங்கள் ஆட்டைக்குச் சேத்துக்கக் கூடாதுங்களா? யேய்..சேத்துக்குங்க’ப்பா; யேய்..யேய்…please’ப்பா…

முதல் படம்: நம்ம தலை அங்க இறங்கின உடனே (இப்போ, ஏற்கெனவே என் பார்ட்னர் ஏற்றியுள்ள பாட்டைப் பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்) அந்தப் பாட்டைப் பாடினாரா.. கிரகவாசிகளுக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு. போதாததுக்கு நம்ம டி.ஆர். வேற தாளிச்சிட்டாரா..கேக்க வேணாம். தலைவருக்கு அங்க உடனே ஒரு fan club ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு தலைவரா இருக்க நான் நீன்னு ஒரே சண்டையாப் போச்சு. பாத்தாரு…அந்த்க் கிரகத்து president. நானே தலைவரா இருக்கப்போறேன்; அதோடு தன் மனைவியையே பொருளாளராகவும் போட்டுக்கிட்டாரு. அந்த பொறுப்பை ஏத்துக்கிட்ட போது எடுத்த படம்தான் இது.

அடுத்த படம்: President & Vice-President இப்போ நம்ம தலைவரின் பாக்கெட்டுக்குள். பிறகு என்ன உடனே ஷூட்டிங்க் ஆரம்பிச்சாச்சு. சங்கர் கேக்கவா வேணும். சும்மாவே ரோடு, பாலம், லாரி, சந்து பொந்துன்னு எல்லா இடத்திலயும் paint அடிக்கிற ஆளு. இங்க உடுவாரா..? கொஞ்சம் டெக்னிக்கை மாத்திட்டார். பெயிண்ட்டுக்குப் பதில் ஒரே தீவட்டி மயம்தான் இங்கே. அதோடு, நம்ம சுஜாதா வேறு வெளுத்துக்கட்டியிருக்காரு. ஒரு இடத்தில பாரு்ங்க…வசனம் எழுதியிருக்காரு…ச்சே..என்ன வசனங்க …படம் வெளிவந்ததும் ஆ.வி.யில் இருந்து எல்லாப் பத்திரிகையும் எப்படி சீச்சீன்னு சொல்லப் போறாங்கன்ன பாத்துக்கிட்டே இருங்க..

இந்தக் கடைசிப் படம்: இது நம்ம தலைவர் ஜுலி ப்ளாண்ட்டில இருக்கிற மக்களோடு சேர்ந்து எடுத்துக்கிட்ட படம். ஷூட்டிங் நடக்கிறப்போவே நம்ம தலையின் புகழ் கன்னா பின்னான்னு பரவுனதால, அந்த நாட்டுப் பொறுப்பை ஏத்துக்கணும்னு அந்த நாட்டு மக்கள் எல்லோரும் ரொம்பவே தலைவர கேட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க; தலைவர் நான் ‘பூமி’க்குப்

போயிட்டு, சத்யநாராயணா, ஜில்லு எல்லார்கிட்டயும் கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு ‘டபாச்சுட்டு’ வந்திருக்கார். அனேகமா இது பற்றி முடிவெடுக்க இமய மலைக்கு ஒரு ஷண்டிங்க் அடிக்க ஆலோசனையில் இருக்கிறார்.

பின் குறிப்பு: உண்மையில பாத்தீங்கன்னா, ஜுலியன்ஸ் உசரமா பெருசா இருப்பாங்க…முதல் படத்தில பாக்றீங்கல்லா, அது மாதிரி. ஆனா தலைவர சிறுசா பாத்தா நம்ம ரஜினி ராம்கி மாதிரி ஆளுகளுக்குப் பிடிக்காதில்லையா, அதனால நம்ம சங்கர் பயங்கர graphics பண்ணி, உல்டாவா தலைவர பெருசாவும் ஜுலியன்ஸை சிறுசாகவும் காண்பிக்க முடிவு பண்ணிட்டார். AVMகாரங்களும் காச காசுன்னு பாக்காம சரின்னுட்டாங்க. அதத்தான் இரண்டாம், மூன்றாம் படத்தில பாக்றீங்க…

134. சங்கிலித்தொடர்…

Image hosting by TinyPic

‘அவ எடுத்த வாந்தியில கருகப்பிலை இருந்திச்சாம்’ அப்டின்னு கோடி வீட்ல ஒருத்தி சொல்ல, அதே தெருவின் அடுத்த கோடிக்கு இதே நியூஸ் கொஞ்சம் கொஞ்சம் மாறி மாறி, கடைசியில் ‘ அவ காக்காவா வாந்தி எடுத்தாளாம்’ அப்டின்னு மாறிடுச்சாம அப்டின்னு ஒரு கதை சொல்லுவாங்க.

இந்த சங்கிலிக் கதையும் அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உருமாறுதுன்னு நினைக்கிறேன். முதல்ல ஆரம்பிச்ச புண்ணியவான் / ..வதி யாருன்னு தெரியலை. தாணுதான் trace பண்ண ஆரம்பிச்சிருக்காங்க…நதிமூலம் கண்டுபிடிச்சு சொன்னாங்கன்னா நல்லது. ஆரம்பிச்சவங்க கொடுத்த அந்த ‘நாலு’ என்னன்னு தெரியாது. நானும் ‘பின்னாடியே’ போய் ஒரு நாலைந்து ஆட்களைப் பிடிச்சு, (ராசபார்வை கொங்கு ராசா, டி. ராஜ்,ஞான்ஸ், டோண்டு, ஜோசஃப், ஜோ ) அவங்க சொன்னதையெல்லாம் ஒரு ;லுக்’ உட்டுட்டு வந்தால் கூடக் கொஞ்சம் தான் தலைசுற்றல். ஜோ ஒரு பின்னூட்டத்தில தான் செய்ததை ரகசியமா சொன்னாரா..’டக்’குன்னு அத பிடிச்சிக்கிட்டேன்.

முதலில் ஆரம்பிச்சவங்க எந்த நாலு சொன்னாங்களோ, மற்றவங்க அதை மாற்றி, கூட்டி, குறைத்து நிறைய ஆயிருச்சி. அதனால நான் என் பங்குக்கு கொஞ்சம் மாற்றி இருக்கேன். இந்த 4 கேள்விகள் நிறைய பேருடையதில் இருந்தது. ஆனால் அவைகளை நான் விட்டு விடப் போகிறேன். ஏனெனில், Four Jobs I have had: – இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? ஆரம்பிச்சது கல்லூரி ஆசிரியர் வேலை…அதுவே கடைசி வரை. ஆகவே எனக்குத் தேவையில்லாத கேள்வி. அடுத்து: Four Places I have lived – எங்கங்க…பிறந்து அஞ்சு வயசு வரை சொந்த ஊர்ல இருந்திட்டு, பிறகு எல்லாமே – எல்லாமேன்னா எல்லாமே ! – மதுரதான். நாலு இடஞ்சொல்லுன்னா நான் எங்க போறது? அதுக்கு அடுத்து: Four Places I have been on vacation – நாங்க என்ன software ஆளுகளா? இன்னைக்கி அந்த நாடு, அதுக்கு அடுத்து இன்னொரு நாடுன்னு சுத்துறதுக்கு. நாம உண்டு நம்ம மதுர உண்டுன்னு இருக்கிறவைய்ங்க. Four places I’d rather be now: – அப்டின்னு ஒரு கேள்வி. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு தருமியா இருக்க! இதுல அங்க போகணும் இங்க போணும்னு நாம ஆசப்பட்டா மட்டும் போதுமா…விடுங்க..அதெல்லாம் பகற்கனவுகள்தானே. இன்னொரு கேள்வி – Four sites I visit Daily – சொல்லி வச்ச மாதிரி ஜி-மெயில், தமிழ்மணம், தேன்கூடு, கூகுள் அப்டின்னு டிட்டோ போட்டு எல்லாரும் இதுக்குப் பதில் சொல்றாங்க. நம்ம ஆளுக எல்லாரும் அனேகமா addicts தான; அதனால இப்படித்தான் பதில் வரும். அதனால அந்த கேள்வியையும் தவிர்த்திட்டேன். அப்போ மீதியிருந்த அந்த 4 கேள்விகளுக்கு பதில் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். கேள்விகளுக்குப் போவோமா?

Four movies I would watch over and over again:
அடுத்த வீட்டுப் பெண்; காதலிக்க நேரமில்லை; மைக்கிள் மதன காம ராஜன்; சலங்கை ஒலி

Four TV shows I love to watch:
கால்பந்து; டென்னிஸ்; Bio-graphy; மற்ற தமிழ்க் குப்பைகள(தெரிஞ்சே தப்பு செய்றதில்லையா – அது மாதிரி; அட, சிகரெட் பிடிக்கிறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்.

Four of my favourite books
Exodus – 3 தடவை; பொன்னியின் செல்வன் – 3 தடவை; Root: – 2தடவை; ‘பழைய’ ஜெயகாந்தன்.

Four of my favourite foods:
அம்மாவின் குருமாக் குழம்பு; வீட்டுக்கார அம்மாவின் பருப்பு-ரசம்; பெரிய மகளின் காஃபி; சின்ன மகளின் டீ.

ஆச்சா, இப்போ அடுத்த கட்டம்: நம்ம மாட்டினது மாதிரி நாம நாலு பேத்த மாட்டணுமாமே. ஒரு ஆளு தப்பிச்சிக்கிட்டாங்க. துளசி, ஊர் – இல்ல – உலகம் சுத்திக்கிட்டு இருக்கிறதால அவங்கள மாட்ட முடியாது. மற்றபடி …

Four People I would like to tag:

1. பெனாத்தல் சுரேஷ்: – முதல் முதல் தருமிக்குப் பின்னூட்டம் இட்டவரில்லையா? அந்த செய்நன்றிக்கடன் :-)

2. இளவஞ்சி: – நல்ல எழுத்துக்கார(ர)னல்லவா? அதற்கு என் மரியாதை.

3. தாணு: – இந்த ‘விளையாட்டு’ என்னென்னு தெரிஞ்சிக்கிறதுக்காக எடுத்த முயற்சிக்கு ஒரு appreciation!

4. பத்மா அர்விந்த்: – உழைப்பால் உயர்ந்தவருக்கு என் மரியாதை.

Tagged மக்களே…இனி உங்க பாடு; மத்தவங்க பாடு. நான் வர்ட்டா..?

133. I DON’T BELIEVE IN THE GOD …

NO, I DON’T BELIEVE IN …

….the God who condemns man by surprise in a sin of weakness,
….the God who always demands 100% in all examinations,
….the God who says and feels nothing about the agonsing problems of
suffering humanity,
…. the God who, to make us happy, offers us a happiness divorced from
our human nature,
….the God who can give a verdict only with rule book in his hands,
….the God incapable of smiling at many of man’s awkward mistakes,
….the God who “plays at” condemning,
….the God who “sends” people to hell,
….the God who says, “you will pay for that”,
and above all
….the God who makes himself feared.
-
-
-
-
-
-

- Taken from Juan Arias’ “THE GOD I DON’T BELIEVE IN”

132.. ஜோஸ்யம்….6

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*, 2*, 3*, 4*, 5*.


“வாஸ்து பார்த்துதான் கட்டியிருப்பாங்களோ……..?”

முதலிலேயே ஓர் ஒப்புதல் வாக்குமூலத்துடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இதுவரை எழுதிய ஐந்து ஜோஸ்யப் பதிவுகளில் எனக்கு அந்த விஷயத்தில் உள்ள தொடர்பை எழுதியுள்ளேன். ஜோஸ்யம், ஜாதகம், எண் கணிதம், வாஸ்து, இது போன்ற விஷயங்களில் எனக்கு சிறிது கூட நம்பிக்கை கிடையாது. ஆயினும் ஒன்றை எதிர்ப்பதற்கு முன்பு அவைகளைப் பற்றிய விஷய ஞானம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மதங்களை எதிர்ப்பதற்கு முன் அவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது என் அறிவை வளர்த்துக் கொண்டேன். ஆனால் இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது. ஆகவே இப்பதிவுகளில் நான் செய்யக்கூடிய factual mistakes ஏதாவது இருப்பின், அவைகளைப் பற்றிய அறிவுறுத்தலை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

ஜோஸ்யமும், ஜாதகமும் பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையோடு இணைந்தே இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் அவைகளின் வேகமும், தாக்கமும் மிக அதிகமாகத் தென்படுகின்றன. அதுவும் வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுவது: என் போன்ற வயசான ‘கேஸ்’கள் இந்த விஷயங்களில் ஆர்வம் காண்பித்தாலாவது பரவாயில்லை எனக் கொள்ளலாம்; ஏதோ போற காலத்திலயாவது, தன்னால் இனி ஏதும் பிரமாதமாக சாதிக்க முடியாது என்ற சுய நம்பிக்கை இழந்த காலத்தில், ஒரு பற்றுக்கோடு போல் இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் எனலாம். அதோடு வாழ்க்கையின் இப்பகுதியில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கக்கூடிய நேரம்; ஏதாவது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்ற நப்பாசைகள் இருக்கும். அந்த கிரகம் சரியான ‘வீட்டுக்குள்’ வந்து உட்கார்ந்து விடாதா, இந்தக் ‘கல்’ என் பாரத்தை நீக்கி விடாதா, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டின் முன்பக்கத்தையே இடித்து மாற்றினாலாவது பிள்ளைகள் வாழ்வு சிறக்காதா என்பது போன்ற ஆதங்கங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் மிக அதிகமான இளைஞர்களே இந்த ‘நோயில்’ விழுந்து, கவலைக்குரிய நிலையில் நம் சமுதாயத்தையே நிறுத்திவிட்டார்கள். தன்னம்பிக்கை இல்லாத போது குறி, நல்ல நாள், நல்ல பெயர், ராசிக்கல் என்று மனிதமனம் போகும். வாழ்க்கைக்குள் நுழையும் முன்பே இளைஞர்கள் இதில் காலை விட்டால், அவர்கள் தன்னம்பிக்கை எங்கே போயிற்று? இப்போதே இப்படி என்றால் நாடி நரம்பு தளரும் வயதில் இவர்கள் எதையெல்லாம் நம்பி எதனெதன் பின்னே போவார்கள்?

பொதுவாகவே இந்த விஷயங்கள் ‘மதங்கள்’ மாதிரிதான்; ஊட்டப்பட்டு, செரிமானம்கூட இல்லாமல் ‘கட்டி’யாக மனசுக்குள் தங்கிவிடும். நீங்கள் என்ன கரைத்தாலும், எவ்வளவு காரண காரியங்கள், சான்றுகள் என்று என்ன கொடுத்தாலும் அவைகள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இந்த விஷங்களும் அப்படித்தான் இருக்கும். ‘நம்பிக்கை’ சார்ந்த இது போன்றவைகளில் simple logic, rationality, scientific approach எனபவை எல்லாமே வெட்டியாகக் கொடுக்கப்படும் பலியாடுகள் என்று தெரியும். இருப்பினும்…ஒரு முயற்சி…அவ்வளவே.

What is science என்ற கேள்விக்கு collection of facts based on provability and reproducibilityஎன்பதே பதில் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு குறிப்பிட்ட அளவு வேதியப் பொருள் (A)இன்னொரு குறிப்பிட்ட அளவுள்ள வேதியப் பொருள் (B) இரண்டும் சேர்ந்து புதிய பொருள் ஒன்று (C) உண்டாகிறதென்றால் அது வட துருவத்திலும், தென் துருவத்திலும், ராமசாமிக்கும் ராகுலுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. அதுதான் விஞ்ஞானம்..science.. எப்போது ஒரே விஷயத்தில் இரண்டாவது கருத்துக்கும் இடமிருக்கிறதோ அங்கே அது hypothesis-ஆக – ஒரு கருத்தாக மட்டுமே – மாறி விடுகிறது. அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம – every coin has got two sides என்பது போல.

நான் சின்னவனாக இருந்தபோது எல்லா கிறித்துவ மாணவர்கள் போல நானும் catechism – மறைக் கல்வி – வகுப்புகளுக்குப் போயிருக்கிறேன். அந்த வகுப்புகளில் Creation Vs Evolution போதிக்கப் படும். படைத்தலைப் பற்றிய சார்புள்ள கருத்துக்களே சொல்லிக் கொடுக்கப்படும். சரி..மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றே வைத்துக் கொண்டால், அந்த குரங்கு எங்கிருந்து வந்தது..சரி.. அமீபாவிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம்..அப்போ, அந்த அமீபா எங்கிருந்து வந்தது.. தெரியாதல்லவா… அங்கேதான் இருக்கிறது ‘கடவுள்’…இப்படித்தான் போகும் அந்த வகுப்புகளில் வாதங்கள். நன்றாக இருந்தன இந்த விவாதங்கள் – அந்த வயதில்!

பின்னாளில் முதுகலை வகுப்புகளில் இதே Creation Vs Evolution பற்றிப் பேச வேண்டியிருந்தது. முதலில் படைப்பு பற்றிச் சொல்லியாகிவிட்டது. பின்பு, பரிணாமம் பற்றிப் பேச வேண்டும். நானோ உயிரினங்களில் உள்ள ‘நம்ப முடியாத, பதில்கள் தெரியாத விஷயங்கள் பலவற்றைப் பற்றி பேசினேன். ஒரு mitochondria-வின் மிக மிக நுண்ணிய அமைப்பு, செயல் திறன் , ஒரு மலரின் அழகு, அதன் அல்லி-புல்லிவட்ட அமைப்பின் நேர்த்தி, எண்ணிக்கையிலடங்கா கோள்கள், அவைகளின் ஒழுங்கு முறையான சுற்றுக்கள் – ஆச்சரியப் பட வைக்கும் இந்த நேர்த்தியானவை எல்லாம் தானாக, ‘கடவுள்’ என்ற எவ்வித supreme power இல்லாமல் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் ஏதும் இருக்க முடியுமா என்ற என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று சொல்லி ஒரு pause கொடுத்தேன். அந்த வகுப்பில் கடவுள் மேல் மிக நம்பிக்கைகொண்ட மாணவர்கள் ( முக்கியமாக மாணவிகள்) அதிகம். அவர்களுக்கு என் ‘மன மாற்றம்’ மிகவும் திருப்தியாயிருந்தது அவர்கள் முகங்களில் நன்கு தெரிந்தது. ‘மனுஷன் திருந்திட்டான்’ என்று அவர்கள் நினைக்க ஆரம்பிக்கும்போது, எனக்கு பிரமிப்பையூட்டும் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன். அது உங்களில் பலருக்கும் ஒரு ‘ஜுஜுபி’யான காரியமாக இருக்கும். எனக்கு அன்று மட்டுமல்ல, இன்றுவரை வியப்பான விஷயங்களில் இதுவும் ஒன்று. 100 பக்கம் தட்டச்சி உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு விஷயம் இருக்குதென்று வைத்துக் கொள்வோம். அதை ஒரு floppy-ல் (CD எல்லாம் அப்போ எனக்குப் பரிச்சயமில்லா பெரிய விஷயம்) ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் வந்துவிடுகிறது. நான் அதை எடுத்து என் கணினியில் போட்டு மறுபடி ஒரு தடவை ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் என் கணினிக்கு வந்துவிடுகிறது. இது எனக்கு (இன்னும்) மிக ஆச்சரியமாக இருக்கிறது. நம்பவே முடியாத அளவு பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த பிரமிப்புக்குப் பின்னால் சரியான ஒரு விளக்கம் உண்டு. பிரச்சனை என்னவென்றால், விளக்கம் எனக்குத் தெரியாது; புரிந்துகொள்ளக் கூட அடிப்படை விவரம் தெரியாது. நாம் எப்படி இது முடியும் என்று பிரமிப்போடு கேட்கும் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் பதிலே இருக்க முடியாது என்று நினைப்பது அறிவுடைமையாகாது. நாம் அதிசயப்படும் அளவுக்குச் சில விஷயங்கள் இருப்பதாலேயே அவைகள் கட்டாயம் ஓர் அதிசய அதிசக்தியால் தான் வழிநடத்தப் படவேண்டும் என்பதில்லை என்றேன்.

இந்த ஜோதிட சமாச்சாரங்களை நம்புவோர்கள் பலரும் ஒரே கருத்தைச் சொல்லுவதுண்டு: ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் தான்; அது ஒரு கணித முறையில் கணக்கிடப்படும் துறை. பிரச்சனை என்னவென்றால், சிலர் அதைத் தவறாகக் கணக்கிடுவதாலேயே தவறுகள் நடந்து விடுகின்றன என்பதே அது.
அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது; விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்; விஞ்ஞானமாகும்? எனக்கு ஒரு வகைக் கணக்கு; உனக்கு ஒரு வகைக்கணக்கு என்றால் அது கணக்கே அல்லவே. இன்னொன்று: விஞ்ஞான சோதனைகளில் ‘control’ என்று ஒன்று இருக்கும். ஒரு guninea pig வைத்து சோதனை நடக்கிறதென்றால் இரு வகை சோதனைப் பிராணிகளை வைத்து சோதனை செய்வதே வழக்கம். ஒன்றில் ஒரு மருந்தை ஊசிமூலம் ஏற்றி சோதனை நடக்கிறதென்றால், மற்றதில் அந்த ஊசிபோடுவதால் வரக்கூடிய விளைவுகளை நீக்கி, மருந்தின் விளைவை மட்டும் தனித்து அறிய அடுத்த சோதனைப் பிராணிகளுக்கு மருந்தில்லாமல் வெறும் ஊசி (placebo or sham injection) போடுவார்கள். இந்த இரண்டாவது பிராணிகள் control group ஆக இருக்கும்.

வாஸ்து, ராசிக்கல் இந்த விஷயங்களிலும் இது போல கண்ட்ரோல் வைத்து சில சோதனைகள் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இது செயல்முறைக்கு ஒத்துவராது என்பதாலேயே இதை வைத்து ‘வியாபாரம்’ செய்பவர்களுக்கு நல்லதாகப் போய்விட்டது; நம்புவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வாஸ்து ‘விற்பன்னர்கள்’ இருவரிடம் ஒரே வீட்டைப் பற்றிக் கேளுங்கள். Put two questions to three teachers and they will come with four answers என்பார்கள். அதிகம் வேண்டாம் ; ஒரே ஒரு கேள்வியை ”வாஸ்தர்கள்’ இரண்டு பேரிடம் மூன்று முறை கேளுங்கள்…எத்தனை பதில்கள் வருமோ?

ஜாதகங்களை எடுத்துக் கொண்டால், கணிசமான இந்துக்கள் ஜாதகம் பார்த்துக் கல்யாணங்கள் நடத்த, கிறித்துவர்கள், இஸ்லாமியர்களிடம் இந்த வழக்கம் கிடையாது. நடந்து முடிந்த திருமணங்களில் நல்லது கெட்டது எல்லாமே இந்த இருவகைத் திருமண வாழ்க்கைகளிலும் இருக்கின்றன. ஜாதகம் பார்த்து திருமணம் பண்ணிக்கொண்ட தம்பதிகளின் வாழ்க்கை ‘ஒன்பதாவது மேகத்திலும்’, மற்றவர்கள் வாழ்க்கை ‘ஏழாவது நரகத்திலுமா’ இருக்கிறது. நல்லது கெட்டது என்பது வாழ்க்கையோடு இயல்பாய் இருக்கும் காரியங்கள். இதற்கு நாளென்ன செய்யும்; கோளென்ன செய்யும்; பாவம், அவைகளை விட்டு விடுவோமே!

அடுத்து: ஒவ்வொரு வித நம்பிக்கைகளின் மேல் எனக்குள்ள சந்தேகங்கள், கேள்விகள்….இவைகளைத் தனித்தனிப் பதிவுகளாக – சின்னச் சின்னப் பதிவுகளாக இருப்பினும் – பதிவேற்ற ஆசை…..

131. ஒரு திடீர் அவசரப் பதிவு

இது ஓர் அவசரமான, rather an unplanned, emotional and spurting பதிவு. ஊர் சுத்திட்டு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்து டி.வி.யை ஆன் பண்ணிய பிறகுதான் இன்று ‘அன்பே சிவம்’ படம் என்று நினைவுக்கு வந்தது. ஏற்கெனவே இரண்டு முறை பார்த்திருந்தாலும், இன்று என்னவோ அந்த கடைசி 25 நிமிடங்கள் பார்க்கும்போது கண்ணீருக்குள் நடுவேதான் படம் பார்க்க முடிந்தது.

What I wanted to say was this: We, the Tamilians have a great character of not recognizing great talents when the talents are quite amongst us. We are good in erecting statues posthumously.
This guy KAMAL is really great and he has not got the recognition that he deserves, not even 10% of his worth. Need to say more…? வேண்டாம் வேறு ஏதாவது சொல்லிடப் போறேன். இங்கே தகுதிகளுக்கு மரியாதை இல்லை..குப்பைகள் கோபுரம் ஏறுகின்றன. ஏன் இப்படி…?

130. ஜோஸ்யம்…5: நாடி ஜோதிடம்

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*, 2*, 3*, 4*.


பூப் போட்டு பார்க்கலாமா…? பலரையும் போல நானும் நாடி ஜோதிடம் என்றால் நாடி பார்த்து ஜோதிடம் சொல்லுவார்கள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். நாடி பார்த்து வியாதிகள், உடல் நலம் பற்றி கூற முடியும்; இதை வைத்து எப்படி வருங்காலம் உரைப்பார்கள் என்று நினைத்ததுண்டு. பிறகுதான் தெரிந்தது நாடி வந்து ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு, ஏடுகளிலிருந்து பலன் சொல்லுவார்கள் என்று. எது எப்படியோ? நடந்தது எப்படி என்னவென்று கூறிவிட்டு பிறகு மற்ற விஷயங்களுக்கு வருவோம்.என் நண்பர்கள் இருவர்; வைத்தி, ரவி. இருவருமே ஏறத்தாழ என் கேசு. அதாவது கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக ஏதுமில்லை. அதற்காக என்னைப் போல எல்லாரிடமும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பெரிதாகத் தண்டோரா போடுவதும் இல்லை. ரெண்டு பேரும் என்னை மாதிரி இல்லாம, ரொம்பவே நல்ல பசங்க; ஆனால் கடவுள், கோயில், சாமி, பூச்சாண்டி என்று ஈடுபாடு எதுவும் கிடையாது. இந்த இரண்டு பேரில் வைத்தி பேரில் உறவினர்கள் நாடி ஜோதிடம் – இதற்குப் பெயர் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் – பார்த்து, ஒலிப்பேழையில் பலன்கள் பதிந்து கொண்டுவந்து கொடுத்தார்களாம். அதை எனக்குப் போட்டுக் காட்டினான். ஆச்சர்யமாயிருந்தது. கொடுக்கப்பட்டது அவனது பிறந்த நாளும் நேரமும் மட்டுமேதானாம். அவனது குடும்பம், உடன் பிறப்புகள், தாய் தந்தையர் பெயர்கள் என்று ‘புட்டு புட்டு’ வைத்திருந்தது. இதை பார்த்த பிறகு ரவி தன்னோட கட்டை விரல் கைநாட்டு கொடுத்துப் பார்த்தான். அவனுக்கும் மிகச் சரியான தகவல்கள் தரப் பட்டன. இருவருமே ‘பொதுக்காண்டம்’ மட்டுமே பார்த்தார்கள். பார்த்தவரை, சொன்னவரை சரியாக இருந்தன. ஆச்சரியம்!!

இது எப்படி? சிலருக்கு இங்கே ஏடு இல்லை; அங்கே போங்கள் என்று கூறிவிடுவார்களாம். அப்படிச் சொல்லப்படும் இடங்களில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ பார்த்த இரண்டு பேருக்கும் ஜோதிடம் சரியாக இருந்தது.

இதுவரை கூறியுள்ளவைகளில், இரண்டாம் பதிவில் நடந்த அந்த ‘கண்கட்டு மாயம்’ எப்படி நடந்தது? மூன்றாம் பதிவில் சொன்னது போல, ‘குரு உத்தியோகம்’ என்பதை மட்டுமே சரியாக அந்த ஜோஸ்யர் சொன்னாரே, அது என்ன குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது மாதிரிதானா? இந்தப் பதிவில் சொல்லியுள்ள நாடி ஜோதிடம் எந்த அளவு சரியாக இருக்கின்றது? sampling error என்பது போல தெரிந்த இரண்டு கேசுகளில் மட்டும் சரியாக வந்த விஷயமா?

இப்படி எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பழக்க தோஷத்தில் தமிழ்மணம் பக்கம் போனால் அங்கே ‘தமிழினி முத்து’ இந்த நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவைப் போட்டிருக்கிறார். ஏன்யா, மதுரக்காரவுகளுக்குள்ள இந்த போட்டின்னு சொல்லலாம்னு அவர் பின்னூட்டப் பெட்டிக்குப் போனால், அங்கே ஹரி ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவுக்கு லின்க் கொடுத்திருக்கார். இதில் ஹரியின் பதிவில் என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர் சொல்லும் புத்தகத்தைப் படித்தால் ஒரு வேளை தெளிவு கிடைக்கலாம். தமிழினி முத்துவோ தன் சொந்த அனுபவத்தைப் பேசுகிறார். ஆக, எப்படியோ என் கேள்விகளுக்கு தமிழினி முத்து பதிலளித்து விட்டாரெனவே எண்ணுகிறேன்.

மற்றபடி இந்த நாடி ஜோதிடத்தை நம்புகிறவர்களிடம் கேட்டால், மயிர் கூச்செறியும் கதைகள் சொல்கிறார்கள். படிப்பறிவில்லாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏற்கெனவே நாடி ஜோதிடம் பார்த்த ஒருவரால் தேர்ந்தெடுக்கப் பட்டு, சிக்ஷை பெற்று, அப்படியே ராமாயணத்தை மனப் பாடமாக ஒப்புவித்தார் என்று ஒரு கதை. அகத்தியர் எழுதி, பின் தஞ்சை சரஸ்வதி மஹாலுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து பலருக்கு டிஸ்ட்ரிப்யூட் ஆனதாக இன்னொரு கதை. எனக்குத் தெரிந்த இன்னொருவருக்குக் கல்யாணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த போது அவர் நாடி ஜோதிடம் பார்க்க, அதில் சொன்ன விஷயங்கள் பின்னால் தவறாக ஆனது. இப்படியே முரண்களோடும், ஒருவித ஈர்ப்புடனும் நாடிஜோதிடம் இருந்து வருகிறது.

129. ஜோஸ்யம்..4:தேடி வந்த ஜோஸ்யர்

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*, 2*, 3*.

2001-02ஆக இருக்கலாம். கல்லூரியில் எனது அறையில் இருந்தேன். அப்போது ஒருவர் என் நண்பரும், உடன் வேலைபார்க்கும் முனைவர் சைலஸைப் பார்க்க வந்தார். நண்பர் அப்போது Studetns Services Committee-ன் convenor. ஒரு டி.வி. ஷோவுக்கு மாணவர்கள் தேவைப்படுவதாக கல்லூரி அலுவலகத்தில் சொன்னதின் பேரில் அவரை அது போன்ற விஷயங்களுக்கு in charge ஆக இருந்த என் நண்பரிடம் அனுப்பியதாகக் கூறினார். சிறிது காத்திருக்கும்படி சொல்லி அவரை அமரச் செய்தேன். உட்கார்ந்திருந்த அவரது தலை எனக்கு மிகவும் பிடித்தது. அதைப்பார்த்து எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவ்வளவு பள பளன்னு, வழு வழுன்னு இருந்திச்சு.

அவர் காத்திருக்க, நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் பையிலிருந்து சின்னப் பசங்க ஜியோமெட்ரி பாக்ஸில் இருக்குமே டிவைடர் அது மாதிரி, ஆனால் கொஞ்சம் பெரிய சைஸில் ஒன்றை எடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் ‘ஜுஜா’ வேலை காண்பித்தார். எனக்கு ஒரு curiosity வர வைக்கவே அவர் அப்படி செய்தார் என்று நன்றாகவே தெரிந்தது. எனக்கும் வந்தே விட்டது. ஆகவே அவரைப் பார்த்து ‘என்னங்க பண்றீங்க’ன்னு கேட்டுட்டேன். மனுஷன் ஆரம்பிச்சிட்டார். மனுஷ உடம்பைச் சுத்தி எனெர்ஜி இருக்கு; அத நான் இதால அளந்து அதை வச்சி நோயக் குணப்படுத்தி விடுவேன்…அது இதுன்னு ஒரே உதார்! இப்போ எதுக்கு வந்திருக்கிறார் என்றும் கூறினார். பெயர் ராசி பற்றி ஒரு டி.வி.ஷோ நடத்துவதாகவும், அதற்கு audience-ஆக மாணவர்கள் வேண்டும் என்றும் கூறினார். அப்போது தற்செயலாக அறைக்கு ஒரு மாணவன் வந்தான். அவன் சமீபத்தில்தான் சுரேஷ் என்ற தன் பெயரை பெயர் ராசி பார்த்து மாற்றி இருந்தான்; அதோடு ஒரு புதிய கல் மோதிரம் ஒன்றும் அணிந்திருந்தான். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அவனிடம் இந்த நம்பிக்கைகள் பற்றிப் பேசியிருந்தேன் – (உண்மையில அவனை அதற்காகத் திட்டியிருந்தேன்). அவரிடம் உங்களுக்கு ஏற்ற ஆள் இவன்தான்; பேசிக்கொள்ளுங்கள் என்று அவனை அவரிடம் மாட்டி விட்டேன். அவன் மோதிரத்தை வாங்கி அதையும் தன் ‘கருவி’மூலம் பரிசோதித்து, அவன் எனெர்ஜியையும் ‘அளந்து’ மோதிரத்தில் நிறைய எனர்ஜி இருக்கு என்றார். எனக்கு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நீங்கள் அளக்கும் எனெர்ஜியின் unit – அளவுகோல் – என்ன என்றேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாதவர், நான் கேள்வியை விளக்கிய பிறகு ஏதோ சொன்னார். யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாத பெயர். மாணவனிடம் microgram அளவுக்கு நிறுக்கப் பயன்படும் monobalance எவ்வளவு நுண்ணியதாக, sophisticated and intricate ஆக இருக்கிறது; ஆனால் இந்த மிக மிக நுண்ணிய அளவில் இருப்பதாக இவர் கூறும் அந்த எனெர்ஜியை இந்த ordinary looking (நானே கையில் வாங்கிப் பார்த்தேன். It was not at all any insturment worth its name)கருவியால் அளக்கிறேன் என்கிறார் என்றேன். மனுஷனுக்கு கோபம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தூபம் போட்டேன்.

இதற்கும் எங்கள் கல்லூரி மாண்வர்களுக்கும் என்ன தொடர்பு என்றேன். என்ன ஷோ? மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்றேன். மாணவர்கள் ஆடியன்ஸாக இருந்து கேள்விகள் கேட்கலாம்; அவர்களுக்கு பெயர் மாற்ற இலவச ஆலோசனைகள் கூறுவோம் என்றார். ஸ்வரூப்பா என்று நினைக்கிறேன். வெற்றிகரமாக இன்னும் டி.வி.யில் ஷோ நடத்தும் அந்த அழகான பெண்மணியின் ஷோவுக்குத்தான் இவர் ஆள் பிடிப்பதாகக் கூறினார்.live show என்றால் நான்கூட வந்து கேள்வி கேட்கலாம் என்றேன். ஏற்கெனவே கோபத்தில் இருந்த மனிதர் உங்கள மாதிரி ஆளையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அதற்குள் நண்பர் வரவே, அவரிடம் தன் வேண்டுகோளை வைத்தார். நண்பர் பாவம்..டி.வி. எல்லாம் பார்க்காத மனுஷர். இவர் வேறு சரியென்று சொல்லிவிடக் கூடாதே என்று நானே முந்திக்கொண்டு, ‘இந்த மாதிரி மூட நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி ரோட்டில் போகும் ஆட்களை வைத்து நடத்திக் கொள்ளுங்கள்; ஏன் மாணவர்களைக் கெடுக்கிறீர்கள்’ என்றேன். மனுஷனுக்கு ரொம்ப கோபம் ஆகிப் போச்சு. ‘உங்கள் மாதிரி ஆட்களெல்லாம்…..என்று ஏதோ சொல்லி அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனார். இந்த மனிதர்தான் இப்போது அதே டி.வி.யில் எனெர்ஜி மருத்துவம் என்று ஒரு தனிக்கடை போட்டிருகிறார். பெயரென்ன…Dr.(?!)சத்திய மூர்த்தியோ என்னவோ…?

128. International Tamil Bloggers’ Conference 2006(1)

06.Feb 02:INTERNATIONAL TAMIL BLOGGERS’ CONFERENCE 2006 (1)

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் மாநாடு.

கடந்த ஆறாம் தேதி ( 06.02.’06) மதுரையம்பதியில் சர்வதேச தமிழ் இணையப் பதிவாளர்களின் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தேறியது. நியூஸிலாந்திலிருந்து “துளசி தளம்” என்ற தமிழ் வலைப்பதிவைச் சிறப்பாக நடத்தி வருபவரும், ‘மந்திரச்செடியக்கா’என்று பதிவர்கள் பலராலும் அன்போடு அழைக்கப்படுபவரும், ‘பின்னூட்ட நாயகி’ என்ற சிறப்புப் பட்டமும் பெற்ற திருமதி துளசி கோபால் அவர்கள் தன் கணவர் திரு. வேணுகோபால் அவர்களுடன் வந்திருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

அன்று இரவு 9 மணிக்குக் கூடிய இந்த மாநாடு நடந்த அரங்கம் முழுவதுமாக நிறைந்திருந்தது. எல்லா மேசைகளிலுமே ஆட்கள் நிறைந்திருந்தார்கள். (ஆனால், எங்கள் மேசையைத் தவிர மற்ற மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் யாரென்று யாரறிவாரோ?!) மதுரையம்பதியிலிருந்து தமிழ்ச்சேவையே எங்கள் உயிர் மூச்சு என்று நீண்ட நெடுங்காலமாக (சென்ற டிசம்பர் 26-ம் தேதியிலிருந்து, அதாவது கடந்த 41 நாட்களாக) இடையறாது தமிழ்மணத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப் பணியாற்றிவரும் திரு. ‘காக்கா பிரியன்’ அவர்களும், அடியேனும் திரு. கோபால் & திருமதி துளசி அவர்களோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டோம். சந்தித்த முதல் வினாடி முதல் நால்வருக்குள்ளும் பலகாலமாக பழகிய நண்பர்களுக்குள் இருக்கும் ஓர் இறுக்கம் இருந்தது.
நட்புரிமையோடு பதிவுகளைப் பற்றியும் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் என்று பேச்சு நட்பு வளையத்தில் வளைய வந்தது. துளசி அவர்கள் எப்படி இதுபோல ஒரு நல்ல வலைப்பதிவராக இருக்கிறார் என்பதற்கு அன்று பதில் கிடைத்தது. திரு. கோபால் அவர்கள் தன் துணைவியாரின் இடுகை பற்றியும், அந்த இடுகைகள் மூலம் திருமதி துளசிக்குக் கிடைத்திருக்கும் நல்ல நட்பு வட்டத்தையும் பற்றி நன்குஅறிந்துள்ளது மட்டுமின்றி, பல இடுகைகளைப் பற்றிய நல்லதொரு பரிச்சயத்தையும் வைத்துள்ளார். வெறும் வாசிப்பாளனாக மட்டுமின்றி, துணைவியாருக்குப் பக்க பலமாகவும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. துளசியின் நட்பு பாராட்டும் குணம் பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்ததே! அதேபோலவே திரு கோபால் அவர்களும் நட்புணர்வு நிறைந்தவராக இருந்தது மகிழ்ச்சியாயிருந்தது.

“தருமிக்குப் பொற்கிழி”

தருமி1 – அதாவது ஒரிஜினல் தருமிக்கு – அந்த ‘ஆயிரம் பொற்காசுகள்’ கிடைத்ததா என்று தெரியாது. பாவம், பாண்டிய மன்னனுக்கும், சிவபெருமானுக்கும் நடந்த அந்த ‘திருவிளையாடலில்’ தருமி என்ன ஆனார், அவருக்கு பொற்காசுகள் கிடைத்தனவா இல்லையா என்றே தெரியாது போயிற்று. ஆனால் அவர் பெயரை வைத்துக்கொண்ட எனக்கு நியூஸிலாந்திலிருந்து வந்திருந்த தம்பதியர் இருவரும் இணைந்து ஒரு ‘பொற்கிழி’ ஒன்று அளித்துப் பெருமைப்படுத்தினார்கள். (படங்களில் காண்பதுவே அந்தப் பொற்கிழி.) (இங்கே மனசுக்குள் எல்லோரும் ஒரு தடவை கைதட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.) வீட்டுக்கு வந்து பேத்தி ஷ்ரேயாவுடன் இந்தப் பொற்கிழியைப் பிரித்து ஆசை தீர சாப்பிட்டோம்!

9 மணிக்கு ஆரம்பித்த மாநாடு நேரம் போனதே தெரியாமல் 11.15க்கு இனிதே முடிவடைந்தது.(இரண்டே இரண்டு மதுரைப் பதிவாளர்களும், ஒரே ஒரு வெளிநாட்டுப் பதிவாளரும் மட்டுமே கலந்து கொண்டாலும், இது ஒரு சர்வதேச மாநாடுதானே! எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?) சென்னையில் வரும் 12-ம் தேதி நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு மாநாட்டை வேண்டுமானால் INTERNATIONAL TAMIL BLOGGERS’ CONFERENCE 2006 (2) என்று நடத்திவிட்டுப் போகட்டுமே.

127. திருமாவின் திருநீறும், முகமூடியின் பத்ம வியூகமும்…

Image hosting by TinyPic

உள்ளே போகும் முன்:
முகமூடியின் முதல் பதிவு: (தமிழ்) கடவுள் நம்பிக்கை இருக்கா? (பதிவு நீக்கப்பட்டு விட்டது)

பின்னூட்டமிட நினைத்து, பதிவில்லாமையால் தனிப் பதிவாய் நானிட்டது: திருமா நெற்றியில் திருநீறு

முகமூடி மீண்டும் பதிப்பித்த பதிவு: (தமிழ்) கடவுள் நம்பிக்கை இருக்கா? (பழைய புகைப்படம் புதிய கருத்துக்களுடன்)

மறுபடி முகமூடியிடமிருந்து மிக நீண்ட பதில்கள் / கேள்விகள்/ தன்னிலை விளக்கம் எல்லாமுமாக ‘பத்மவியூகம்’ என்ற தலைப்பில் தனிப்பதிவாக.

இப்போது தருமி:
முகமூடி, உங்கள் மிக நீண்ட பதிலில் எனக்குரிய பதிலாகவுள்ள முதல் பகுதியை இங்கு மீள் பதிவு செய்து, அங்கங்கே என் பதில்களைத் தரலாமென நினைக்கிறேன். அதோடு, இரண்டு
பகுதிகளையும் வாசிப்பவர்கள் அவர்களது சொந்த முடிவை அவர்களே எடுத்துக்கொள்ள உதவியாக இருக்குமென்பதால் இம்மீள் பதிவு.

பதில்கள் தருவதற்கு முன்: எனக்குப் பிடித்த, பெரும்பாலும் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒரு விஷயம்: Call a spade a spade. உங்கள் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி என்ற பதிவில் நான் கூறியிருந்தது: ” நம்ம Dharumi சொல்றது என்னன்னா: உங்கள் பதிவில் மிகவும் பிடித்தது இதுவே….”. இந்தப் பதிவின் கரிசனம் பிடித்தது; பிடித்ததென்றேன். உங்கள் திருமாவைப் பற்றிய பதிவைப்பற்றிய எனது கருத்து – தனிமனிதக் காழ்ப்பு. அது பிடிக்கவில்லை; பிடிக்கவில்லையென்றேன்.

நெற்றியில் நீறு இடுவது – நம்பிக்கையோடோ,நம்பிக்கையில்லாமலோ – அவ்வளவு பெரிய கண்டனத்துக்குரிய, கிண்டலுக்குரிய விஷயமா என்ன? உங்கள் வீட்டில் நீங்கள் ஏதாவது பூசை செய்யும்போது நான் வர நேர்ந்து என் முன் ஆரத்தித் தட்டை நீட்டினால், உங்களுக்கு மரியாதை தர, கற்பூரத்திற்கு மரியாதை செய்துவிட்டு, நீறை எடுத்து நெற்றியில்
இட்டுக்கொள்வேனே… ஒரு மனிதனின் இட்டுக்கொண்ட – எக்காரணம் கொண்டாயினும் – ஒரு வெளி அடையாளம் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது புரியாத விஷயம் எனக்கு.

இனி உங்கள் வார்த்தைகள்:

//”நான் திருமா பட்டை போட்டு விகடனில் வந்திருந்த புகைப்படத்தை போட்டு ஒரு பதிவு எழுதினேன். அதை எழுதிய பின்புதான் திருமா நாத்திகர் இல்லை என்பது அறிய வந்தது.
திருமாவுக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை சரிபார்த்துவிட்டு மீள்பதியலாம் என்று அதை மறைத்து வைத்தேன்.

இதன் தொடர்ச்சியாக தருமி திருமா நெற்றியில் திருநீறு என்று ஒரு பதிவு எழுதுகிறார். மனசாட்சி மழுங்கியவர்களின் பார்வையில் படாமல் போகும் (என் வார்த்தைகளா இவை? Why do you put your words into my mouth??)என்று இரு விஷயங்களை
அதில் குறிப்பிடுகிறார். அட, தருமியின் மனதை தைத்த, அவரின் மனதில் நின்ற அந்த இரு விஷயங்களை பற்றி அவராவது விரிவாக விளக்கியிருக்கலாம், ஆனால் முகமூடியின் முகத்திரையை கிழிப்பதே பதிவின் பிரதான நோக்கம் என்பதால் அவரும் அவ்விரு விஷயங்களை விளக்கவில்லை. (இன்னும் கொஞ்சம் நன்றாக வாசிக்கணும்; ஒன்று இரண்டு என்று எண்களிட்டல்லவா எழுதியுள்ளேன்.)

அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை
வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று
கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று
கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே “போதிய அளவு” கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? (எவ்வளவு அழகான அர்த்தமுள்ள கேள்விகள். இப்படி நீங்கள் கேட்டிருந்தால் உங்களோடு நானுமல்லவா சேர்ந்திருப்பேன்.)இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா? (***)

இரண்டாவது சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் திருமாவின் பெற்றோர் ஒண்டு குடிசையில் நாட்களை நகர்த்தியது. “ஒரு அரசியில்வாதியின் வீட்டிலா இப்படி” என்று தருமியே ஆச்சர்யம் கொள்கிறார். தருமி கொள்ளலாம், ஆனால் முகமூடி கேட்டால் அதில் இருக்கும் உள்குத்து பார்ட் 1 பார்ட் 2 வெளிவரும். (***)

என் கண்ணில் தைத்த இந்த விஷயத்தை பற்றியெல்லாம் நான் எதுவும் எழுதவில்லை. சமீப போராட்டங்களின் போது பெரியாரை முழங்கிய திருமாவை நாத்திகவாதி என்று தவறாக நினைத்து இவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று ஆச்சரியத்துடன் ஒரு பதிவை போட்டுவிட்டேன். உடனே விபூதிக்கு முகமூடி ஹோல்சேல் ஏஜன்ஸி எடுத்திருக்கிறாரா? என்று கேட்கிறார். முகமூடி தவறை உணர்ந்து பதிவை தூக்கினார் என்பது உண்மைதான். ஆனால் அது அவர் எழுதிய பதிவு தவறானது என்பதால் அல்ல, திருமா நாத்திகராக இருப்பார் என்ற அபிப்ராயம் தவறாக இருந்ததால். இப்பொழுதும் நான் போட்ட அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. திருமாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா (தம்பி முகமூடி! இது நமக்குத்தேவையா என்பதுதானே அய்யா என் கேள்வி; அவனவன் நம்பிக்கை அவனவனுக்கு. இதில் கேள்வி கேட்க நீங்கள் யார்; நான் யார்?) என்று வேறு யாராவது பட்டை போட்டோவோடு பதிவு எழுதினால், தமிழ் கடவுள் வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்ற விளக்கமெல்லாம் கிடைக்கும். நான் எழுதினால் அது கண்களை உறுத்தும் பதிவு. (***)

that said, இங்கே தருமியின் ஒரு முக்கியமான எதிர்பார்ப்பை குறிப்பிட வேண்டும் “திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும்” தன்னை போலவே மற்றவர்களும் சிந்தித்து, அதை அவர் போலவே வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. (ஆம். சாதாரணனாகிய எனது அனுபவத்தில் இதுவரை என் மனதில் ஏறுவது, ஏறியது பெரும்பான்மையாக மற்றவர்கள் மனத்திலும் ஏறியதாகவே உணர்ந்துள்ளேன். பதிவுலகமோ, நீங்களோ இதில் விதி விலக்குகளாக இருக்குமோ?)இல்லையெனில் அவராக சில யூகங்கள் செய்து கொள்வார். பதிவுகள் என்பது personal diary of free minds/common public என்பது மாறி சிற்றிலக்கிய சம்மேளனமாக மாறி வருகிறது என்பதை பல இடங்களில் நான் பதிவு செய்திருக்கிறேன்.. இங்கேயும் அதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வலையுலகத்துக்கு ஒரே ஒரு தருமி போதும். (நன்றி) மற்றவர் அவரவர் பாணியில் சிந்திக்கட்டும், எழுதட்டும். (சரி…சிந்தித்து எழுதுங்கள்)

அவரின் வாதமான “முகத்திரைக்குள்ளிருந்து எழுதுவதால் மட்டுமே பதிவுகளில் ‘இத்தகைய தரம்’ அமைந்துவிடுகிறதோ” என்பது மிகவும் போலியாக எனக்கு தோன்றுகிறது. தருமி என்ற புனைபெயரில் எழுதும் பதிவர் ரொம்ப நாள் கழித்தே தம் உண்மையான பெயர், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டார். அந்த ஒரே காரணத்துக்காகவே அடுத்தவரின் முகத்திரையை பற்றி கேள்வி கேட்கும் உரிமையை அவராகவே எடுத்துக்கொள்கிறார். (முகமூடி, இதோ நீங்கள் சொல்லிய வார்த்தைகள்: ‘இத்தகைய தரம்’ அமைவதற்கு காரணம் முகத்திரை மட்டுமே என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்” Do you want to eat your own words?) அவரின் வாதத்தின் படி அவர் படம் வெளியாவதற்கு முன் ஒரு தரமும் இப்பொழுது வேறு தரமும் உள்ளதா அவர் எழுத்தில். இல்லை, அவர் புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளை குப்பை
பதிவுகளாக கணக்கில் கொள்ளலாமா என்பதை அவர் தயவு செய்து சொல்லட்டும். (நீங்களே சொல்லுங்களேன்.) அப்படி ஒருவருக்கு அவர்களின் மதிப்பீடுகளை
பொறுத்து உயர்வு/தாழ்வாக தெரியும் விஷயங்கள் எல்லாருக்கும் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எனவே தயவு செய்து, நீண்ட நாட்களாக முகமூடி என்ற பெயரில்/அடையாளடத்தில் எழுதி வரும் என் முகத்திரை பற்றி மீண்டும் விமர்சனம்
செய்யாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (மன்னிக்கவும்; உங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து என் கருத்துக்களை மாற்றும் எண்ணம் இல்லை; என் முடிவு: புனைப் பெயரில் எழுதுவது தவறில்லை; புனைப்பெயருக்குள் ஒளிந்து கொள்வது தவறுதான் – பெயரே இல்லா பூச்சிகளாக வலம் வருவதை விட இது பரவாயில்லை என்றாலும்.)

பதிவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய வாக்கியத்தை ஒரு சக பதிவர் என்ற முறையில் என் மேல் உள்ள அக்கரையில் சொல்கிறார் என்பதாக மட்டும் நான்
எடுத்துக்கொள்கிறேன். அக்கரைக்கு நன்றி. (புரிந்தமைக்கு நன்றி)அதே சமயத்தில் சமீபத்திய “அங்கீகரிப்பால் உயரத்தில் வைக்கப்பட்டுப் புகழ் பெற்றதால் அதற்குறிய பொறுப்போடு” என்ற அடைமொழியெல்லாம் வேண்டாம். நான் அந்த அங்கீகரிப்பை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். ( உங்களுக்கு அப்படி இருக்கலாம். ஆனால் என் போன்ற ஆட்கள் எட்ட முடியா இடத்தில்,உங்களுக்கு வோட்டளித்தவர்களால் உட்கார வைக்கப்பட்டு விட்டீர்கள். உங்கள் கருத்து எப்படியோ; உங்களுக்கு வோட்டளித்தவர்கள் உங்களுக்கு அளித்துள்ள அங்கீகாரம் அது; உதாசீனப்படுத்துவது தவறென்றே நினைக்கிறேன்.)அப்படிமுதலில் நான் என் கருத்துக்களை பதியும் ஒரு பதிவர். அங்கீகாரம் என்பது
தணிக்கை என்ற ஆயுதத்தை தாங்களாக கையில் எடுக்கும் ஒரு நிலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அதனால் என் கற்பனையை பாதிக்கும் பாரமாக மாறும் எனும்பட்சத்தில் அந்த
முள்கிரீடத்தை (??) நான் சுமக்க தயாராயில்லை. ஆகவே உங்கள்
விமர்சனங்களை தாராளமாக எழுதுங்கள். ஆனால் என் மேல் பிம்பம் எல்லாம் வேண்டாம்.

நீங்கள் உங்கள் பதிவில் போட்டிருந்த நல்ல படத்தை இங்கு போடவில்லை. காரணம் 1. முடியவில்லை; 2. தேவையில்லை. நீங்கள் எப்படியோ நான் ஒன்றும் கத்தியோடும், வாளோடும் பொருத வரவில்லை. இந்த நிமிடம் வரை, உங்கள் பதிவுகளில் எப்போதும் போல் பிடித்ததைப் பிடிக்கிறதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லவே நினைத்துள்ளேன். இல்லை..இல்லை..வேண்டாம் என்றால் கூறிவிடுங்கள்; உங்களுக்குப் பின்னூட்டமிடுவதை முழுமையாகத் தவிர்த்து விடுகிறேன்.

பின் குறிப்பு: //”வலையுலகில் அனைவருக்கும் OPINIONS இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி மேகம் போல் வலையுலகை சூழ்ந்திருக்கும் ஒரு மாய அரசியல் இருக்கிறது. வெளிப்படையாக பேசாவிட்டாலும் அது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது….என் முகமூடிக்கு பின்னிருக்கும் முகமும் என் பின்புலம் பற்றிய அனுமானங்களும் என் கருத்தை விட முன்னெடுத்துச்செல்லப்படுவது எதனால்?….” //-

-இந்தச் சூழலுக்குள் இதுவரை நான் சிக்கிக்கொண்டதில்லை. ஒருவேளை (***) என்று நான் குறியிட்டிருக்கும் இடங்கள் இந்தச் சூழலின் பிரதிபலிப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், அதனால் அவைகள் எனக்குத் தொடர்பில்லாதவைகள் என்ற எண்ணத்தில் அவைகளுக்குப் பதில் சொல்லத்தேவையில்லை என்று விடுகிறேன்.

126. தமிழ்மணத்தின் அடுத்த நடவடிக்கை !

மேலேயுள்ள படம் மதுரையின்

ராணி மங்கம்மாள் சத்திரம்.

————————————————————————————-

“புதிய பதிவர்கள் அனைவரும் தங்கள் முழு விவரங்களை புகைப்படங்களோடு தங்கள் பதிவு ஆரம்பிக்கும் பொழுதே பொதுவில் தந்து விட வேண்டும். ஏற்கெனவே பதிவுகள் வைத்திருப்பவர்களும் தங்கள் முழு விவரங்களைத் தர தமிழ் மணம் கோருகிறது.

ஒருவேளை புனைப்பெயரில் எழுத நினைக்கும் பதிவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்மண நிர்வாகிகளுக்குத் தந்துவிட வேண்டும். தகவல்களும், புகைப்படங்களும் சரிபார்க்கப்பட்ட பின் அவர்களது பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்படும்.”

———இப்படி ஓர் அறிக்கை தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து பின்னால் எப்போதாவது வர வைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த இடுகை.

காசி (வாசிக்க: தமிழ்மண நிர்வாகிகள்)முன்பு எடுத்த முடிவில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததுண்டு. ‘தூக்கப்பட்டவர்களுக்கு மட்டுமாவது தூக்கப்படுவதற்கான காரணமும், அவர்களே தங்களைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஒரு சந்தர்பத்தைக் கொடுத்திருக்க வேண்டும்’ என்பது என் எண்ணமாயிருந்தது. அதை நான் அப்போதே பதிவும் செய்திருந்தேன் பின்னூட்ட வாயில்களாக.

ஆனால் இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்க்க எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. கல்வெட்டு கூறிய / கேட்ட கேள்விகள் எனக்கு முக்கியமாகவோ முழுமையாகவோ தெரியவில்லை. காசியை நோக்கி வீசப்பட்ட அழுக்குகளுக்குப் பிறகுதானே இந்த மட்டுறுத்தல்; ஏன் அதற்கு முன்பே -டோண்டு விஷயத்திலேயே – எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு எனக்குத் தோன்றும் இரு பதில்கள்: 1. டோண்டு தன்னால் முடிந்த அளவு முயன்று வந்தார். அவர் சொன்னதற்குப் பிறகும் நான் மட்டுறுத்தலை – என் பழைய blogger.com-ல் அனானிகளை நிறுத்தும் முடிவை எடுக்காமல்தான் வைத்திருந்தேன். எனக்கு ‘வயிற்று வலி’ வந்த பின் தான் அம்முடிவை நானும் எடுத்தேன். வலி அப்போதுதான் நன்கு புரிந்தது. நல்ல வேளை கல்வெட்டு அந்த வலியை அறிந்தாரில்லை போலும். இதில் பெண் பதிவாளர்களே மிகவும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். 2. சில பதிவர்களின் பின்னூட்டங்களில் வந்த சில கேவலமான பின்னூட்டங்களை அந்தப் பதிவர்கள் உடனே நீக்கும் அளவிற்குகூட நாகரீகம் தெரியாமல் இருந்தது, வந்த அந்த கேவலப் பின்னூட்டங்களைவிடவும் கேவலமான செயல். நானா எழுதினேன்; எழுதினவனைப் போய்க் கேள் என்ற தத்துவம் போலும். நமக்கு நாகரீகம் தெரியவில்லை யென்றால் நிச்சயம் யாராலாவது அது ஊட்டப் படவேண்டும்.இது தமிழ்மணத்தாரிடமிருந்து வந்த மடலின் மூன்றாவது பாயிண்டாகக் கூறப்பட்டுள்ளது. ( Those bloggers who have consciously allowed vulgar comments to remain in thier blogs are informed that their blog post updates will not be shown in thamizmanam thereafter.)

அதோடு, முதல் முறை காசி எடுத்த முடிவு கொஞ்சம் – கொஞ்சம் என்ன கொஞ்சம் – நல்ல காட்டமான முடிவுதான். ஆனால் இம்முறை அவர்முடிவை பதிவர்கள் கையில் ஒப்படைத்து விட்டார். பொதுநலம் கருதி நீங்களே செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி செய்யாவிடில் விளக்கு அவிக்கப்பட்டு விடுமென்றோ நீங்கள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றோ சொல்லவில்லை – thamizmanam will not be able to offer the comment-status udpate service for those blogs that have not enabled comment moderation.

நான் தான் சத்திரம் கட்டிவிட்டேன் – பொதுநலனுக்கு. யார் வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் என்று சொன்ன பிறகு,சிலர் கண்டபடி ‘அசிங்கம்’ செய்தால் இங்கே இப்படியெல்லாம் செய்யாதே என்றால், அதுதான் நீ பொதுவுக்குத்தானே செய்தாய்; இப்போது ஏன் கட்டுப்பாடு விதிக்கிறாய் என்றால் – ஒரே பதில்: சத்திரத்துக்கு உள்ளே வந்தால், இது பொதுவிடம்; சுயக்கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்ற நியாயத்தை நியதியாய் எல்லோரும் மனதில் கொண்டிருக்க வேண்டும்; இல்லையென்றால் ‘சத்திரத்துக்காரன்’ சத்தம் போடத்தான் செய்வான்; போடத்தான் வேண்டும். எவ்வளவு ஆசை, ஆசையாக அந்தச் சத்திரத்தைக் கட்டிப் பேணி வந்திருப்பான்; வந்திருக்கிறான். உள்ளே வந்து படுத்துக்கொண்டு, முகத்தையும் மூடிக்கொண்டு ஊழலிட்டுக்கொண்டு இருந்தால் கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டும் என்றுதான் என் போன்றோர்க்குத் தோன்றும். ஆனால், அப்படி ஏதுமின்றி காசி அமைதியாகச் சொன்னதால்தான் இந்த கேள்விகளோ.

கல்வெட்டு:”*எனது பதிவில் இதுவரை யாரையும் தாக்கிப் பின்னூட்டங்கள் வந்ததும் இல்லை. அப்படி வந்து இருந்தால் காசி என்ன வேறு யாரும் சொல்லாமலே நான் இவைகளைச் செய்து இருப்பேன்.” – இப்படி எல்லோரும் செய்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லையே அய்யா! அப்படி இல்லாததினால்தானே எல்லோரும் இதைச் செய்துவிடுங்கள் என்று கூறும்படி ஆகிவிட்டது.

கல்வெட்டு: “2.போலிப் பின்னூட்டங்கள் பற்றி டோண்டு பல காலமாக புலம்பி வருகிறார். அப்போதெல்லாம் நீங்களும் ,பல எக்கியவாதிகளும் சொன்னது.

-பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை.

-தமிழ்மணம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு திரட்டி மட்டுமே. “// – இப்போதும் பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை; ஆகவே இதைச்செய்துவிடுங்கள் என்று தமிழ்மணம் கேட்கிறது.

“நிர்வாகி நேரடியாகப் பாதிக்கப்பட்டால் மட்டுமே நல்லது நடக்கும் என்றால் ..அது நல்ல தீர்வல்ல” – இப்போதாவது தீர்வு வந்ததே என்றும் பார்க்கலாமே. வைத்துக் கொள்ளுங்களேன் – தனக்கு வந்தால் தான் தலைவலியும், காய்ச்சலும் என்று. என்ன, (கல்வெட்டு)உங்களுக்கு இதுவரை அந்தத் தலைவலியும், காய்ச்சலும் வந்ததில்லை; அதனால் அந்த வலி தெரியவில்லையென்று நினைக்கிறேன்.

கல்வெட்டின் இந்த இடுகையில் ரகு என்பவரின் எழுத்தில் உள்ள கோபமும், அவரது மொழி நடையும் வரம்பு மீறி இருப்பதாகவே, கண்டிக்கப்படுவதற்குரியதாகவே எனக்குப் படுகிறது.

இவர்கள் சொல்லுவதையும் கேட்போமே:

நண்பன்: “மட்டுறுத்துங்கள். அது ஒரு வலைப்பதிவாளர் தன் சகவலைப்பதிவாளருக்குக் கொடுக்கும் மரியாதையாகும். பின்னூட்டங்கள் மூலம் பிறர் மீது சேறடிக்க வழி திறந்து வைப்பது அநாகரீகம்.”

சுந்தரமூர்த்தி:கருத்து சொல்வதற்குள்ள சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, சொன்ன கருத்துக்கு பொறுப்பேற்பதும் முக்கியமானது. அப்படிப் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடியவர்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தான் நாம் பாதுகாக்க முயலவேண்டும். (முகங்களற்றோ) போலி முகங்களுடனோ எச்சம் கழித்துவிட்டு பொறுப்பேற்காமல் ஓடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்காக சிலர் போராடுவது வேடிக்கையாக உள்ளது.
கல்வெட்டின் இடுகைகளின் மேலும் அவரது பலூன்-கலையைக்கொண்டு செய்யும் நற்காரியங்களுக்காகவும் அவரின் மீது எனக்கு மிக மரியாதை உண்டு. அவர் தன் கருத்தை மாற்ற இந்த முயற்சி பயன்படுமா என்று தெரியவில்லை. அப்படி ஏது சிறிதாவது நடந்தால் மகிழ்வேன்.


தருமி
: என்னைப் பொறுத்தவரை வரம்பு மீறிவிட்டார் என்ற உங்கள் குற்றச்சாட்டைத் தாங்கி நிற்கும் காசியையும், நாகரீகம் சிறிதும் இல்லாது எழுதும் முகம் காண்பிக்க மறுக்கும் அந்தச் சிலரையும் எப்படி ஒரே தட்டில் வைத்து உங்கள் தீர்ப்பை எழுதுகிறீர்கள். கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் நண்பர்கள், அந்தக் கருத்துக்கள் யோக்கியமான கருத்துக்களாகவும், சொல்லும் மொழி வரம்பு மீறாமலிருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் யோசிப்பதாகத் தெரியவில்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.