125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2

ஜோதிடத் தொடர்: முந்திய பதிவு: 1*.  

 

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவு: 1

ரொம்ப காலத்துக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம். ஜோஸ்யத்தோடு முழுவதுமாக சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று வரை பதில் தெரியாத ஒரு கேள்வி மட்டுமல்லாமல் திரும்பிப் பார்க்கையில் கொஞ்சம் interestingஆக இருப்பதால் உங்களோடு பங்கிட்டுக் கொள்ள ஆவல்.

அந்த ‘கனாக்காலம்’- கல்யாணம் எல்லாம் ஆவதற்கு முந்தி, சுதந்திரப் பறவையாக இருந்த போது – அநேகமாக 71-ம் ஆண்டாக இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாள். நண்பன் ஆல்பர்ட்டின் வீட்டில் (தவுட்டுச் சந்தை பக்கத்தில் ஒரு சந்து) யாருமில்லை. எங்கள் ராஜ்யம்தான். ‘கொண்டாடி விடுவோம்னு’ திட்டம். அப்டின்னா, அந்தக் காலத்தில பெருசா ஒண்ணும் இல்லீங்க; மதியம்வரை அரட்டை; மதியம் அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item: pine apple juice; சாயுங்காலம் ஒரு சினிமா (அநேகமா, சிந்தாமணி அல்லது சென்ட்ரல் தியேட்டர்; இல்லைன்னா நம்ம ரீகல் தியேட்டர்!) – வேறென்ன பெருசா அந்த ‘அறியாப் புள்ளைக’ காலத்தில? ஒரே dry period தானே! ம்..ம்ம்..வாழ்க்கையே அப்போ dry தான் போங்க!!

அரட்டை போய்க்கொண்டிருந்தது. வெளியே கைரேகை பாக்கலியான்னு ஒரு சவுண்டு. சும்மா போன சனியன விலைக்கு வாங்கிறது மாதிரி நண்பன் அந்த ஆளை உள்ளே கூப்பிட்டான். ‘வேண்டாண்டா’ என்றதற்கு, ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ அப்டின்னுட்டான். என்ன, அவனுக்கு அப்போ பொண்ணு பாத்துக்கிட்டு இருந்த நேரம்! வந்தவனுக்கு எங்க வயசோ, ஒண்ணிரண்டு கூடவோ இருக்கலாம். பேசிய தமிழ் மலையாளம் கலந்து இருந்தது. இஸ்லாமிய வெளி அடையாளங்கள். தோளில் தூளி மாதிரியான ஒரு பை. கையில் உயரமான குச்சி ஒன்று. தலைப்பாகை. உள்ளே வந்து கைரேகை பார்க்க ஆரம்பித்தான். வழக்கமாய் எல்ல ஜோஸ்யர்கள் சொல்லும் கதைகளை எடுத்து விட்டான். அதற்குத் தட்சணையெல்லாம் ரொம்ப ‘சீப்’தான். அந்தக் காலத்தில் என்ன எல்லாம் ஒரு ரூபாய்க்குள் இருந்திருக்க வேண்டும்.

அது முடிஞ்சது. பிறகு மெல்ல புதுசா ஒரு சரடு விட்டான். ‘உனக்கு வாகனத்தில் ஒரு கண்டம் இருக்கு…அது போகணும்னா..’ என்று ஆரம்பிச்சதும் நான் அவன் முதுகிற்குப் பின்னால் போய் நண்பனிடம் சைகையில் அனுப்பிவிடு என்றேன். நண்பன் என்னைப் பார்த்ததிலிருந்து நான் பின்னால் இருந்து என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு,’முன்னால வா’ என்றான். தோரணையும் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. பேச்சில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குறைய ஆரம்பிச்சது. கண்டம் போறதுக்கு நாகூர் பள்ளிவாசலில் காணிக்கை போடணும்னான். உடனே சுதாரிச்சிக்கிட்டான். ஏன்னா, நம் எல்லார் வீட்டிலும்தான் சுவர் இருக்கோ இல்லியோ சாமி படங்களா மாட்டியிருப்போமே..அதுமாதிரி அங்க இருந்த படங்களைப் பார்த்ததினால், ‘உங்களுக்கு அந்த நம்பிக்கையில்லைன்னா, வேளங்கண்ணி மாதா கோயிலில் காணிக்கை போடணும்னான். நான் ‘அடுத்த மாதம் கூட நாங்க போறோம்; அப்போ போட்டுக்கிறோம்’னு புத்திசாலித்தனமா சொன்னேன். ‘அவன சும்மா பேசாம இருக்கச் சொல்லு; அதான் உனக்கு நல்லது’ அப்டின்னு நண்பனிடம் சொல்ல, ஆல்பர்ட் ‘சும்மா இருந்து தொலை’ அப்டிங்கிறது மாதிரி ஒரு லுக் உட்டான்.

இதற்குப் பிறகு எனக்கு வரிசையா ஆர்டர் போட ஆரம்பித்தான். கொஞ்சம் உப்பு கொண்டா என்றான். ஒரு கை உப்பு. ஒரு துணியை எடுத்து அவனுக்கு முன்னால் விரித்து அதில் குவித்துக் கொண்டான். அடுத்த ஆர்டர்: ஒரு தம்ளரில் தண்ணீர். ‘டாண்’ணு கொண்டுவந்து வைத்தேன். ஒரு மெழுகுதிரி (கி.வீடுகளில் இதற்கா பஞ்சம்?) உடனே பணிந்தேன். எப்படி திடீரென நான் இவ்வாறு சாதுவாக மாறினேன் என்று கேட்கிறீர்களா? உப்பு கேட்பதற்கு முன்பு அவன் செய்த ஏற்பாடுகள் அப்படி என்னை ஆக்கியிருந்தன. முதலில் துண்டை விரித்தானா? அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு. அடிவயிற்றில் ஒரு ‘ஜில்’..இல்ல..இல்ல, ‘ச்சில்’ (chill). அதைவிட அடுத்து எடுத்து வைத்த பொருள் இன்னும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. ஒரு சிறு குழந்தையின் கை – மணிக்கட்டு வரை. காய்ந்த எலும்பும் தோலும் ஜவ்வுமாக…அம்மாடியோவ்..! இந்த ‘செட்டப்’ அவன் செய்ததும் அதுவரை இருந்த rebellious mood எல்லாம் துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடியே போச்சு. தலைவர் சொன்னார்; நான் செய்தேன்…அவ்வளவே!

‘நான் ஒண்ணு பண்றேன்; அதப் பார்த்த பிறகு உனக்கு நம்பிக்கை இருந்தா காணிக்கை கொடு; இல்லாட்டி ஒண்ணும் வேண்டாம்’ அப்டின்னான். உளுக்கு உளுக்குன்னு மண்டைய ஆட்டினோம்; வேற வழி? மெழுகுவர்த்தியை ஏற்றினான். அதை உப்பின் நடுவில் வைத்தான். அப்புறம் ஆல்பர்ட் கட்டியிருந்த வேட்டியின் (அது அவனோட அண்ணனுடையது; புத்தம் புது வேட்டி)நடுவிலிருந்து ஒரு சாண் அளவிற்கு எடுத்து அதைத் திரித்துக் கொண்டான். அடுத்தது நாங்கள் எதிர்பார்க்காதது. அதை அப்படியே நெருப்பில் காட்டி எரித்தான். நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்; நல்லா எரிஞ்சுது. அவன் வேட்டியைப் பிடித்திருந்த இடம் வரை எரிய விட்டான்; அதன் சூடு தாங்காமல் கையை மாற்றி மாற்றிப் பிடித்து வேட்டியை எரித்தான். ஏறக்குறைய ஒரு அடி விட்டத்திற்கு வேட்டியை எரித்திருக்க வேண்டும். மனசுக்குள் ஆல்பர்ட் அவன் அண்ணனிடம் வேட்டிக்காக வாங்கப் போகும் மிதி என் கண்முன்னால் விரிந்தது; அந்தக் காட்சி நல்லாதான் இருந்தது! எரித்தபின் வேட்டியின் முனையை வைத்து எரிந்த பகுதியை உள்ளே வைத்து ஒரு கயிற்றால் கட்டினான். எரிந்திருந்த கரித்தூளை எடுத்து என் கண் முன்னாலேயே அந்த தம்ளர் தண்ணீரில் கரைத்தான். பிறகு கொஞ்சம் அதில் உப்பையும் சேர்த்துக் கரைத்தான். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு dramatic effect-க்கு ஆகத்தான் இருக்கும்; வேறென்ன taste-க்காகவா இருக்கப் போகிறது? ‘மந்திரக்கோலை’ வைத்துதான் கரைத்தான். நடுவில் அந்த மண்டை ஓடு + கை எலும்பு இரண்டையும் வைத்து கொஞ்சம் ‘ஜூஜா வேலை’ காண்பித்தான்.

அதோடு விட்டானா, பாவி. என்னை எழுப்பி, ‘போ; அந்த தம்ளரில் உள்ளதை தெரு முக்கில் கொட்டிவிட்டு திரும்பிப் பாராமல் வா’ என்றான். நாங்களோ அந்த வயதில் இந்த மாதிரி வீட்டுப் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டு போறதெல்லாம் நம்ம தகுதிக்குக் குறைச்சல்னு நினைக்கிற டைப்; அதவிடவும்
நம்ம குதிரையில், அதாங்க நம்ம ஜாவா பைக்கில்
அந்த சின்ன சந்தில்’சர்ரு..புர்ருன்னு’ போனவைய்ங்க..ஆனாலும் தல சொல்லியாச்சே .. வேற வழி ஏது; தலைவிதியேன்னு தம்ளரோடு தெருமுனைவரை போய்,ஒரு வழியா அதக் கொட்டிவிட்டுத் திரும்பிவந்தேன். இப்போ கிளைமேக்ஸ்… ‘இப்போ வேட்டியில போட்ட முடிச்சை அவிழ்க்கிறேன். உன் வேட்டி நல்லா இருந்தா கேட்ட காணிக்கையைக் கொடு’ அப்டின்னுட்டு, முடிச்சவிழ்த்தான். நம்பவே முடியலைங்க…வேட்டி முழுசா ஒரு பழுதுமில்லாம இருந்திச்சு. அங்கங்கே கொஞ்சம் கைபட்ட அழுக்கு தவிர வேறு எந்த குறையுமில்லை. அந்த இடத்தைவிட்டு ஆளைக் கிளப்பினால் போதும் என்ற நினைப்பில் கேட்ட காசைக் கொடுத்து அனுப்பினோம்.

இது என்ன மாயம்? ஹிப்னாட்டிசம் / கண்கட்டு வித்தை / black magic – இப்படி என்னென்னமோவெல்லாம் சொல்லுவாங்களே – இதில் இது எந்த டைப்? எப்படி இது அவனுக்குச் சாத்தியமானது? எனக்கு இதுவரை இதற்குப் பதில் தெரியவில்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

124. திருமா நெற்றியில் திருநீறு…

எனக்கு அந்தப் பதிவர் மாதிரி ஆ.வி.-ல் வந்த புகைப்படத்தை உடனே scan எடுத்துப் போட்டு, ஒரு ‘பதிவு’ போட முடியாது; அவ்வளவு வசதியெல்லாம் இல்லை. அவரின் அந்தப் பதிவைப்பார்த்த பிறகே ஆ.வி. வாசித்தேன். திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும் – மனசாட்சியைக் கூர்மைப்படுத்தி வைத்திருந்தால்.

திருமா கூறியிருப்பது: 1. “புலிகள் சிறுத்தைகள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்….இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை; கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித். ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை!”

2.”சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கனூர் கிராமத்தில் உள்ள எங்கள் கூரை வீடு சேதமாகிப்போனது. என் தாய்-தந்தை உட்பட, வீட்டில் இருந்த அனைவரும் குளிரில் நடுங்கியபடி நாட்களை நகர்த்தினார்கள்”.

முதல் விஷயம் பொதுக்காரியம். இரண்டாவது எனக்கு ஓர் ஆச்சரியமான விஷயம் – ஒரு அரசியல்வாதியின் வீட்டிலா இப்படி என்று. அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மதிப்பளிக்க வேண்டிய ஒரு விஷயம்.

இந்த இரண்டு விஷயங்களே எனக்கு அந்தக் கட்டுரையில் மனதில் நின்ற விஷயங்கள். அந்த முதல் காரியம் பற்றிய அவரது மனக்குமுறல் நம் மனதில் கட்டாயம் தைத்தே ஆக வேண்டிய ஒரு காரியம். ஆனால் வாசித்த ஒருவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனசை விடுங்கள், கண்களில்கூட படாமல் போனதுகூட ஆச்சரியமல்ல; அதைவிடவும் திருமாவின் நெற்றியில் இருக்கும் விபூதியல்லவா கண்ணில் உறுத்தியுள்ளது. விபூதி வைப்பதற்கு ஏதும் தகுதி உண்டா, என்ன? அல்லது விபூதிக்கு முழு ஏஜன்ஸி ஏதாவது அவரது கைவசம் உள்ளதா?

திருமாவின் நெற்றியில் இருந்த திருநீறு அப்படி என்ன முக்கியத்துவம் பெற்றது என்றறியேன். அதைக் குறித்த ஏளனத்திற்கு என்ன தேவை என்று கேட்டுவிடுவோமே என்று பார்த்தால் அப்பதிவே இப்போது காணோம். ஒருவேளை தான் அப்படி ஒரு பதிவிட்டது தவறென்று புரிந்து அப்பதிவை எடுத்திருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தோஷமான சந்தேகம்…

பிற்சேர்க்கை:
ஏற்கெனவே நான் நினைத்திருப்பது மாதிரி முகத்திரைக்குள்ளிருந்து எழுதுவதால் மட்டுமே பதிவுகளில் ‘இத்தகைய தரம்’ அமைந்துவிடுகிறதோ என்பதே அது.

இரண்டாவது, சமீபத்தில் அங்கீகரிப்பால் உயரத்தில் வைக்கப்பட்டுப் புகழ் பெற்ற, இப்பதிவர் அதற்குரிய பொறுப்போடு நடப்பதே நன்றாக இருக்கும். மற்றவர்கள் வேண்டுமானால், ‘திருமாவுக்கு ஒரு வார்த்தை…’ என்று நான் பதிவு போட்டால் ‘குருமாவுக்கு ஒரு வார்த்தை…’ என்று அவர்கள் ஒரு பதிவு போட்டு தங்கள் ‘உயரிய’நகைச்சுவை உணர்வையும், உயர்ந்த உளப்பாங்கையும் காண்பித்துவிட்டுப் போகட்டும்…

123. Election Analysis…

தேர்தலுக்கு முந்தி நாலஞ்சு நாளைக்கு முன்னால் சன்னாசியின் பதிவைப் படிக்கும்வரை Indibloggies-தேர்தல் பற்றி ஒன்றும் தெரியாது. தமிழ்மணத்திற்கு ஓட்டு போடணும்னு பிரகாஷ் கேட்டிருந்ததைப் படித்ததும், கட்டாயம் ஓட்டுப்போட்டுட வேண்டியதுதான் நினைத்து அங்கே போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் மற்ற சில வகைகளுக்குக் கட்டாயம் ஓட்டு போட்டபிறகுதான் தமிழ்மணத்திற்கோ, மற்ற தமிழ்ப் பதிவுகளுக்கோ ஓட்டுப் போட முடியும் என்பது தெரிந்தது. மற்ற பல ப்ளாக்குகளைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் ‘ஒத்தையா ரெட்டாயா’ என்று போட்டுப் பார்த்து ஓட்டு போட்டால்தான் நான் நினைத்தபடி தமிழ்மணத்திற்கோ, சிறந்த தமிழ்ப் பதிவுக்கோ ஓட்டுப் போட முடியும் என்ற நிலை. மற்ற வகைப்படுத்தப்பட்டப் பதிவுகளை அங்கங்கே போய் பார்த்தேன். ஆனாலும் எல்லா பதிவுகளையும் ‘சீர்தூக்கிப்’ பார்த்த பிறகுதான் போடும் ஓட்டு மனசாட்சியோடு போடும் சரியான ஓட்டாக இருக்கும் என்று தோன்றியது. ‘கண்ணை மூடிக்கொண்டு’ ஓட்டு போட மனசு வரலை. சரியாகத் தெரிந்து, புரிந்து, தெளிவாக ஓட்டு அடுத்த வருஷம் போட்டுக்கலாம் என்று முடிவெடுத்து இந்த வருஷம் ஓட்டுப் போடலை. ஆனாலும் மனசுக்குள் photo blog ஒன்று தேர்ந்தெடுத்திருந்தேன்.

தேர்தல் முடிவுகள்:
1. நான் தேர்ந்தெடுத்திருந்த அந்த ஃபோட்டோ ப்ளாக் வெற்றி பெறவில்லை. :-(

2. Best Science/Technology blog விருது செல்வ குமார் என்பவருக்குக் கிடைத்துள்ளது. பரிசு microsoft அளிக்கும் 19,000 ரூபாய் மதிப்புள்ள smartphone.

3. Life-time achiever என்ற விருது Lazy Geek நடத்தும் குரு சுப்ரமணியனுக்குக் கிடைத்துள்ளது – பயங்கர ஓட்டு வித்தியாசத்தில்.

4. சென்ற ஆண்டு எழுநூறுக்கும் மேல் தமிழ் வலைப்பதிவாளர்கள் ஓட்டளித்ததாக யாருடைய பதிவிலோ வாசித்தேன். அது சரியாக இருப்பின், என்ன ஆச்சு இந்த ஆண்டு? 237பேர் மட்டுமே தமிழ் ப்ளாக்குகளுக்கு ஓட்டளித்துள்ளார்கள். எல்லோரும் நான் நினைத்தது மாதிரியே நினைத்து ஓட்டளிக்காது இருந்து விட்டார்களோ? அல்லது கெடுபிடி அதிகமாகி விட்டதா? சென்ற முறை இந்தத் தேர்தலில் கலந்து கொண்டவர்கள்தான் சொல்லணும்.

5. 237 பேர் தமிழ்ப் பதிவர்களுக்கு -அனைவருமே தமிழ்மணத்தில் உள்ள பதிவர்கள்தான் – ஓட்டளித்தும், தமிழ்மணத்திற்கு Best IndiBlog directory/service/clique என்ற வகைக்கு வெறும் 127 பேர் மட்டுமே ஓட்டளித்திருப்பது வியப்பளிக்கிறது. கொஞ்சம் கஷ்டமாகவும் உணர்கிறேன். நமது உறுப்பினர்களே நமக்கு எதிராகவா வாக்களித்திருப்பார்கள் என்ற கேள்வி குடைச்சலைத் தருகிறது. என்னைப் பொறுத்தவரை 207 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற Desipundit பற்றி ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தெரியும்.

6. தமிழ் ப்ளாக்குகளில் வென்ற முகமூடிக்கு வாழ்த்துக்கள்.

7. இன்னொரு சின்ன statistics:

இந்திய மொழி ப்ளாக்குகளில் விழுந்துள்ள ஓட்டின் எண்ணிக்கைகள்:
கன்னடம்: 45
மலையாளம்: 50
தெலுங்கு: 50
மராத்தி: 70
இந்தி: 90
தமிழ்: 237

நீங்களே இந்தத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆராய்ந்து கொள்ளவே இப்பதிவு. அடுத்த ஆண்டிலாவது இன்னும் கொஞ்சம் தெளிவாக தேர்தலைப் பற்றித் தெரிந்துகொண்டு, முனைப்போடு தேர்தலைச் சந்திக்கவும், அதற்கு முன் கொஞ்சம் சிந்திக்கவும் இப்பதிவு உதவுமோ என்ற ஆசையுடன்…….

121. கம்ப்யூட்டர் வித்தகர்களுக்கு ஒரு பொது விண்ணப்பம்.

என்னமோ RSS Feed அப்டீங்கிறீங்க..நிரல் பட்டை அப்டீங்கிறீங்க..இன்னும் உரல், நிரல் அப்டி இப்டின்னு போய்க்கிட்டே இருக்கு. Template எங்க இருக்கும்; அது என்னென்னே தெரியாம இருந்து ஒரு வழியா அதுகூட படிஞ்சு போச்சு.


ஒரு தப்பு பண்ணினேன். இந்த blogger.com-ஐ விட weblogs.us-ல் உள்ள நுழைவுப் பக்கமும், வகைப்படுத்துதல், பின்னூட்ட மட்டுப்படுத்துதல், (:mrgreen::grin:- பாருங்க, இந்த மாதிரி எல்லாம் ஸ்மைலீஸ் போட முடியுமா, அந்த பழைய வலைப்பதிவுகளில்??) போன்ற மற்ற சில வசதிகளும் பிடித்ததால் அதற்கு மதியின் உதவியோடு தாவி விட்டேன். தாவிய பிறகுதான் தெரியுது இங்க ஒரு template இல்ல; Stylesheet,Category Template,Comments Template,date.php,Footer Template,Header Template,Main Template, post.php,Search Template,Post Template – என்று ஒரு பாடு டெம்ப்ளேட்கள்; இதில் எதில் எதை சேர்ப்பது என்று ஒரே குழப்பம்.

‘பதிவு’ கருவிப்பட்டை (toolbar)-யைச் சேருங்கள் என்று தமிழ்மணத்திலிருந்து சொல்லியிருக்காங்க. நானும் ஒவ்வொரு டெம்ப்ளேட்டையும் தனித்தனியே எடுத்து தெரிந்த ஜால வித்தைகள் எல்லாவற்றையும் செய்து பார்த்தால் ஒண்ணும் தேறலை. “எனவே கீழ்க்கண்ட உதவிப் பக்கத்தில் கூறியுள்ள படிகளின் படி உங்கள் டெம்ப்ளேட்டில் இந்த நிரல்துண்டை சேர்த்து,….” அப்டின்னு தெளிவா உதவறது மாதிரி கொடுத்திருக்காங்க – ஆனா அது எல்லாமே blogger.com-ல் வலைப்பதிவுகள் வச்சிருக்கவுங்களுக்கு மட்டும்தான் பிரயோஜனம். நாங்க மைனாரிட்டிகள் கொஞ்சபேர் weblogs-ல் வலைப்பதிவுகள் வச்சிருக்கோம்னு நினைக்கிறேன். மைனாரிட்டிகள் என்றாலே நம்மூர்ல தனி மரியாதை உண்டுன்னு எல்லாருக்கும் தெரியும்.ஆனா தமிழ்மணத்தில மட்டும் என்ன இப்படி எங்கள கண்டுக்கிறதில்லைன்னு தெரியலை! blogger.com ஆட்களுக்கு செய்முறை தரும் தமிழ்மணம் ஏன் weblogs பதிவாளர்களுக்குச் செய்முறை தரவில்லை?:evil: மைனாரிட்டிகளின் பலம் என்னவென்று தெரியாமல் இப்படி செய்து விட்டார்கள், பாவம். விட்டு விடுவோம் அவர்களை!

அதனால் இந்த weblogs வலைப்பதிவாளர்களான மைனாரிட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமாய் இதன் மூலம் ‘மக்களே உங்களையெல்லாம் அன்புடன் அழைக்கிறேன்’. முடிந்தால் இந்த நமது உரிமைகளைப் பெற விரைவில் நாம் எல்லோரும் அலைகடலென மதுரையம்பதியில் திரண்டு நமது பலத்தைக் காண்பிப்போம். தயாராயிருங்கள்!:roll:

blogger.com-ல் வலைப்பதிவுகள் வைத்திருக்கும் மெஜாரிட்டி சமூகத்தினருக்கு உங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. மெஜாரிட்டிகளாக இருக்கும் நீங்கள், எங்கள் மைனாரிட்டியின் நிலையை எண்ணிப் பாருங்கள் ஒரு நிமிடமாவது. உங்கள் சொகுசு (ஒரே டெம்ப்ளேட்டில் நிரல் துண்டைச் சேர்க்கும் அந்த சொகுசைத்தான் கூறுகிறேன்)எங்களுக்கு முடியாதுதான்.ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொள்வது என்ன நியாயம். ஒரு சமத்துவ சமுதாயம் காண வேண்டாமா? அதற்கு உங்கள் பங்கு என்ன? அதையும் நானே சொல்கிறேன். கேட்ட பின்பாவது உங்கள் மனக்கதவைத் திறந்துவிடுங்கள்!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: ஹி…ஹி…:wink:வேற ஒண்ணும் இல்லீங்க!! :-( தமிழ்மணத்தார் தந்துள்ள அந்த நிரல்களை எங்கே, எப்படி சேர்க்கணும்னு தெரிஞ்சவங்க தயவு செய்து கொஞ்சம் சொல்லிக்கொடுத்து உதவுங்கப்பா/ம்மா!!:roll:

120. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…3

ஜோதிடம் தொடர் – முந்திய பதிவுகள்: 1*, 2*.

 

1990-களின் ஆரம்பம் வரை வேறு மறுபடி ஜோஸ்ய அனுபவம் வர வாய்ப்பில்லாமல் போச்சுது. ஏதோ நாம் உண்டு நம்ம வேலை உண்டு என்று போச்சுதுன்னு வச்சுக்கோங்களேன். 90 / 91-ல் நண்பன் ஒருவனது திருமணத்தில் தலையிட வேண்டியதாச்சு.

பெண் வீட்டுக்காரர்களுக்கும் வேண்டியவனாகி விட்டேன். இரண்டு பேர் வீட்டுக்கும் நடுவில் பாலம் போடற வேலை -அது அனுமான் வேலையா, இல்லை அணில் வேலையா என்று தெரியாது.

ஆரம்ப வேலைகளை ஆரம்பிச்சதும், அடுத்த கட்டத்தில் ஜாதகப் பொருத்தம் என்ற கட்டம் வந்தது. இரு வீட்டாரும் தங்கள் தங்கள் ஜாதகக்கட்டோடு கிளம்பிப் போய் வேறு வேறு ரிசல்ட்களோடு வந்தார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் என்ற கண்டுபிடிப்போடு வர, மாப்பிள்ளை வீட்டார் ஒன்றுக்கு இரண்டு ஜோஸ்யர்களைக் கேட்க, அவர்கள் இரண்டு பேருமே, சூடம் அடிச்சி சொல்லாத குறையாக மாப்பிள்ளைக்கு clean chit கொடுத்தார்கள். பெண் வீட்டாருக்கு நம்பிக்கையில்லை; அவர்களைக் குறை சொல்ல முடியுமா என்ன?

இப்போது நம்ம தலை உருள ஆரம்பிச்சது. கட்டப் பஞ்சாயத்துதான். தோள்ல துண்டுமட்டும் இல்லை; மற்றபடி நாம சொன்ன தீர்ப்பு: பொதுவா ஒரு ஜோஸ்யரிடம் செல்வது என்பது. அதேபோல இரண்டு வீட்டுக்காரர்களும் ஒரு வழியாக ஒரு ஜோஸ்யரைத் தேர்ந்தெடுக்க, அவரிடம் நானும் (பெண் வீட்டு சார்பில்..) இன்னொருவரும் (மாப்பிள்ளை வீட்டு சார்பில்..)போய் ஜோஸ்யம் கேட்டு வருவது என்று முடிவாச்சி.

தேர்ந்தெடுத்த ஜோஸ்யர் அலங்கா(ர)நல்லூரில் இருந்தார். அங்கே இருக்கும் சர்க்கரை ஆலையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, ஜோஸ்யராக உருவெடுத்தவர் என்று கேள்விப் பட்டேன். அங்கேபோனதும் உள்ளே அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். மோடி மஸ்தான் அவனது ஆட்களையே கூட்டத்தில் உட்காரவைத்து சில வித்தைகள் காண்பிப்பானாமே அது மாதிரிதான் அந்த ஆட்கள்போலும். ஜோஸ்யர் சொன்னதெற்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவதற்காகவே அவர்கள் அங்கே இருப்பார்கள் போலும். அப்பப்போ ஏதாவது சொல்லி நன்றாகவே பில்ட்-அப் கொடுத்தார்கள்.

அப்போது ஒரு பிரபல நடிகரின் திருமணச் சேதிகள் காற்று வெளியில் பல வடிவங்களில், வண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தன. இவர்தான் அந்த நடிகரின் ஆஸ்தான ஜோஸ்யராம். அந்த நடிகரைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகையை, அவர் கல்யாணம் செய்யக்கூடாதென இவர்தான் தடை போட்டதாம். அந்த நடிகையின் தாய் லட்சக்கணக்கில் பணம் தர்ரேன்னு சொன்னாலும், இவர் தன் ஜோஸ்ய தர்மத்தின்படி அதை முற்றுமாக மறுத்துவிட்டாராம். கடைசியில் இவர் சொன்னது மாதிரிதான் அந்த நடிகர் வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாராம். ‘பாருங்க ராஜா, இனிமே **** எப்படி ஆகப் போறார்; என்னவா ஆகப்போறார்னு பாருங்கன்னார். நம்ம ‘பில்ட்-அப்’ ஆட்களும் ‘ஐயா, சொன்னதெல்லாமே எப்பவுமே அப்படியப்படியேதான நடக்குது’என்றார்கள்.

பிறகு ஒரு வழியாக எங்கள் பக்கம் திரும்பினார். ஜாதகத்தைக் கொடுத்தோம். சும்மா சொல்லக்கூடாது; முதலடியே நெத்தியடிதான்! இந்த ஜாதகக்காரர் குரு ஸ்தானத்தில் இருப்பாரே என்றார். நண்பனும் கல்லூரி ஆசிரியர். அசந்து விட்டேன், போங்கள். கொஞ்சம் ஜோஸ்யத்தில் நம்பிக்கை துளிர்க்குமோ அப்டின்னு நானே நினச்சேன். ஆனால், அதுக்குப் பிறகு சொன்னவைகள் எல்லாமே ஏற்கெனவே சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானவையாகவோ,வித்தியாசமாகவோ இருந்தன. செவ்வாய் தோஷம் பற்றித்தான் கேட்க வந்திருந்தோம். அதைப் பற்றி ஏதும் அவர் கூறவில்லை. நாங்களாகவே நடந்த விஷயங்களைச் சொன்னோம். அதற்குப் பிறகு வேறு ஏதோ கணக்குகள் போட்டார்; கூட்டினார்; கழித்தார். பிறகு, குழந்தை பிறந்தா ஆணாக இருக்கும்; அப்படி ஒருவேளை இல்லாட்டி, பெண்ணாக இருக்கும்னு ஜோஸ்யம் சொல்லுவாங்களே அது மாதிரி ‘பொத்தாம் பொதுவாக’ செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்ல முடியாதுன்னாலும், அந்த ‘trace’ இருக்கிறது மாதிரி தெரியுது என்று அவரும் குழம்பி, எங்களையும் குழப்பி விட்டார். எதுக்கும் வாழை மரத்துக்கு முதல் தாலி கட்டி, பிறகு ‘உண்மைத் தாலியை’ பெண்ணுக்குக் கட்டுங்க என்றார். இதைத்தான் முதல்லேயே பெண்வீட்டுக்காரர்கள் சொல்லியிருந்தார்கள். நாங்க ‘பஞ்சாயத்துக்காரர்கள்’ வெளியே வந்து என்ன செய்வது என்று கொஞ்சம் குழம்பினோம். தோஷம் இருக்குன்னு சொன்னா, பெண்வீட்டார் சொன்னது சரின்னு ஆயிடும்; இல்லைன்னா, மாப்பிள்ளை வீட்டார் பக்கம் சாயும். ஜோஸ்யர் எங்கள குழப்பினதுமாதிரி நாங்களும் திருமண வீட்டாரைக் குழப்பிவிடுவது என்று முடிவெடுத்தோம்.
பெண்வீட்டாரின் ஜோஸ்யர் + நம்ம அலங்கா நல்லூர் ஜோஸ்யர் vs மாப்பிள்ளை வீட்டார் பார்த்த இரண்டு ஜோஸ்யர்கள் என்று கணக்கு என்னவோ 2:2 என்ற கணக்கில் சரிக்குச் சரியாக இருந்தாலும், ‘எதுக்கு வம்பு’ என்று ‘ரெட்டைக் கல்யாணத்திற்கு’
ஒருவழியா இரண்டு வீட்டாரையும் பார்த்துப் பேசி சம்மதிக்க வைத்து…இனிதே கல்யாணம் நடந்தது.