110. திருமாவுக்கு ஒரு வார்த்தை…

Image hosted by TinyPic.com
மரியாதைக்குரிய திருமா,

உங்கள் தூண்டுதலோ, உங்கள் கட்சியின் ஆதரவோ இன்றி தன்னிச்சையாகத்தான் குஷ்பூ எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது என்று சொல்லியுள்ளீர்கள்.


நம் “தமிழ்ப் பண்பாட்டு’க்கு எழுந்துள்ள சவாலை முறியடிக்க இது மக்களின் மத்தியில் சுயமாகப் பூத்த ஒரு போராட்டம் என்று சொல்லியுள்ளீர்கள். இருந்தாலும் உண்மை உலகத்துக்கே தெரிந்ததுதான். அதை விடுங்க.

நான் சொல்ல வந்தது:

* பெயர்கள் வைப்பதில்கூட இருந்த ஜாதீய முறையை மாற்ற, ஒழிக்க நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்ள உங்கள் சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டீர்கள். இது ஒரு நல்ல முடிவு. தமிழை இப்படிப் பயன்படுத்துவது எவ்வளவு அர்த்தமுள்ளதாக உள்ளது.

* இதே போல அவர்கள் எப்படி படிப்பினால் மட்டுமே உயர முடியும் என்பதையும் அழுத்தமாக மனதில் ஊன்றுங்கள்.

* குலத்தொழிலை விட்டு வெளியே வந்தாகவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துங்கள்.

* எல்லாவற்றையும் விட தலித்துகளுக்கு நிறைய செய்வதாகக் கூறப்பட்டாலும், இப்போது அதிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டது: பயன்பெற்று உயரே போய்விட்டு, ‘திரும்பிப் பார்க்க’ விரும்பாதவர்கள் ஒரு புறம்; இன்னும் நமக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பதுகூட தெரியாது, எந்த விழிப்புணர்வும் இல்லாத ஏழை மக்கள் மறுபுறம். ‘இது என் விதி’என்ற நினைப்பிலேயே தனது சமூக நிலைக்குக் காரணம் புரியாது இருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இப்போது தேவை விழிப்புணர்வு; அதை ஏற்படுத்த முயலுங்கள்.

* தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித் மாணவர்களையும், மற்ற மக்களையும் அடிக்கடி சந்தித்துள்ளேன். மாவட்டம்தோறும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இதுபோல சான்றிதழுக்காக இழுத்தடிக்கப்படும் மக்களுக்கு உதவிடுங்கள். மற்ற சாதியினரில் சிலர் போலிச்சான்றிதழ்கள் பெற்று உயர் கல்வி பெற்று இன்று மேல் நிலையில் சமூகத்திலும், அரசியலிலும் உயர்ந்த இடங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையான தலித்துகளுக்கு இந்த விஷயத்தில் உதவுவது பேருதவியாக இருக்கும்.

கண்முன்னே நீங்கள் சாதிக்கவேண்டிய காரியங்கள் இதுபோல் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; தமிழர்தம் கலாசாரம் என்றும் இருக்கும். நம் தமிழ்ப்பெண்களின் கற்பை காக்கா வந்து தூக்கிட்டுப் போய்விடாது. ஆகவே அவைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இப்போது ஆகவேண்டியதைப் பாருங்கள். தமிழ் காப்பும், தார் பூசுவதும் உங்களுக்கு இப்போது தேவையில்லை. Can you afford to have these LUXURIES, that too, NOW. அவைகள் வெறும் முழக்கங்கள்; மீடியாக்களின் பசிக்கும், பங்கேற்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள மட்டுமே இந்த gimmicks என்பது யாருக்குத்தான் தெரியாது? உங்கள் தோழமைக்கட்சிகள் வேண்டுமானால் அவைகளைச் செய்து கொள்ளட்டும்.

அதோடு, ஒரு கரம் ராமதாஸுடன் என்பது சந்தோஷமே; இன்னொரு கரம் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியுடனும் உறவு கொள்ளக் கூடாது?

109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…

Image hosted by TinyPic.com

“எங்கே செல்லும்
இந்தப் பாதை…?”

உண்மையிலேயே எனக்குத் தெரியாததாலேயே இந்தக் கேள்வி; அங்கதமெல்லாம் ஒன்றுமில்லை என்று முதலிலே ஒப்புதல் வாக்குமூலம் தந்து விடுகிறேன். ஆகவே பதில் தெரிந்தோர் விளக்கம் கொடுத்தால் தெரியாத ஒரு விஷயத்தை, தெரியாத ஒருவனுக்கு, தெரியவைத்த புண்ணியம் கிடைக்கும்! புண்ணியம் பெற விழைவோர் தயவு செய்து வரிசையாக வரவும். … மிக்க நன்றி. அதேபோல் போடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கும்,கீழே உள்ள பாடல் வரிக்கும், இந்தப் பதிவுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க!


திரை ஊடகங்களில் இருப்பதால் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு பெண்மணிகளின் கூற்றுக்கள் பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் என்றால் கோர்ட், கேஸ்கள் என்று இன்னொரு பக்கம் நடந்தேறுகின்றன. இந்தக் கோர்ட்டுகள் முன்னால் நம் மக்களின், அதிலும் தாய்க்குலங்களின் நம் தமிழ்க் கலாச்சாரத்தை ஒட்டிய, நம் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தக் கூடிய திருவிளையாடல்களையும் பார்க்கும் நம் நீதிக் காவலர்களுக்கு இந்தக் கேஸ்களின் அடிப்படை புரியாமலா இருக்கிறது? புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா? ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா? prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா? எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா? பொது நலமும், கோர்ட்டுகளின் ‘பொன்னான நேரமும்’ வீணாவதில் நம் நீதியரசர்களுக்குப் பொறுப்பில்லையா? அல்லது, அவர்களும் இந்த “அழகான” ‘side shows’ தரும் ‘side kicks’-களை கண்டு களித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா?

இதற்கெல்லாம் உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியாது…

108.தல புராணம்…5

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் – எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?

Image hosted by TinyPic.com

‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 மீட்டர்தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!


படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ – ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு – நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி – நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் – யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது – தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது – அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…

Image hosted by TinyPic.com

107. Age does not wither ….

Image hosted by TinyPic.com

Hi,

நீங்க எல்லாரும் கட்டாயம் அங்கே போய் சுத்திப் பாருங்க

நமக்கு ஒரு பதிவு டெடிகேஷன்!

ஆச்சரியப் பட பல விஷயங்கள்:

* இந்த internet என்ன வேலையெல்லாம் பண்ணுது?
* எங்க அப்பாவுக்கு இந்த வயசில கத்துக்கிறதுக்கு இருக்கிற மனசு..ஆச்சரியம்தான்! இல்ல?
* நல்ல கதைகள் நிறைய சொல்றாரு.
* வயசு, வயோதிகம் எல்லாம் எங்கே இருக்கு? நம்ம மனசுக்குள்ளேயா..இல்லையே… நம்ம ஊர்ல அடுத்தவங்க சொல்லிச் சொல்லியே நம்ம மனசுக்குள்ள வயோதிகம் எல்லாம் வந்திடுமோ. ‘இந்த வயசில இது இவனுக்குத் தேவையா’ அப்டின்னு நாம் எல்லாருமே அடிக்கடி சொல்றோம், இல்லியா? (ஜீன்ஸ் போடறதுக்கு சொல்ற comments மாதிரி!!) நான் retire ஆகிறதுக்கு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால் ஒரு அமெரிக்கன் குழு SIP – South Indian Pilgrimage – எங்க கல்லூரிக்கு வந்திருந்தாங்க; எல்லாருமே 65 வயசுக்கு மேலே. வந்திருந்த எல்லாருமே hiking, swimming என்று பயங்கர sportive. அட, ஆப்ரிக்காவில கூட நம்ம நெல்சன் மண்டேலா எப்படி இருக்கார்?!
* இவையெல்லாம் வெறும் பொருளாதார தன்னிறைவினால் மட்டுமே வருவதா, இல்லை நம் “பண்பாடு” என்பதே இப்படியா?
* நம் பண்பாடுதான் நம்மை எப்படியெல்லாம் குறுக்கி மடக்கி வைத்துள்ளது? sex பற்றிப் பேசினாலே தப்பு; அதுவும் ஒரு பெண் பேசிவிட்டால் நமது பண்பாட்டுக் காவலர்களின் ரத்தம் எப்படி கொதித்து விடுகிறது?
* நம்ம மனசு இன்னும் விசாலமாவது எப்போது?

106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) – பின் குறிப்பு

Image hosted by TinyPic.com
8 M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???
Post Date :
Friday, Apr 29th, 2005 at 4:15 pm
இது ஒரு மறு பதிப்பு. அதோடு இப்போது ஒரு பின் குறிப்பு இணைக்கிறேன். இது “காலத்தின் கட்டாயம்”:-)


சினிமா = பொழுதுபோக்கு – இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை. அந்த பெரிய மனுஷன் M.G.R. ஒரு பத்து இருபது வருஷமா தமிழ் சினிமா முன்னேறாதபடி பார்த்துக்கிட்டார். ஏதோ அவரால முடிஞ்சது! சினிமான்னா கதை வேணும்னு யார் சொன்னதுன்னு கேட்டவர்.

ஏதோ…அவருக்குப் பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கலாம்னு தமிழ்த்திரையுலகம் நினைத்தது. வந்தாரையா நம்ம சூப்பர் ஸ்டார். நல்ல மனுஷன். M.G.R. மாதிரி இல்லாம நல்லாகூட நடிக்கக்கூடிய ஆளுதான்(புவனா ஒரு கேள்விக்குறி; முள்ளும் மலரும்;ஆறிலிருந்து அறுபது வரை…). ஆனா நம்ம மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா? ஒரே ஸ்டைல் மயந்தான், போங்க. நானும் கையை ஆட்டி ஆட்டி பார்க்கிறேன்.. சத்தமே வரமாட்டேங்குது… (நான் ஒரு தடவை சொன்னா…). துண்டை தோளில் சுற்றி சுற்றி போட்றேன்… அப்பவும் சத்தமே வர மாட்டேங்குது! சரி, கதை, அதில் கொஞ்சம் லாஜிக், சண்டை, அதில் கொஞ்சம் sense, இப்படி ஏதும் இல்லாமலேயே தலைவர் காலம் போயிருச்சி… (past tense-ல் சொல்லலாமா? அல்லது இன்னும் 2 வருஷம் கழிச்சி வரப்போற படத்துக்குப் பிறகுதான் சொல்லணுமா?

அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். சரி, இனி தமிழ்த்திரை எழுந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கும்போது வந்தாரையா அடுத்த வாத்தியார். வரிசையா ஹிட்ஸ். அதுவும் வழக்கமான நம்ம மசாலா படங்கள். logic இல்லாத, anti-gravitational டிஷ்யும் டிஷ்யும் படங்கள். புதிதாக எதுவும் முயற்சிகூட செய்துவிட மாட்டேன் என்ற நல்ல முடிவில் நம் இளைய தளபதி மிக மிக உறுதியாக இருக்கிறார். ஒரு தியாகம்தான். இனி இந்த தலைவர் தன் பங்குக்கு எத்தனை வருஷங்களைக் கெடுக்கப்போகிறாறோ…..ம்ஹும் … சாபக்கேடுதான், போங்க!

நமக்கு மட்டும் ஏங்க இப்படி…?

============== ======================== ===============

இப்போ பின்குறிப்பு:

இது ஒரு பரிமாண வளர்ச்சியைக் கோடு போட்டுக்காட்டும் ஒரு முயற்சி. சும்மா சொல்லக்கூடாதுங்க இந்த தருமியை; வாய்க்கு சீனிதான் போடணும். சிவகாசி படமெல்லாம் வர்ரதுக்கு முந்தியே எழுதிய இந்த பதிவில் சொன்னதின் நிரூபணம் இதோ, சிவகாசியில நடந்திருச்சி. என்னன்னு கேக்றீங்களா?

விவசாயின்னு ஒரு படம்; நம்ம பொ.ம.செ.(வேற ஒண்ணும் இல்ல – பொன்மனச் செல்வர்தான்) படிச்சி விவசாயி;அவரு மேல லவ்ஸ் உட்றது கே.ஆர்.விஜயா. (எப்பவுமே அப்டிதானே, தலைவிக்குத்தான் தலைவரு மேல ஒரு ‘இது’ வரும்; never vice versa!) அதில் ஒரு பாட்டு: “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை…” இது just ஒரு example தான். அங்கங்க, அப்பப்ப இது மாதிரி அட்வைஸ்களை பொம்பளைகளுக்கு வாத்தியார் அள்ளி விடுவார், அல்லது அள்ளிவிடறது மாதிரி சீன்கள் கட்டாயம் செட் பண்ணிடுவாங்க. அவரு அப்படி சொன்னதுதான் தாமதம்; நம்ம ஹீரோயின்கள் – சரோஜா தேவி, ஜெயலலிதா, விஜயா,etc..etc.. – அடுத்த சீன்ல பயங்கரமா ஒரு பட்டுச் சேலை, ஒரு கூடைப் பூ வச்சி அப்டி ஒரு நட நடப்பாங்க பாருங்க..இங்க இருந்து விசிலு பறக்கும். இப்படியாக எல்லாத்துக்கும், எப்போவும், சிறப்பா பொம்பளைங்களுக்கு அட்வைஸ் பறக்கும் எல்லா படத்திலும்.

அடுத்தது வந்தாரு நம்ம சூப்பர் ஸ்டார். இவரும் அவர் பங்குக்கு பல படங்கள்ல ஒரே அட்வைஸ் மயம் தான். ரொம்ப கோபப் பட்ற பொம்பளைபத்தியெல்லாம் நெறைய சொல்லுவார். மன்னன் படத்தில் வர்ர தலைவி நாட்டின் முதல் இடத்தில இருக்கிற தொழிலதிபர். ஆனா நம்ம தலைவர் முன்னால ஜுஜுபியா ஆயிருவாங்க. அந்த படத்தில கடைசி சீன்ல, தலைவர் வேலைக்கு -அதே கடைநிலைத் தொழிலாளியாகத்தான் – போவார்; அந்த அம்மா அவருக்கு டிஃபன் பாக்ஸில் சோறு கொடுத்து அனுப்பிட்டு வீட்லேயே இருந்திருவாங்க; ஏன்னா, பொம்பிளயோட “இடம்” அதுதானே! இந்தப் பெண்ணடிமைத் தனத்திற்கும் தியேட்டர்ல முதல் வரிசை மட்டுமல்லாமல், கடைசி வரிசையிலிருந்தும் விசில் வரும். ஆக, சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். லெவலுக்கு பரிணாம வளர்ச்சிக்கு வந்துட்டாரா? ஆனா, நம் சினிமா அபிமானிகளின் பரிணாமம் அதைவிட ஒரு ஸ்டெப் முன்னேறி விட்டது. எப்டின்னு கேட்டீங்கன்னா, எம்.ஜி.ஆர். பீரியட்ல பொதுவா முதல் வரிசைக்காரர்கள்தான் விசிலடித்ததாக ஒரு ஐதீகம்; ஆனா, இப்போ அமெரிக்கா, ஜப்பான் தியேட்டர்லயும் கடைசி வரிசையிலிருந்துதான் ரொம்ப விசிலாமே – அப்படி ஒரு பரிணாம வளர்ச்சி நம்ம மக்களிடம்; நல்லா இருக்கில்ல?

அடுத்து நம்ம ஈனா.தானா. (அதாங்க, இளைய தளபதி – அது சரி,மூத்த தளபதி யாருங்க?)அவர் இதுவரை பொம்பளைங்களுக்கு எந்த அட்வைஸும் கொடுத்ததாகத் தெரியவில்லை. இப்போ அவரும் ‘வயசுக்கு வந்திட்டாராம்’! அதனால, அவரும் ஆரம்பிச்சிட்டார்..! அஸினுக்கு அட்வைஸ் கொடுக்கிற சீனைப் பாத்துட்டு அப்டியே ‘இதாய்ட்டேன்’! தமிழர்களுக்கு அடுத்த ஒரு தலைவரின் உதயம்னா சும்மாவா? அப்டியே, நெக்குரிகிட்டேன்.

ஆக நம் தலைவர்கள் சினிமாவை மட்டுமல்லாமல் நம்ம நாட்டையும் இப்படி உண்டு இல்லைன்னு பண்றதுக்கு நாம என்ன புண்ணியம் பண்ணியிருக்கணும்னு நினச்சி எனக்கு கண்ணீரே வந்திரிச்சி…ஆமா, உங்களுக்கு…?

105. எனக்கு ஒரு புது அப்பா…!

Image hosted by TinyPic.com

அன்பு (lsanbu@gmail.com – http://kuppai.blogspot.com)
என் 100வது பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்த தகவலை வைத்து, அவர் கொடுத்த
Senior Citizen Bloggers Defy Stereotypes – இந்த சைட்டுக்குப் போனேன்.

இன்று காலைதான் அந்த பதிவுகளுக்குப் போனேன். இருப்பதிலேயே வயதானவர் திரு.Ray White; வயது just 92! (நான் என்னடான்னா, 61-க்கே இந்தக் கூப்பாடு. சுத்தியிருக்கிற நீங்கள்ளாம் ‘சார்’, ‘அய்யா’ அது இதுன்னு ஏகப்பட்ட மரியாதை வேறு!) அவர் ப்ளாக் ஆரம்பித்த இந்த இரண்டாண்டுகளில் 45,000 பேர் அவர் ‘வீட்டுக்குச்’ சென்றுள்ளனராம். சரி, சும்மா நம்மளும் ஒரு மயில் ஒண்ணு அனுப்புவோமேன்னு நினச்சி இன்னைக்குக் காலையிலதான் ஒண்ணு அனுப்பிச்சேன் – ஒரு நாலஞ்சு வரிதான். பதில் இதோ இப்போ – மாலை 8 மணி – வந்திருச்சி.

Hello Sam, (Is it o.k if I use your first name? I want you to call me “Dad!”)

What a pleasure to receive your e-mail today. I wanted to tell you that when I tried to go to your Blogs, I received an error message saying that page could not be found. I very much want to read your Blogs. Would you please send the links again?

I would like to keep in touch with you, too. Do you still live in India?

Thanks for writing to me.
DAD
Ray F. White

Dad’s Tomato Garden Journal
Dad’s Views and Tomato News Blog
Dad’s Tomato Garden Web Page
Dad’s Song Bird and Rose Garden Web Page
Dad’s Fried Green Tomatoes Web Page
More From Dad

வயதைத் தாண்டிய இந்த உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது; உடனே பதிலும் ‘அப்பாவுக்கு’ப் போட்டுவிட்டேன்.

அடுத்த மயில் அவருக்கு அனுப்பும்போது உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களை உங்கள் சார்பாக அவருக்குச் சொல்லலாமா…?

104. இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கணும்…

தமிழ்மணத்துக்குள் நான் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இங்கு மதங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. என் கருத்துக்களை வைப்பதற்கு இஃது ஓர் ஊக்கியாக இருந்தது. என் எண்ணங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தபோதே நிறைய பின்னூட்டங்கள் கேள்விகளாகவும், விவாதங்களாகவும், விளக்கங்களாகவும் வர ஆரம்பித்ததால் நான் முழுமையாக எழுதி முடிக்கும் வரை பின்னூட்டங்களுக்குக் ‘கதவைச் சாத்திவிட்டு’ 7 பதிவுகளாக நான் பதித்து முடிந்ததும் பின்னூட்டக் கதவைத் திறந்தபோது, கேள்விளும், விளக்கங்களும், பதில்களும் வெள்ளமாய் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது – தொடர்ந்து வந்த மெளனம் – eerie silence -கொஞ்சம் அதிசயமாக இருந்தது; ஆச்சரியமளித்தது.

எல்லா மதங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை – சில கேள்விகளுக்கு பதில் எதுவும் இருக்காது; தர முயற்சிப்பது வீணே. நம்பிக்கை ஒன்றே பதிலாக இருக்கும். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாததால்தான் இந்த மெளனம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆயினும், ஒரு புதிய பதிவாளர் ஒரே ஒரு கேள்வி கேட்க, அதற்கு நான் அளித்த பதிலுக்கு அவரிடமிருந்து மீண்டும் எந்தவித எதிர்வினையுமில்லாமல் இருந்த போதுதான், இந்த மெளனம் ஒரு concerted effort என்ற தோற்றம் எனக்குப் புலானாயிற்று.

நான் கிறித்துவன் என்பதாலேயே நான்சொல்வதை மற்ற கிறித்துவப் பதிவாளர்கள் கேட்டு, அதன்படி நடந்து கொள்வார்களா, என்ன? நிச்சயமாக நான் அவர்களை அப்படிக் கட்டுப் படுத்தவும் முடியாது; அப்படி ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளவும் மாட்டேன். They will retain their own identity and remain as individuals.

இந்த வலிந்த மெளனம் எனது கேள்விகளுக்காக நான் எதிர்பார்த்த விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காததால் அந்தக் கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஒரு கற்பனை!

ஆனாலும் மதங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேறு வழிகள் திறக்கத்தான் செய்கின்றன.

08.11.’05 அன்று THE HINDU நாளிதழில் வந்த ஒரு சேதி அப்படி ஒரு வழியாகத் தெரிகிறது. http://www.hindu.com/2005/11/08/stories/2005110805730900.htm
Irshad Manji என்ற கனடா நாட்டு, தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்மணியின் ,The Trouble with Islam Today என்ற புத்தகம் வரும் 10-ம் தேதி டெல்லியில் வெளியிடப் படுகிறதாம். என் பதிவுகளில் நான் எதிர்பார்த்ததையே அவரும் எதிர்பார்க்கிறார் போலும்: “I am much more interested in sparking conversations. … That is why, at the end of my book, I invite readers to tell me where I have gone wrong.” இந்த சொற்றொடர் என் பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்தது போலவே அவரும் பதில்களை / விளக்கங்களை எதிர்நோக்கியுள்ளார் என்பது தெரிகிறது.

அவரது நேர்காணலில் அவர் கொடுத்துள்ள சில விஷயங்கள் எனக்கு மிக அருகாமை உணர்வைத் தருகின்றன:

* “We .. are raised to believe that because the Quran comes after the Torah and the Bible, it is the final and therefore perfect manifesto of God’s will. This supremacy complex is dangerous because it inhibits the moderates from asking hard questions about what happens when faith becomes dogma.”

* “I believe that we Muslims are capable of being more thoughtful and humane than most of our clerics give us credit for. That is why I wrote this book.”

அவரிடம் கேட்கப் பட்ட கடைசி வினா:

* “Is it true that you are not going to India to promote the book because you have received threats? ”

வேறு நாடுகளில் இல்லாத எதிர்ப்பு நம் நாட்டில் என்பது வியப்பாக மட்டுமல்ல, கொஞ்சம் வேதனையாகவும் இருக்கிறது. இந்த மதத்தீவிரம் பற்றிதான் நான் என் மதங்கள் பற்றிய பதிவில் 21-ம் கேள்வியாகக் கேட்டிருந்தேன்.

அந்த நல்ல நாளுக்காக – விடியலுக்காகக் – காத்திருப்போம்…

103. மரணம் தொட்ட கணங்கள்…4

E.C.G.பார்த்த டாக்டர் நேரே போய் I.C.U.வில் படுங்க என்றார். கொஞ்சம் அதிர்ச்சிதான். தனியாக பைக்கில் சென்றிருந்தேன். வீட்டுக்குப் போயிட்டு காலையில் வந்து விடட்டுமா என்றேன். E.C.G. சரியாக இல்லை என்றார். வீட்டில் துணைவிமட்டும் இருந்தார்கள். என்ன செய்வது, observation-ல் இருக்கவேண்டியதிருக்கிறதாம்; காலையில் வருகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு, I.C.U. போனேன். அங்கே போனால் அதுக்குப் பிறகு ஓரிரு நாட்களுக்காவது என்ன ஏது என்று ஒன்றும் தெரியாது; மயக்க மருந்து கொடுத்து அரை விழிப்பில் வைத்திருப்பார்கள். துணைவியார் பக்கத்து வீட்டு மக்களின் உதவியுடன் அன்றிரவே மருத்துவமனை வந்து வெளியே காவல் தெய்வமாக உட்கார்ந்து இருந்தார்களாம். இரண்டு நாட்கள் கழித்து discharge. இம்முறை டாக்டர் angiography பார்த்து விடுங்கள். என் ‘நீண்ட’ experience-ல் angio என்றாலே ஒரே மாதிரி வசனம்தான் அடுத்து வரும்: “நல்ல வேளை; சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள்; 3/4 blocks இருக்கு; உடனே அறுவை சிகிச்சை பண்ணி ஆகணும்”. டாக்டரிடமே இதைச் சொன்னேன்; நல்ல பதில் ஒன்று கொடுத்தார். “கடந்த இரண்டு நாளில் 60-க்கும் மேல் இதய நோயாளிகளைச் சோதித்து, அதில் உங்களையும் சேர்த்து இரண்டு பேரை மட்டும் angio-வுக்கு அனுப்பியுள்ளேன். அதனால், அநேகமாக ஒரே மாதிரிதான் ரிசல்ட் இருக்கும் என்றார். ஆக, முடிவாகிவிட்டது – அறுவைதான் என்று.

மனத்தையும், பணத்தையும் தயார் நிலை கொண்டுவர சின்னாட்கள் எடுத்தது. அதற்குள் டாக்டரும் அவசரப் படுத்தினார். அக்டோபர் கடைசியில் – 23-ம் தேதி என்று நினைக்கிறேன். மதுரை அப்பல்லோவில் மாலை அனுமதிக்கப்பட மனைவியோடு சென்றேன். பணம் கட்ட என்று அங்கிங்குமாய் அலைந்து கடைசியில், அறை வாங்க ரிசப்ஷன் சென்றேன். patient எங்கே அன்றார்கள்; நாந்தான் என்றேன்; மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு அறைக்கு அனுப்பினார்கள்! வீட்டுக்கார அம்மாவிடம் அதைச் சொல்லி…appearances are deceptive என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டோம்! அடுத்த நாள் angio; சொன்னது மாதிரியே 4 ப்ளாக்குகள்; மூன்றில் bye-pass செய்ய வேண்டும் – உடனே என்றார்கள். தெரிந்ததுதானே… 28-ம் தேதிக்கு நாள் குறிக்கப்பட்டு அதற்கு முந்திய நாளே அட்மிட் ஆனேன். 27-ம் தேதி மாலை ஒரு சீனியர் நர்ஸ் வந்து, surgery பற்றிய முழு விபரம் கூறினார். மொத்தமே 25-30 நிமிடம்தான் உண்மையில் surgery இருக்கும்; ஆனால், ஓரளவு மயக்கம் தெளிந்த பின்பே தியேட்டரை விட்டு நோயாளிகளை வெளியே கொண்டு வருவார்கள். அதில் சிலருக்கு இரண்டு மணி நேரம் ஆகலாம்; இன்னொருவருக்கு மூன்று மணி நேரம் பிடிக்கலாம். அந்த நேர தாமதங்களை வைத்துப் பயப்படக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் என் மனைவிக்கும், வந்து சேர்ந்துவிட்ட மகள்களுக்கும்; எனக்கு என்னென்ன risks இருக்கின்றன்; எப்படி பாதியிலேயே எல்லாமே ‘டப்புன்னு’ நிக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு.. வேற என்ன குளறுபடிகள் வரலாம்; bleeding heart surgery (இதயத்தை ‘அதுபாட்டுக்கு’ வேலை செய்யவிட்டுவிட்டு bye pass பண்ணுவது), இல்லையேல் heart-lung machine பொறுப்பில் உடம்பைக்கொடுத்துவிட்டு, இதயத்தை ‘ஒரு கை’ பார்ப்பது என்பது அறுவை மேசையில்தான் முடிவு செய்யப் படும் … இப்படி பல பயமுறுத்தல்களும், ஆலோசனைகளும். மக்கள் நன்றாகவே பயந்து போனார்கள். I think I was above all those things. A sort of emptiness…நம் மொழியில் அதற்குப் பெயர் என்ன – “கையறு நிலை” என்பதுதானே?

அடுத்த நாள் – D-Day – காலையிலேயே தியேட்டருக்கு stretcher-ல் பயணம்; வழியில் ஆல்பர்ட் (‘நம்ம திருட்டுத் தம் கூட்டாளி !)என்னிடம் குனிந்து தைரியம் சொன்னான்; சிகரெட் நாற்றம்; ‘இப்படி அடிச்சிதான் இப்படி போறேன்; நீ இன்னும் விடமாட்ட, இல்ல என்றேன். (சிரிச்சிக்கிட்டே ஜோக் மாதிரி நான் சொன்னதாக அவன் பின்னால் சொல்லி, எப்படி’டா, அந்த நேரத்தில் உன்னால ஜோக் அடிக்க முடுஞ்சுது என்றான்.) தியேட்டருக்கு நுழைவதற்கு முன் உள்ள முன்னறையில் படுக்க வைத்தார்கள்; சில பல ஊசிகள். மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அடுத்த ஒரு stretcher-க்கு மாற்றியதை உணர்ந்தேன்; அது மிக மிக ‘சில்’ல்லென்று இருக்க, உள்ளே எடுத்துப் போகப்பட்டேன். தலைக்குமேல் ஏதோ ஒன்று – லைட் ஏதாவது இருக்கலாம்; பள பளவென்று இருந்தது. அதில் என் உருவம் ஓரளவு தெரிந்தது; ஏதோ சிலுவையில் அறையப் போவதுபோல் கைகளை நீட்டி வைத்திருந்தது தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டேஏஏஏஏ…இருந்தேன். அவ்வளவுதான் தெரியும்.

விழித்தபோது post-operative I.C.U. பகுதியில் இருந்தேன். என்னோடு அன்று இன்னும் இருவருக்கும் ‘அறுப்பு’ நடந்ததாம்; பக்கத்தில் ஒருவர்; எதிர்த்தாற்போல் இன்னொருவர். எனக்கில்லாத சில extra-fittings இருந்தது அவர்களுக்கு. என்னவென்றால் எனக்கு bleedig heart surgery. அவர்களுக்கு அப்படியில்லாததால் எக்ஸ்ட்ராவாக தொண்டை, மூக்குக்குள் குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. அது அதிகமான உறுத்தல் தருமாம்; அதனால் இருமல் வரும் வாய்ப்பு அதிகம். ‘இருமல், தும்மல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்; அப்படி வந்தால் கொடுக்கப் பட்டுள்ள சின்ன தலையணை ஒன்றை வைத்து நெஞ்சின்மேல் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டு இருமும் படி சொன்னார்கள்.’… நான் பரவாயில்லை, ஒரே ஒரு முறை ஒரு தும்மல் வந்து தொலைத்தது. ஆனால் அடுத்த இருவரும் மிகுந்த கஷ்டப்பட்டார்கள். இருவருக்குமே அடிக்கடி இருமல். ஒரு தும்மல் என்றாலும் இன்னும் நினைவில் இருக்கும் அளவு நெஞ்சில் வலி. மற்றபடி, நெஞ்சு இறுக்கமாக இருந்தது; வலி பின்னால்தான் வந்தது. மூன்றாவது நாளே நான் அந்த இருவரையும் விட தெளிவாகிட்டதாகக் கூறி என்னை அறைக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டு மக்களை அன்றுதான் முழு நினைவோடு பார்க்கிறேன். இரண்டு நாட்கள் ஆயிற்று. ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் வழக்கம்போல் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு என்று சோதித்தார்; அவ்ர் முகம் மாறியது; விரைந்து வெளியே சென்ற அவர் மூத்த மருத்துவரோடு திரும்பி வேகமாக வந்தார் – முகத்தில் கவலைக் குறிகளோடு.

மறுபடி என்னை விரைவாக I.C.U.எடுத்துச் சென்றார்கள். ஊசிகள்…மருந்துகள்…நான் அரை நினைவுக்கு நழுவினேன். ஓரளவு சுற்றி நடப்பது தெரிகிறது. அறுவை செய்த மருத்துவர் ஸ்ரீதர் ஏதேதோ உத்தரவுகள் பிறப்பிக்க, என்னைச் சுற்றிப் பரபரவென எட்டு பத்து பேர்; என்னவோ நடக்கிறது; நடப்பது அவ்வளவு நல்லா இல்லாத விஷயம்தான் என்ற அளவு புரிகிறது. மருத்துவர் கையில் surgical scalpel. இதுவே என் வாழ்வின் கடைசி நிமிடங்கள் என்ற நினைவு வந்தது. என்னைச் சுற்றியும் உள்ள பதட்ட நிலை, டாக்டரின் கையில் உள்ள அறுவைக் கத்தி…எல்லாம், அநேகமாக, அங்கேயே நெஞ்சை அறுத்துத் திறக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். அப்போது என்னை நானே, என்னிலிருந்து தனியாகப் பார்ப்பதாக உணர்ந்தேன்.’சாகப்போகிறோம்; இப்போது கடவுளைப் பற்றி நினைக்கவேண்டுமோ; கடவுளிடம் ஏதாவது பிரார்த்திக்க வேண்டுமோ என்று ஒரு நினைவலை. எனக்கு நானே பதில் சொல்லிக்கொண்டேன்..யோசிச்சி…யோசிச்சி அதெல்லாம் ஏதும் இல்லையென்ற முடிவுக்குத்தான் வந்து விட்டோமே; பிறகு இந்த நினைவு எதற்கு என்று நானே அந்த நினைவிலிருந்து வெளியே வந்தேன். மனைவி, மக்கள் நினைவு அடுத்தது…அவர்களை விட்டுவிட்டுப் போகிறோமோ என்று ஒரு வேதனை வந்தது. அடுத்த நினைவு: Osho சொல்லியது என்று நினைக்கிறேன்; only living is painful and not dying. நாம இப்போ செத்துட்டம்னா, நமக்குஅதன்பின் ஒன்றுமில்லை. பாவம் உயிரோடு இருப்பவர்கள்தான் கஷ்டப்படுவார்கள் என்ற நினைவு. வீடு திரும்பிய சின்னாளில் நான் எழுதிவைத்த ஆங்கிலக் குறிப்பில் உள்ள ஒரு வாக்கியம் அந்த கணத்தை முழுமையாகச் சொல்லும் என்று நினைப்பதால்… : It was like the living Sam looking down on the dying Sam.

‘தப்பித்து வந்தானம்மா’ அப்டிங்கிறது மாதிரி மறுபடி அறை வந்து, மக்கள் சிரிப்பைப் பார்த்து… ம்…ம்… நாலு வருஷம் முழுசா ஓடியிருச்சோ…? மருத்துவ உலகின் அதிசயமாகச் சில விஷயங்கள் இருந்தன. விலா எலும்புகளின் நடுவில் அறுத்து, நெஞ்சைப் பிளந்து, காலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தக் குழாய்களை வைத்து, இதயதிற்குச் செல்லும் அடைபட்ட ரத்தக் குழாய்களைச் சீர் செய்து, மறுபடி நெஞ்சுக் கூட்டை மூன்று இடங்களில் ‘கம்பிகளால் முடுக்கி’, என்ன, …படிக்கும்போதே தலை சுற்றுகிறதா என்ன…?..இவ்வளவு ‘வேலை’ நடந்த பிறகும் ஓரிரு நாளிலேயே காலில் இரத்தக்குழாய் எடுப்பதற்காக போட்ட கீறல் சரியாகி விட்டது; நெஞ்சில் மூன்று சின்ன பாண்டேஜ் மட்டும்தான்; அதுவும் முதல் வாரத்தில் மட்டும்தான்.

இன்னொரு சோதனை; (echo cardiogram..?)படுக்கவைத்து இதயத்தின் உட்கூறு தெரிய, அதில் புள்ளிகள் பலவைத்து,plot செய்து…ஒரு கிறித்துவ பெண் எனக்கு அந்தச் சோதனையைச் செய்து கொண்டிருந்தார்கள். அநேகமாக இதயத்தின் உட்சுவர்களின் நிலை பற்றித் தெரிந்துகொள்ள செய்யப்படும் சோதனை என்ற அளவு புரிந்தது. அவர்களிடம் கேட்டேன்; ஆமாம் என்றார்கள். இதயச்சுவர்கள் எந்த அளவு damage ஆகியுள்ளது என்றேன். 45-50 விழுக்காடு என்றார்கள். ‘பரவாயில்லையே. அவ்வளவு போன பின்னும்கூட வண்டி இப்படி ஓடுதே’ என்றேன். என் பெயரிலிருந்து என்னைக் கிறித்துவனாக நினைத்து, ‘கடவுள் (‘கர்த்தர் என்று வாசித்துக்கொள்ளவும்!) அவ்வளவு உன்னதமாகப் படைத்திருக்கிறார்’ என்றார் அவர். ‘கடவுள் படைச்சிருந்தா இந்த மாதிரி ஓட்ட ஒடசலாவா படைச்சிருப்பார்’ என்றேன். ‘அவர் நல்லாதான் படைச்சிருக்கார்; நாமதான் அதை சரியா வச்சுக்கிறதில்லை’ -இது அவர். ‘சாமி படச்ச விஷயமா இருந்தா நாம என்ன பண்ணினாலும், அது பாட்டுக்கு நல்லா இருந்தாதான் சாமி படச்சதுக்கு ஒரு மரியாதை இருக்கும்’ – இது நான். ‘இப்படி படுக்கப்போட்டு, அறுத்த பிறகும் உனக்குப் புத்தி வரலையே; – இது அவர் தம் மனசுக்குள் சொல்லிக்கொண்டது. பதில் பேசாமல் ஒரே ஒரு முறை முறைத்துவிட்டு, தன் வேலையப் பார்த்தார்கள்.

2001,நவம்பர் 8-ம் தேதி – அறுவை முடிந்த பத்தாம் நாள் discharge. கடைசி நேர வேலைகள் எல்லாம் முடித்து நீங்கள் போகலாம் என்று கூறிய பிறகும், wheel chair வரும் என்ற எண்ணத்தில் காத்திருந்தோம். ‘என்ன போக மனசில்லையா?’ என்று நர்ஸ் கேட்டபோது, wheel chair-க்கு காத்திருக்கிறேன் என்றேன். நீங்கள் இப்போ நார்மல்…பேசாமல் நடந்து போங்கள்’ என்றார்கள். நடந்து மின் தூக்கிக்குப் போனேன்! எனக்கே ஆச்சரியம்!

நான் ஒரு தனிக்கேசு என்று தெரிந்துகொண்டேன். பலருக்கும் ஏதாவது வெளிப்படையான பிரச்சனைகள் இருக்கும்; மூச்சு விட கஷ்டம்; நெஞ்சு வலி; இப்படி
ஏதாவது. எனக்கோ, வண்டி அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கும். திடீரென்று – somebody throwing a spanner into the wheel – என்பார்களே, அது மாதிரி காத்துப் போன பலூனாய் பொசுக்குன்னு ஏதாவது ஆகிவிடுகிறது. இதனால் எப்போ மணி அடிக்கும் என்று தெரியாத ஒரு ‘மாய வாழ்க்கை’! அதனால் சாவைப் பற்றிப் பேசவோ, நினைக்கவோ எளிதாகத்தான் இருக்கிறது. என்ன, துணைவியாருக்குத்தான் அப்பப்போ கோவம் வரும். ஏன்னா, செத்த பிறகு (கமல்ஹாசன் செஞ்சது மாதிரி) உடம்பைத் தானமாகக் கொடுக்கணும்னு ஆசை. பிள்ளைகளிடம் அது பற்றிப் பேசி சம்மதம் வாங்குவது பிரச்சனையில்லை; ஓரளவு வாங்கியது மாதிர்தான். துணைவியாருடன்…? கேட்டா, இதப் பற்றிப் பேசினா அடுத்த ஓரிரு மணிவரை பேச்சு கிடையாது. சரி, அது வேண்டாம்னா, at least, கல்லறை வேண்டாம்; எரிச்சிடலாம்னு சொன்னாலும் சண்டைக்கு வர்ராங்க. இந்தக் கிறித்துவர்கள் மட்டும், உள்ளதே இடப் பஞ்சம் இங்கே; இதில் நல்ல இடமா பாத்து ஏக்கர் கணக்கில வாங்கி, ஆளுக்கு 6 x 4 ன்னு கொடுத்து இடத்த வீணடிக்கிறார்கள்! இந்துக்களின் வழக்கம் ரொம்பப் பிடிக்குது; முஸ்லீம்காரரகள் கூட புதைத்தாலும் தனி அடையாளம் இல்லாமல் ஒரே இடத்தில் எல்லோருக்கும் ஒன்றாய், சமமாய் முடித்து விடுகிறார்கள். ‘சமரசம் உலாவும் இடம்’ அப்டின்னு சொல்லிட்டு,கிறித்துவர்கள் கல்லறையில் சிலருக்கு பளிங்கு அது இதுன்னு பளபளன்னு பெருங் கல்லறைகள்; அதிலும் உயர்வு தாழ்வுகள்…சரி…அதெல்லாம் பிறகு மக்கள் பாத்துக்கட்டும்.

ரொம்ப சாரி’ங்க…ரொம்ப depressing விஷயமா எழுதிட்டேனோ? கண்டுக்காதீங்க…என்ன.
இந்த மாதிரி நான் எழுதினதால யாரும் ‘டல்’லா ஆகியிருந்தாலும் கோவிச்சுக்காதீங்க. After all, it is also one point of life..இல்லீங்களா?

இனி இந்த மாதிரி கணங்கள்எழுதல…அடுத்த கணம் இனி எப்பவோ, எப்படியோ…உங்கட்ட அது பற்றியெல்லாம் சொல்ல முடியுமோ, முடியாதோ.அதனால இப்பவே – bye

Image hosted by TinyPic.com

கஷ்டப்படுத்தினதிற்காக உங்கள சிரிக்க வைக்கிறது என் கடமையாப் போச்சு. இப்ப உங்கள சிரிக்க வைக்கணும்னா அதுக்கு ஒரு வழி கைவசம் இருக்கு…அதுக்காகத்தான் இங்கேயுள்ள படம்…பாத்தா உங்களுக்கும் சிரிப்பு வருமே…நல்லா சிரிச்சிக்கிங்க, சரியா..?

சந்தோஷமா அடுத்த பதிவில சந்திப்போம்.

102. மரணம் தொட்ட கணங்கள்…3

Image hosted by TinyPic.com
1990 ஜனவரி முதல் நாள்; புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து இரவு வீடு திரும்பிய அப்பா நெஞ்சு கரிக்கிறது என்று சொல்லி, அம்மாவிடம் சுக்கு மல்லி காஃபி கேட்டு, குடிச்சிட்டு படுத்திட்டாங்க. இரவு இரண்டு மணிக்கு அம்மா என்னை எழுப்பியபோது அப்பாவின் மூச்சு சரியாக இல்லை; தொண்டைக்குள் கரட்..கரட் என்று சத்தம். எதிர் வீட்டு டாக்டர் நண்பர் வந்தவர் ‘எல்லாம் முடிஞ்சிடுச்சி’ என்று சொன்னபோது மணி 2.20. அப்பாவின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் விஷயத்திற்காக டாக்டரிடம் சென்ற போது, டாக்டர், நண்பர் என்ற முறையில், ‘Sam, அப்பாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை; அவரே இப்படி சட்டுன்னு போய்ட்டார். ரெண்டு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே’ என்றார். ஏற்கெனவே நானும் இதைப்பற்றி நினைத்ததுண்டு; பயப்பட்டதும் உண்டு.

ஆறாம் தேதி இரவு; வீட்டில் சும்மா வெளியே நின்று கொண்டிருந்தவனை நண்பன் அரசரடி வரை டீ குடிக்கக் கூட்டிப்போனான்; நாலைந்து பேர் சேர்ந்தோம். டீ, அரட்டை என்றாகி புறப்படும்போது இரண்டு சிகரெட் வாங்கி ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு நண்பனின் வண்டியில் பின்னால் உட்கார, தெரு முனையில் விட்டுவிட்டுச் சென்றான். வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது இந்தச் சனியனை விட்டால் என்ன என்று நினைத்து கையில் இருந்ததை ஆழமாக இழுத்து, உறிஞ்சி…நசுக்கினேன். பையில் இருந்த இன்னொரு சிகரெட்டை எடுத்து வீசி எறிந்தேன். ஒரு கம்பீரம் வந்த மாதிரி தோன்றியது. ஒரு பத்துப் பதினைந்து அடிதான் அந்தக் கம்பீரம் எல்லாம். திரும்பிப்போய் தூர எறிந்த சிகரெட்டைத் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டேன்; வீட்டிற்குச் சென்று, அந்த சிகரெட்டைப் பற்ற வைத்து மீண்டும் ஆழமாக உறிஞ்சி…சூழும் புகை மண்டலத்திற்குள் லயித்திருந்து, கடைசியாக ஆஷ் ட்ரேயில் அதை நன்றாக நசுக்கி…நாளையிலிருந்து சிகரெட் குடிக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுத்தேன் – வாழ்க்கையில் அதுபோன்று சிகரெட்டுக்காகவே ஏற்கெனவே எடுத்த முடிவுகளின் எண்ணிக்கை ஒரு இருபதிலிருந்து முப்பதாவது இருக்கும். இது முப்பத்தொன்று என்று வைத்துக்கொள்வோமே; (Mark Twain சொன்னதை இப்ப நான் வேறு சொல்லணுமா, என்ன?)எப்படி என்று தெரியவில்லை… அதன் பிறகு இந்த நிமிடம் வரை குடிக்கவேஏஏஏஏஏஏஏஏஏ இல்லை! வீட்டில், வெளியில், கல்லூரியில் எங்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம். எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் என்று சொன்னவர்கள்தான் அதிகம்.

A smoker is always a smoker – என்பதற்கு ஏற்றாற்போல இன்னுமும் சிகரெட் ஆசை என்னவோ விடவில்லை! பேனா மூடி, பென்சில் இப்படி ஏதாவது ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ‘பழைய நினைப்பில்’ மூழ்கி, வீட்டில் திட்டு வாங்கும்போதெல்லாம், ‘என் இரண்டாம் மகளின் கல்யாணம் முடிந்த அன்றைக்குப் பாருங்கள்; தண்ணி, தம்முன்னு அடிச்சி ஒரு ‘அலப்ஸ்’ கொடுக்கிறேனா இல்லையான்னு’ சொல்லிக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி அவள் கல்யாணம் முடிந்த அன்று இரவு ‘ராஜ மாளிகை’யில் என்னோடு தம் அடிக்கப் பழகிய ஆல்பர்ட்டிடமும், இன்னொரு நண்பனிடமும் ஒரே ஒரு சிகரெட் ஓசி கேட்டேன்; பாவிப் பசங்க தரமாட்டேன்னுட்டாங்க! அதனால், இரண்டில் ஒன்றை மட்டும் செய்து என் வாக்குறுதியில் 50% மட்டும் நிறைவேற்றிக்கொண்டேன். இன்னும் ‘ஆசை இருக்கு தம் அடிக்க; அதிர்ஷ்டம் இல்லை பத்த வைக்க!’

எண்பதுகளின் நடுவரை டென்னிஸ் விளையாட்டு. அதன் பிறகு கஷ்டமாகத் தோன்றியது. உள்ளதே backhand என்றாலே அலர்ஜி; எப்படியோ அள்ளி அள்ளி போடணும். இப்ப அந்த சைடில் பந்து வந்தாலே ஒரு பெரிய philosophy-யே உருவாயிடுச்சி. என்ன, அந்த பந்தை எடுத்தாலும், அள்ளி அடுத்த சைடுக்குப் போட முடியவா போகுது; அப்ப, ஏன் வெட்டியா ஓடணும்? இதன் அடுத்த நிலையாக forehand-க்கு வரும் பந்தைப் பற்றியும் அதே தத்துவம் வர ஆரம்பிக்கும் நிலையில் ஒரேயடியா ரிசைன் பண்ணிட முடிவு செய்தேன். நல்ல வேளை வீட்டுக்குப் பக்கத்தில் மூன்று நண்பர்கள் shuttle cock பிரிட்டோ பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாலாவதாக நான் போய்ச் சேர்ந்தேன். நாலில் மூன்று பேர் சிகரெட் குடிப்பவர்கள். எங்களுக்கு warming up என்றாலே தம் அடிப்பதுதான். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னும், பிறகு பின்னும் warming up கட்டாயம் உண்டு.

1990 செப்டம்பர் காலை. வழக்கம்போல விளையாட அரைக்கால் சட்டை போட்டுகிட்டு, shoe மாட்டப் போகும்போது திடீரென இடது கையின் மேற்பாகத்தில் சுரீர் என்று ஒரு வலி. ஏதோ பிடித்திருக்கும் போல என்று நினைத்து, துணைவியாரைச் சிறிது தேய்த்துவிடச் சொன்னேன். அடுத்த கையிலும் அதே வலி. புரிந்தது. அப்பா இறந்த போது மாரடைப்பின் விதங்கள், அறிகுறிகள் என்று பலர் சொல்லித் தெரிந்தது அப்போது கைகொடுத்தது. அப்படியே எதிர் வீட்டு டாக்டர் நண்பரிடம் சென்றேன். உறுதி செய்தார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

வழக்கமான மயக்க ஊசிகள், I.C.C.U., சுற்றியும் monitors, பதட்டத்தை அதிகமாக்கும் டாக்டர்களின் வருகைகள், கதவின் வட்டக் கண்ணாடி வழியே தெரியும் ஆதங்கம் நிறைந்த முகங்கள் …இப்படியே நாலைந்து நாட்கள்; எல்லாமே ஒரு பனிமூட்ட effect-ல். பின்பு ஒரு பத்துப் பனிரெண்டு நாட்கள் மருத்துவமனை வாசம். முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் குடும்பத்தினர் முகத்தில் இருந்த இறுக்கம் மறைய, உடனிருந்த நண்பர்களின் வால்தனமும் கூடியது. வருபவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி Horlicks, Grapes, Oranges என்று வாங்கிக் குமிக்க, நண்பர்கள் ரவியும், சூரியும் கதவில் ஒரு போஸ்டரே ஒட்டிவிட்டார்கள்: There are many brands other than Horlicks!, Only seedless grapes accepted! என்று!

மெடிக்கல் லீவ் முடிந்து கல்லூரி திரும்பியபோது பல தரப்பட்ட comments! எனக்கு வந்தது heart attack-ஆக இருக்காது என்ற நம்பிக்கை சிலருக்கு. பல காரணங்கள்: சிகரெட் விட்டாச்சு – நல்ல active-ஆக இருக்கிற ஆளுதானே – எதையும் சீரியஸா எடுக்காத ஆளல்லவா {நம்ம போடுற ஆட்டம், அடிக்கிற கூத்து, போட்டுக்கிற சட்டை துணிமணி-கல்லூரியில் ஆசிரியர்கள் மத்தியில் ‘முதல் ஆள்’ என்று பெயர் (!?) வாங்கிய விஷயங்கள் பல

Image hosted by TinyPic.com
மருத்துவமனையில்….

- உதாரணமா, முதல்ல ஜீன்ஸ் போட்டது, ஜிப்பா பைஜாமாவோட வர்ரது, வலது கையில் வாட்ச்(ஆனா, இப்போவெல்லாம் இடது கையில்தான்; அதுக்காக வலது கையில் கட்றவங்களை நான் ஒண்ணுமே சொல்லலையே!!) இதோடு, பூனக்குட்டிய இடுக்கிகிட்டு இருக்கிறது மாதிரி எப்போதும் தோளில் தொங்கும் காமெரா, குட்டியூண்டு வெள்ளெழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு அதையும் கயித்தில கட்டி தொங்க விட்டுக்கிறதுன்னு ஒரு பெரிய லிஸ்ட் — இதல்லம் வச்சு பல மக்கள் freaky என்பார்கள், சிலர் trendy என்பார்கள்.


எது எப்படியாயினும், நான் எனது மூன்றாம் கட்டளையைப் பின்பற்றி செய்த விஷயங்கள் இவை.

இதையெல்லாம் போற்றுவோர் போற்றட்டும்…ம்ம்… அதுக்குப் பிறகு என்னமோ சொல்லுவாங்களே அதுமாதிரி கண்டுக்காம போயிடறது. இந்த மாதிரி இருந்ததாலேயே மக்கள் அப்படி நினைச்சாங்க; சொன்னாங்க. ஒருத்தர் ‘you’ve become very fair’அப்டின்னார். Dont envy. Got it by paying a heavy price for that’ என்றேன். ஏதாவது gas problem இருக்கும் என்று சொன்னது பலர். நானும் அடுத்த செக்கப் போகும்போது டாக்டர் அதே மாதிரி சொல்லிட மாட்டாராவென நினைத்தேன். sure case of myocardial infarction. left ventricle wall has become thicker- அப்படின்னு ஒண்ணுக்கு மூணு டாக்டர்கள் சொல்லிட்டாங்க! கொழுப்பும் (cholesterol) கூடிப்போச்சுன்னாங்க. (யாருங்க அது? ‘இது’ தெரிஞ்சதுதானே அப்டீங்றது?) ஒரு முறை ‘அட்டாக் கேசுகள்’ நாலஞ்சு பேராசிரியர்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது – வேறெங்கே, காலேஜ் கான்டீன்தான் – ஒருவர் கேட்டார். நாம எல்லாருக்குமே personal habits ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா ஒரே மாதிரி அடிபட்டு இருக்கோமே, காரணம் என்னவாக இருக்கும் என்றார். ஆங்கிலப் பேராசிரியர் வசந்தன் ரொமப் சிம்ப்ளா ஒரு தியரி சொன்னார்: heart-ன்னு ஒண்ணு இருந்தா heart attack-ன்னு ஒண்ணு வரும்!

இதில என்ன வருத்தம்னா, அப்போ என் மகள்கள் இருவருமே இதன் gravity-யைப் புரிந்துகொள்ள முடியாத வயதினர்; மூத்தவள் அப்போ படித்தது XI; அடுத்தவள் VIII. துணைவியார் அப்போது வேலை எதுவும் பார்க்கவில்லை. அதனாலேயே, வேலை தேட, ஒரு வேலையும் சீக்கிரம் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், என் emotional balance-யை முற்றிலுமாக இழந்தேன்; இன்னும் அந்தப் பிரச்சனை உண்டு. அதைப் பற்றித் தனியா பேசணும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க முயற்சித்தேன். இருந்தும் 5 வருடங்கள் ஆன பிறகு, 95-ல் இரண்டாம் முறையாக ‘அட்டாக்’. மறுபடியும் மருத்துவமனை, I.C.C.U.; I.C.U., சோகங்கள், பயங்கள், ஆறுதல்கள், இறுக்கங்கள் என இன்னொரு சுழற்சி. அதிலிருந்தும் வெளியே வந்து, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தாகி விட்டது. அதற்கு அடுத்த வாரம் உறவினர்கள் வேளாங்கண்ணி போவதாக முடிவு செய்து, என் மகள்களையும் கூட அழைத்து சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும் இரவுக்கு முந்திய காலையில் மறுபடி எனக்குப் பிரச்சனை வர, முந்திய மருத்துவமனை மீது திருப்தி இல்லாத காரணத்தால் நண்பர்கள் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரவு வீடு திரும்பிய மகள்களுக்கு நான் மறுபடி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன் என்ற சேதி மட்டும் கிடைத்தது. எந்த மருத்துவ மனையென்பதோ, என்ன ஆயிற்று என்பதோ ஒன்றும் தெரியாது. பாவம், குழந்தைகள் உறவினர்களோடு பழைய மருத்துவ மனைக்குச் சென்று நான் அங்கு இல்லாதது கண்டு வேறு சில மருத்துவமனைகளை முயற்சித்து அங்கும் தோல்வி கண்டு என்ன செய்வதென்று அறியாமல் உறவினரின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். நீண்ட, சோகமான, கொடுமையான இரவு என்று அவர்கள் மனதில் அந்த இரவு இன்றுவரையும் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்த வயதில் வரக்கூடாத சோகங்களும், வேதனைகளும் பிள்ளைகளுக்கு. அவர்களைப் பார்த்து எனக்கு அந்த நோய்க்குப் பின் வரக்கூடாத மன அழுத்தங்கள். குரங்கை நினைக்காம மருந்து சாப்பிடு என்பது போன்ற கதைதான். ரொம்ப டென்ஷன் வச்சுக்கக் கூடாதுன்னு சொன்னாதானே, டென்ஷனே வருது. ‘ஆசையை அடக்கு’ன்னு புத்தர் சொன்னாராம்; ஆனா, அதுவே ஒரு ஆசைதானே. another oxymoron in our lives! வேறென்ன சொல்ல? ஆயினும் வாழ்க்கை நல்லாவேதான் போச்சு – 2001 வரை.

அதுவரை இருந்த ‘சிலாவத்தான’ (care free) வாழ்க்கையைக் கொஞ்சம் மாற்றி இப்போ ஒரு ஒழுங்கான வாழ்க்கைக்கு மாறினேன். ஒரு காலத்தில் dark room-க்குள் போனால் நாளும், நேரமும் மறந்தே போகும். photography-ன்னு ஒரு கிறுக்கு; b & w processing and printing என்று நேரம் காலம் மறந்ததெல்லாம் இப்போ பழைய கதையாயிற்று. சொன்னது மாதிரி 1995 -2001 வரை நடந்த நல்ல விஷயங்கள் பல: தலைக்கு மேல் ஒரு கூறை (1996)- ரொம்ப காலம் தாழ்ந்ததாயினும் ஒரு மன நிறைவு; மூத்த மகள் கல்வி முடித்து, கல்யாணமும் (1997), சின்னவளின் படிப்பு முடித்து, வேலையிலும் சேர்ந்தது, மூத்த பேரன் பிறந்தது (2001). இதோடு நீண்ட நாள் கனவான கார் ஒன்று வாங்குவதும் அந்த ஆண்டே. ஜாவா பழகியது போலவே காரும் பழகினேன். எப்போதோ ஒரு நண்பனின் காரை ஓட்டிய அனுபவம். அதை வைத்தே நாலு நாள் நம்ம ஏரியாவில் – ஊரைவிட்டு ஒதுங்கி வீடு கட்டியதில் இந்த ஒரு லாபம் – ஓட்டிவிட்டு ஊருக்குள்ளும் போயாகிவிட்டது. கார் வாங்கி ஓரிரு மாதத்தில் வலது கையில் கொஞ்சம் வலி. கார் ஓட்டியதில் வந்த வலியென்று நினைத்து பேசாதிருந்து விட்டேன். வலி கொஞ்சம் இடம் மாறியது – migratory pain என்று சொல்வார்களே என்று ஒரு சின்ன நினைப்பு. சரி, ரெகுலர் செக்கப் செய்தும் நாளாயிற்றே என்று டாக்டரிடம் போனேன். அது 2001 செப்டம்பர் மாதத்தின் கடைசியில் ஒரு நாள்.

அங்க போனா…

101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…?

Image hosted by TinyPic.com

ஐந்தாவது வயதில் மதுரை வந்தாகி விட்டது. சிறிய குடும்பம்; அப்பா, அம்மா, நான். வந்ததுமே தூய மரியன்னைப் பள்ளியில் சேர்ந்தேன். ஏற்கெனவே சொன்னது மாதிரி, அம்மா இறப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள் எவ்வளவுக் கெவ்வளவு நினைவில் இல்லையோ, அதற்கு நேர் எதிர்மறையாக அதன் பின் நடந்தவைகள் பலவும் நன்றாகவே நினைவில் உள்ளன. முதல் நாள் பள்ளியில் மாணிக்கம் சாரிடம் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது, முதல் வரிசையில் சீட் பிடித்தது அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன். இப்போ சொல்லப் போற விஷயம் நடந்தது அநேகமாக எனது 11-12 வயதில் நடந்ததாக இருக்கும். ஆறு அல்லது ஏழாவது வகுப்பு படிக்கும்போது நடந்ததாக இருக்க வேண்டும்.


தாத்தாவின் பள்ளியிலேயே மூத்த அத்தைமார்கள் இருவரோடும் இரண்டிலிருந்து ஐந்தாம் வயது வரை அந்த புனித ஜோசஃப் பள்ளியில் – குடும்பப் பள்ளியில் – படித்துவிட்டு, இப்போது மதுரைக்கு வந்தாகிவிட்டது. வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் சொந்த ஊர் செல்லுவது வழக்கம். கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், கோடைகால விடுமுறையிலும் சொந்த ஊர் செல்வது, அடேயப்பா, என்ன சந்தோஷம்! ஊருக்குப் புறப்படும் முன்பே நம்ம தனிப்பட்ட முஸ்திபுகள் நிறைய இருக்கும் புறப்படுறதுக்கு முந்தின நாளே தூக்கமெல்லாம் வராது.அது கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்துக்கு வர்ரதுக்கு முந்தி இன்னொரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு. ஏன்னா, அநேகமா உங்களில் ஒருத்தருக்குமே அந்த விஷயம் தெரிந்திருக்காது. (That includes Dondu, Joseph…மற்ற ‘பெரியவர்கள்’!) அந்த மாதிரி விஷயத்தைச் சொல்லாம விடலாமா? நிகழ் & வருங்கால சந்ததிகள் என்னை மன்னிக்காதே!

அது என்னன்னா, மதுரை டூ திருநெல்வேலி, அல்லது மதுரை டூ தென்காசிக்கு ரயில் பயணம். ஏன்னா, எங்க ஊரு நெல்லை, தென்காசி இரண்டுக்கும் சரியாக நடுவில் இருந்தது. பிறகு, எங்கள் ஊர் செல்ல பஸ்ஸில் செல்லணும். கொஞ்ச வருஷம் முன்பு வரை வெளியூர் பஸ்களில் ஏறுவோர் பின் வாசல் வழியே ஏறி, உடனேயே அந்தக் கடைசி வரிசையில் உள்ள ‘முக்கு சீட்’டைப் பிடிப்பார்கள். பல வசதி. அவரவர் மனசைப் பொறுத்தது; காத்து வரும் நல்லா; சிகரெட் அடிச்சிக்கிட்டே வரலாம். ஏறுறவங்க, இறங்குறவங்களுக்கு உதவி பண்ணி, ‘போற வழிக்குப் புண்ணியம் தேடலாம்’! ஆனா, அப்போவெல்லாம் அந்த சீட்டே இருக்காது; அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன? – ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும். இதச் சுற்றுவதற்கென்றே அங்கங்கே சின்ன சின்னப் பையன்கள் ஓடி வருவார்கள். அப்ப அவர்களுக்குச் ‘சம்பளம்’ ஒரு ஓட்டைக் காலணா; அட, ஒரு நாட்டுப் பழம் வாங்கிற காசுன்னு வச்சுக்குவோமே! இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பெட்ரோல்,டீசல் இவைகளுக்கு இருந்த தட்டுப்பாட்டால் இந்த steam buses பயன் படுத்தப்பட்டனவாம். பாய்லர் இருப்பதால் அந்தக் கடைசி வரிசையில் சீட்டுகளே இல்லாமல் space for luggage?-இருக்கும். அப்படி பஸ்களில் பயணித்து ஊர் வந்து சேர்வோம். அந்த பஸ்களை நடு நடுவே நிறுத்தி கண்டக்டர் பஸ்ஸின் கடைசியில் இருந்து கொண்டு, டிரைவருக்கு trip sheet details சொல்லுவார்’ இல்லை ‘கத்துவார்’. அப்போ, ‘மாறாந்தை ஒரு ஜி.டி., நல்லூர் ஒரு ஜி.டி.’ என்பது மாதிரி சொல்லுவார். அது என்ன, ஜி.டி. அப்டின்னு ரொம்ப நாளா ஒரு கேள்வி உள்ளேயே அரிச்சிக்கிட்டு இருந்து, பின்னாளில் ஜி.டி. என்பது got down (G.D.) என்று புரிந்தது.

பொது விடுமுறை என்பதால் மதுரைப் பெரியப்பா, பாளையன்கோட்டை பெரியப்பா, தூத்துக்குடி சித்தப்பா என்று ஒரு பெரும் ‘நகர் கூட்டம்’ சேரும். நிறைய cousins. பெரிய தாத்தா வீடு ரொம்பப் பெரிசு. ஓடிவிளையாடறது, கலை நிகழ்ச்சி இப்படிப் பல அப்பப்போ பெருசுகளின் கண் பார்வையிலோ, அவர்களுக்குத் தெரியாமலோ நடக்கும். ஆனா ஒரு வருஷம் மட்டும் தாத்தா ஸ்கூலில் என்ன காரணத்துக்கோ தெரியவில்லை; ஒரு பெரிய விழா நடந்தது. பகல் முழுவதும் விளையாட்டு, கண்காட்சி அப்டி இப்டின்னு என்னவெல்லாமோ நடந்தது. அதன்பின், மாலை ஒரு நாடகம்.

கிறித்துவ மக்கள் நாடகம் போட்டால் என்ன போடுவார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்; ஊதாரிப் பிள்ளை கதைதான் என்று யாராவது சரியாக நினைத்திருந்தால் நீங்களே உங்கள் முதுகை ஒரு தட்டு தட்டிக் கொள்ளுங்கள்! எப்படி அந்தக் கதையின் அடிப்படையையே நான் பின்னால் கேள்விக்குரிய ஒன்றாக எடுத்துக்கொண்டேன் என்பதுதான் ஒரு irony! அது என்ன ராசியோ, மாயமோ தெரியலை; நானே மொத்தம் மூன்று தடவை இதே கதையை வைத்துப் போடப்பட்ட ட்ராமாக்களில் ஒரே ரோலில் நடித்திருக்கிறேன்; இரண்டாம், மூன்றாம் தடவைகள் மதுரையில நம்ம கோவில்ல இளைஞர் மனறத்திலிருந்து போட்டது.
இப்போ நம்ம முதல் நாடக்த்துக்கே வருவோம். பெரிய ஸ்டேஜ், ஸ்க்ரீன் அது இதுன்னு திட்டம் போட்டாச்சு. இவ்வளவையும் நடத்தியது என் கடைசி இரண்டு அத்தைகள்; அப்பாவின் கடைசித் தங்கைகள்.

Image hosted by TinyPic.com

படம் பார்த்துக்கொள்ளுங்கள். நடுவில் நிற்கும் எனக்கு இடப்பக்கம் நிற்பது ரோஸ் அத்தை; வலது பக்கம் மரியத்தை. இவர்கள் பொறுப்பில்தான் அப்போது எங்கள் பள்ளி நடந்துவந்தது. விழாவை முன்னின்று நடத்தியது இவர்களே.(ரோஸத்தை பின்னாளில் nun ஆனார்கள்; ரொம்ப நல்ல, எனக்குப் பிடிச்ச அத்தை; இப்போது இரு மாதங்களுக்கு முன்புதான் காலமானார்கள்.)இந்த இரண்டு அத்தைமார்களின் தலைமுடியழகை வெகு சிலரிடமதான் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தடிமன்; அவ்வளவு நீளம். ரோஸத்தை nun ஆனபோது நிறைய பேர் அவர்களின் முடிக்காகவே ஸ்பெஷலாக வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது.

டிராமா வசனம் எல்லாம் தயார். ‘நகர் கூட்டத்தைச்’ சேர்ந்த மக்களுக்கு டிராமாவில் lion’s share கிடச்சுது. அப்பா கேரக்டருக்கு என் அண்ணன் (மதுரை) ஒருவன், எக்ஸ்ட்ராவாக ஒரு தங்கை (பாளையன்கோட்டை) கேரக்டர் இருந்திச்சு; அப்புறம் டான்ஸ் இரண்டு; என் இன்னொரு அண்ணன் – என்னைவிட ஒரு வயது மூத்தவனுக்கு ஹீரோ ரோல் கொடுக்கப்பட்டது. எனக்கு – ராஜா பக்கத்தில நின்னு சாமரம் வீசுற காரக்டர் மாதிரி – ஹீரோவின் நண்பன் காரக்டர் கொடுக்கப்பட்டது.வசனம் மனப்பாடம் செய்தோம். அத்தைகள்ட்ட ஒப்பிக்கணும். முதல் நாள் ரிகர்சல்; அதுதான் screen test அப்போதைக்கு! எனக்கு ஓகே ஆயிரிச்சி. அப்பா காரக்டர் ஓகே. ஆனா இந்தக் கதாநாயகன் மட்டும்தான் சரிப்பட்டு வரலை.அத்தைமார்கள் முயன்று பார்த்தார்கள். அவர்களாலும் ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்தது a merciless operation தான்! எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஹீரோ வேஷம் எனக்கு. அந்த அண்ணனுக்கு எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேஷம். அத்தைமார்கள் முதலிலேயே சொல்லிவிட்டார்கள்; நானும் சரியாகச் செய்யவில்லையெனில் என்னிடமிருந்தும் வேஷம் பறிக்கப்படுமென்று. மனப்பாடம் பண்ண கால அவகாசம் கொடுக்கப்பட்டு மறுபடியும் ரிகர்சலுக்கு வந்தேன். அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிற சீன்; ஒரே டேக்கில் ஓகே ஆச்சு!

ரெண்டு அத்தைமார்களில் உண்மையிலேயே ரோஸத்தை ரொம்ப சாஃப்ட் டைப்; மரியத்தை கொஞ்சம் tough -இப்பவும்! அவங்கவங்க நிஜ கேரக்டருக்கு ஏத்த மாதிரி, முதல்ல அப்பாகூட சண்டை போடற சீன், சொத்தைப் பிரிச்சுக்கிட்டு போற சீன்களுக்கு மரியத்தையும்,அதன் பின் மனந்திருந்திய மைந்தனாக மாறும்போது ரோஸத்தையும் எனக்கு டைரக்டர்கள் ஆனார்கள். பயங்கர ரிகர்சல்; நடனப் பயிற்சிகள்;’பச்சைக் கிளி பாடுது; பக்கம் வந்தே ஆடுது’ன்னு ஒரு பாட்டு, படம் என்னவென நினைவில்லை (அமரதீபம்..?) – இந்தப் பாட்டுக்கு ஒரு ‘கிளப் டான்ஸ்’! அதைவிடவும்,நாங்கள் நினைத்தும் பார்க்காத சைசுக்கு ஸ்டேஜ்; அது மட்டுமா? ராஜா காஸ்ட்யூம் இருக்குமே அதெல்லாம் வந்திச்சி. எனக்கு ஒரு புளு வெல்வெட்ல கோட்டும், கால்சராயும்.என்ன கால்சராய்னு சொல்றென்னு பாத்தீங்களா? ஏன்னா, அது அரையும் இல்லாம, முழு நீளத்துக்கும் இல்லாம ரெண்டுங்கெட்டானா – இந்தக் காலத்து pedal pusher மாதிரின்னு வச்சிக்கங்களேன். இதை நல்லா ஞாபகம் வச்சிக்கிங்க; பின்னால ஒரு touching scene இத வச்சுதான்.

விழா அன்று மதியம் வரை மக்களோடு மக்களாக எல்லாநிகழ்வுகளிலும் பங்கெடுத்தாயிற்று. அத்தைமார் சொன்னது மாதிரி மாலை சீக்கிரமே ஸ்டேஜுக்குப் பின்னால், வந்தாச்சு. எங்கிருந்து வந்திருந்தார்களோ, மேக்கப் போடக்கூட வெளியிலிருந்து ஆள் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் முன்வரைகூட அண்ணனாய் கூட சுற்றியவன், இப்போது வேட்டி கட்டி, தலை முடியெல்லாம் வெள்ளையாய் மாறி ‘அப்பா’வாக மீசையோடு எதிரில் நின்றான். தங்கைகள் நங்கைகளாக மாறி, சேலையில், தலையில் கிரீடத்தோடு நின்றார்கள். வியப்பாய் இருந்தது; வேடிக்கையாயும் இருந்தது. நான் என் புளு வெல்வெட் கோட்டோடும், கால்சராயோடும் நின்றேன். ஒரிஜினல் ஹீரோவாக இருந்த சின்ன அண்ணன் கொஞ்சம் பொறாமையோடுதான் என்னைப் பார்த்தான். அவனுக்கு வெல்வெட் கோட் ஒன்றும் கிடையாது, பாவம்!

நாடகம் ஆரம்பித்தது. மரியத்தைதான் prompter. சைடுல நின்னுக்கிட்டு அப்பப்போ எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க – ஒரு ரிமோட் கன்ட்ரோல்தான். அப்பாகூட சண்டை போட்டு, சொத்து பிரிச்சிக்கிட்டு, நண்பர்களோடு கும்மாளமாயிருந்தாச்சு. இப்போ, ஒரு ‘கிளப் டான்ஸ்’. அதுவும் முடிஞ்சிது. இப்போ நான் அந்த கிளப்ல சாப்பிடணும்; அதுக்குப் பிறகு காசு இல்லாம அடிபட்டு… இப்படியாகப் போகணும் கதை. சாப்பாடு வந்திச்சு;ஏற்கெனவே மரியத்தை சொல்லியிருந்தாங்க…சும்மா சாப்டறது மாதிரி ஒரு கடி கடிச்சிட்டு அடுத்த வசனம் பேசணும்னு. நானும் ஒரு கடி கடிச்சேன். என் நேரம். நான் கடிச்ச வடையில கடிபட்டது ஒரு மிளகாய்! அம்மாடியோவ்! ஒறப்பு தாங்கல! ஒறப்புனால வாயில் எச்சில்; இந்த லட்சணத்தில் எப்படி வசனம் பேசுறது? தண்ணீர் என்ன கேட்டா கிடைக்கவா போகுது? என்ன பண்றது. வடையோடு ஒரு அல்வா – அன்னைக்கி பகல்ல நடந்த விழாவில் விற்பனைக்கு இருந்தது – அது ஒண்ணு தட்ல இருந்துது. அவசர அவசரமா அதைப் பிரிச்சேன். அத்தை சைடுல இருந்து ‘அதெல்லாம் வேணாம்; வசனம்..வசனம் பேசுங்கிறாங்க; எங்க வசனம் பேசுறது. அத்தை, நான் இதுதான் சான்ஸுன்னு அல்வா சாப்பிடறன்னு நினச்சுக்கிட்டு அங்க இருந்து திட்றாங்க! அதெல்லாம் பாத்தா முடியுமா, என்ன? ஒருவழியா அல்வாவை ரெண்டு மூணு கடி கடிச்சதும் வசனம் பேசுற அளவுக்கு எரிச்சல் நின்னு போயிருந்தது. ஆடியன்ஸுக்கு நான் ரொமப் நேட்சுரலா நடிக்கிறமாதிரி இருந்திருக்கும் போல, சிலர் நாடகம் முடிந்த பின் ‘இதான் சான்ஸுன்னு ஒரு வெட்டு வெட்டினது மாதிரி இருந்தது’ என்றார்கள்! அப்போ, நம்ம நடிச்சது அவ்வளவு தத்ரூபம்னு தெரியுதில்லா…?

அடுத்துதான் நம்ம ‘டச்சிங் சீன்’!

சாப்டிட்டு கொடுக்க காசில்லாம அடி படறேன்; அதற்குப் பிறகு கிளப் ஓனரா நடிச்ச நண்பன் வைத்தியலிங்கம் என் சட்டையை மட்டும் பிடுங்கி என்ன விரட்டி விடணும். ஸ்கிரிப்ட்ல அப்படித்தான் இருக்கும். அவனுக்கு என்ன கோவமோ, என்னமோ, சட்டையைக் கழட்டிக் கொடுத்திட்டு போ என்றான். அதுவரைக்கும் சரி… அதுக்காகவே உள்ளே பனியன் போட்டு உட்டுருந்தாங்க. ஆனால் அவன் அடுத்து என் கால்சராயையும் கழட்டுங்கிறான். அவனது சொந்த improvisation அது! என்ன செய்றதுன்னு தெரியலை. நான் ஓடப் பார்க்கிறேன்;அவன் விரட்டுறான். அவன் மட்டும்தான் improvise பண்ண முடியுமா? ஓடும்போதே உள்ளே அரைக்கால் சட்டை போட்டுருக்கேனான்னு நிச்சயம் பண்ணிக்கிட்டு, அதன் பிறகு அவன் பிடியில் சிக்கி, அதன்பின் கால் சராயைக் கழட்டிக்கொடுத்து சோகமாக நடக்க… (இப்போ பேக்ரவுண்ட்ல அத்தைமார் இருவரும் ஒரு பாட்டு – ரெண்டுபேருமே ரொம்ப நல்லா பாடுவாங்க)..ரொம்ப அப்ளாஸ் அந்த சீனுக்கு. அதுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு, திருந்தி, அப்பாட்ட போய் மன்னிப்பு கேட்டு…கடைசியில் எல்லாம் சுகமே!

ட்ராமா முடிஞ்சு – அத்தைமார் இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க – வீட்டுக்கு அப்பம்மாவை போட்டிருந்த வேஷத்தோடு போய் பார்க்க ஆசைப்பட்டு, மேக்கப்போடு வீட்டுக்குப் போனேன். அப்பம்மா மூஞ்சே நல்லா இல்லை; என்னைப் பார்த்ததும் ஒரே அழுகை; கட்டிப் பிடிச்சிக்கிட்டாங்க. ட்ராமா பாக்கும்போதே அழுதுட்டாங்களாம். எம்(பேரப்)பிள்ளையை அந்தக் கிளப்-காரன் இப்படி – கால் சட்டையையும்கூட பிடுங்கிக்கிட்டு – கொடுமைப் படுத்திட்டானேன்னு அழுகை. பக்கத்தில இருந்த ஒரு சித்தியும் அழுதிட்டாங்க. எனக்குக் கூட அழுகையா இருந்திச்சு. வைத்தி மேல கோவமா வந்திச்சு. (பின்னாளில் போலீஸ்காரன் ஆனான் என்று கேள்வி.)

பிறவி நடிகன்..பிறவி நடிகன்..அப்டீம்பாங்களே…அதெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களைத்தான். இல்லைன்னா அந்த வயசில ஸ்டேஜ் ஏறி, வெளுத்துக்கட்டி, மக்களைக் கண்ணீர் விடுற அளவுக்கு உருக்கணும்னா அது என் மாதிரி, சிவாஜி மாதிரி பிறவி நடிகர்களால மட்டும்தான் முடியும். இல்லீங்களா? என்ன ஆகிப்போச்சுன்னா, அவர் அப்படியே ஸ்டேஜ், ட்ராமா, சினிமான்னு வளர்ந்துட்டார். நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா? ஆனா எனக்கு ஒண்ணும் இதனால பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. (பாருங்க, சும்மா அப்டியே தமிழ்மணம் பக்கம் வந்து அப்டியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்னு வந்தவனை ஒரு வாரத்திற்காகவாவது இஸ்டாரா இருக்கணும்னு மக்கள் கேக்கலியா? ) சினிமாவில ஸ்டாரா ஆனாதான் உண்டா அப்டின்னு நாமல்லாம் ஒரு பெரும் போக்கா போயிடறதுதான். அதனால் எனக்கு இதில் ஒரு வருத்தமும் இல்லை. வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பான்னு போயிடறதுதான்.

ஆனா என்ன, நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு செவாலியே பட்டமோ, தாதாசாகேப் பால்கே பட்டமோ கிடைக்க இருந்த ஒரே சான்ஸும் போயிருச்சி !