99. வாழ்த்து

Image hosted by TinyPic.com

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும்

வலைஞர்களுக்கும்,

அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்

என் மனம் நிறைந்த


ஒ ளி நி றை

ந ல் வா ழ் த் து க் க ள்.

அன்புடன்….தருமி

p.s.: photo is specially taken
for this occasion as recently
as in 1977

98. நடிகையர் திலகம் vs ராதிகா

Image hosted by TinyPic.com

என்ன மாதிரி பழைய ஆளுங்ககிட்ட கேளுங்க, ஒண்ணுபோல ஒரே மாதிரி பதில் சொல்லுவோம். கேட்டுப் பாருங்களேன் – தமிழில் நல்லா வசனம் பேசுற நடிகை யாருன்னு? டக்குன்னு பதில் வரும்: ‘கண்ணாம்பா’ன்னு. அதாங்க, மனோகராவில சிவாஜிக்கு அம்மாவா வருவாங்களே, அவங்க. அதே மாதிரி, நடிப்புக்கு எந்த நடிகைன்னு கேளுங்க; சாவித்திரி அப்டீம்பாங்க.

முதல்ல சொன்னவங்க பூர்வீகம் தமிழ் நாடுகூட இல்ல; ஆனா தமிழ பிச்சு வாங்கிருவாங்க. அப்படி ஒரு modulation, clarity… அப்படி முழிச்சி பாத்தாங்கன்னாலே நாம ஒரு வழியா ஆயிடுவோம். மூச்சு விடாம வசனம் பேசுவாங்க -மனோகராவில பாத்திருப்பீங்களே! ‘ போதுமடா மகனே, பொறுத்தது போதும்; பொங்கி எழு, மனோகரா’ அப்டீங்கிற வசனம் இன்னைக்கி வரைக்கும் நம்ம காதில் ஒலிக்குமே.

அடுத்தது, சாவித்திரி அவர்கள். நல்ல நடிகை; ஆனாலும், இப்போவெல்லாம் அவங்கள நினச்சாலே அவங்களோட பரிதாப கடைசி நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது. எப்படி ஒரு வீழ்ச்சி. யார்தான் இந்தக் குடியைக் கண்டுபிடித்தார்களோ. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டம் என்பார்கள். சாவித்திரி சொந்தமாக எடுத்த, ‘பிராப்தம்’, சிவாஜி நடித்த அந்தப் படமே ஒரு பெரும் சோகக் காவியம்; அப்போதே அவர்களின் வாழ்வின் அஸ்தமன காலம் ஆரம்பித்து விட்டது.

பாசமலர் படம் அவருக்கும், சிவாஜிக்கும் ஒரு மகுடம். ( குமுதம் இந்தப் படத்திற்கு எழுதிய விமர்சனம் நன்றாக நினைவிலிருக்கிறது.: ‘பாசமலர்- அது வெறும் காகித மலர்!’ நம் தமிழ் பத்திரிகையின் சினிமா விமர்சர்களுக்கு differentiating between grain and chaff தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.) அதன்பின் வந்த படங்களில் இந்த இரு பெரும் கலைஞர்களும் காதல் ஜோடிகளாக வருவதைத் தமிழுலகமே ஒத்துக்கொள்ள மறுத்தது. Such was the impact of Pasamalar! நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடங்கள் என்றால் சாவித்திரிக்கும் ஏறத்தாழ அதே மாதிரிதான். அழகாகச் செய்திருப்பார்கள். சிவாஜியோடு இணைந்து உணர்ச்சிப் பிழம்பாய் (ஓவர் ஆக்டிங்?) நடித்தார் என்றால், ஜெமினியோடு சேர்ந்து இயல்பான, மிகையற்ற நடிப்பிலும் ஒளிர்ந்தார். என்ன ஒண்ணு, அந்தக் காலத்தில சிவாஜிக்கும், நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கும் ஒரு போட்டி; இவர் ஒரு நடிகையோடு நடித்தால் அவர் அதே நடிகையை அடுத்த படத்திற்கு ‘புக்’ செய்துவிட வேண்டும். பாசமலர் பெற்ற வெற்றியைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன் அடுத்த படமான ‘வேட்டைக்காரன்’ என்ற படத்திற்கு சாவித்திரியோடு சேர்ந்து நடித்தார். ‘மெதுவா..மெதுவா..தொடலாமா, மேனியிலே கை படலாமா?” என்றொரு பாட்டு. பாட்டு என்னவோ, மெதுவா..மெதுவா அப்டின்னுதான் வரும்; ஆனா நம்ம தலைவர் பிடிக்கிற பிடி…செம பிடி…! அது என்னவோ, தலைவர்கூட நடிக்கிற நடிகைமேல கூட எரிச்சல் வர்ர மாதிரி ஆயிடும். சரி..சரி…digression வேண்டாம்!

எனக்கும் எப்பவுமே நடிப்புக்கு சாவித்திரின்னுதான் இருந்திச்சு. சாவித்திரி எல்லா ரோலும் பண்ணினாலும் சோக நடிப்புக்கு அவர்தான் அப்டிங்கிறது ஒரு முடிவான விஷயமா என்னைப் பொறுத்தவரை இருந்தது. நாளாக நாளாக அந்தக் கருத்து மாறிடிச்சி. இப்போ என்னைப் பொறுத்தவரை, இதுவரை நம் தமிழ் நடிகைகளில் டாப் யாருன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு, ‘ராதிகா’ என்பேன். அந்த எண்ணம் முதலில் வந்தது அவரும், விக்ரமும் (!) சேர்ந்து நடித்த ‘சிறகுகள்’ என்ற சின்னத்திரைக்காக எடுத்த படம் பார்த்தபோதுதான். அதன்பின் பல படங்கள். அதிலும் முக்கியமாக, அவரது சிறந்த நடிப்பு அதிகம் பேசப்படாத ‘ஜீன்ஸ்’ படத்தில் அவரது negative role – simply superb. அதன் பிறகு வந்த, கிழக்குச் சீமை, அதைவிடவும் பசும்பொன்…வாவ்… ராதிகா நடித்ததில் மிகவும் பிடித்த படம் அதுதான்.

சாவித்திரியை விடவும் variety roles செய்தது ராதிகாதான். முதல்வரிடம் இல்லாத சிலவகைத் திறமைகளை ராதிகாவிடம் கண்டிருக்கிறேன்.சூட்டிகையான பெண்ணாக, glamour ரோல் (சாவித்திரியை அப்படிக் கற்பனைகூட பண்ண முடியவில்லை!);tough and strong lady ரோல்; இப்படி எந்த ரோலையும் எளிதாகச் செய்த ராதிகாவிற்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் அவர் பல படங்களில் challenging roles பண்ணியிருக்க வேண்டும்; இனிமேயாவது பண்ண வேண்டும். ஆனால், அது முடியாது போயிற்று. சாவித்திரிக்கு குடிப்பழக்கமும், அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளும் அவரது திரைப்பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியானதென்றால், இவருக்கோ வேறொரு மெகா பூதம் மெகா சீரியல் என்ற ரூபத்தில் வந்து விட்டது. அனகொண்டாவை விடவும் இந்த ‘முழுங்கு பூதம்’ அவரை மொத்தமாய் விழுங்கி விட்டது. இனி அவர் அதிலிருந்து வெளி வருவது அனேகமாக நடக்காத காரியம்தான்.

தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரும் நட்டம்தான்.

பி.கு.
ராதிகா நடித்த முதல் படம் – கிழக்கே போகும் ரயில். இடைவேளை வரை கூடவந்த நண்பன் பொறுத்துக் கொண்டான். அதற்கு மேல் முடியவில்லை; இந்த மூஞ்சிகளைப் பார்க்கவே சகிக்கவில்லை என்று எழுந்து போய்விட்டான்; நான் பாரதி ராஜாவுக்காக முழுப் படமும் பார்த்தேன். அப்படி அசிங்கமாக (யாரும் கோவிக்க மாட்டீங்களே?) இருந்த ஒரு பெண் எப்படி அழகாகவே மாறினார். ‘அப்படி இருந்தவர் எப்படி இப்படி ஆனார்? ( அதேபோல், விஜய் சின்னப் பையனாக முதலில் தோன்றிய ஒரு படம், பெயர் தெரியவில்லை. ரஜினிக்கு ராம்கி மாதிரி விஜய்க்கு யாருங்க அங்கே? ஆனா என்ன? விஜய் ஏறக்குறைய அதே மாதிரிதான் இருக்கார்;கொஞ்சம் பரவாயில்லை. அடுத்து விஜயகாந்த் – எப்படி இவுங்கல்லாம் சகிக்காத மூஞ்சுகளோடு வந்து அப்புறம் மாறிடுராங்க?) எனக்கு என்ன சந்தேகம்னா, ராதிகா அழகா( அழகுன்னா உடனே அஸினோட கம்பேர் பண்ணிடவேணாம்!)உண்மையிலேயே மாறிட்டாங்களா; இல்லா, பாத்துப் பாத்து நமக்கு அப்படி ஒரு acceptance வந்திருதா? தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன். சொல்றீங்களா???

(அப்பாடி, ஒரு வழியா தருமி அப்டீங்கிற பேரைக் காப்பாத்திக்கிறதுக்காகவே ஒரு கேள்வியோடு இந்தப் பதிவை முடிச்சிட்டேன்; இல்லைன்ன நம்ம பையன் அவ்வைக்குக் கோபம் வரும்!)

பி.கு.-2 — இந்தப் பதிவுக்கும், மேல போட்டு இருக்கிற palm leaf-க்கும் என்ன தொடர்புன்னு கேக்றீங்களா? நானும் பாத்துட்டேன் – இந்த அமெரிக்க ஆளுங்க என்னமோ SLR, DSLR, Zoom Lens 28mm to 300 mm அப்டின்னு என்னென்னமோ சொல்றாங்க. அதான் ஒரு ‘இது’ எனக்கு!! ஏதோ ஒரு “எள்ளுருண்டை”!

97. சிவாஜி vs எம்.ஜி.ஆர்.

சிவாஜி vs எம்.ஜி.ஆர்.
–அல்லது —
பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எப்படி?

‘கதை ஒன்று சொல்லுங்கள், அத்தான்’ என்று தலைவி கேட்க, சேரன் செங்குட்டுவனாக, கலைஞரின் நீண்ட வசனத்தைத் தொடர்வாக, தெளிவாக,அழகு உச்சரிப்பில் ‘ராஜா-ராணி’ படத்தில் பேசிய அழகைச் சொல்லவா?(மேக்கப் போடும்போது அருகில் நின்று ஒருவர் உரத்துப் படிக்க, எத்தனை நீண்ட வசனமாயினும் அப்படியே மனனம் ஆகிவிடுமென்று வாசித்தபோது ம்..ம்..இப்படி ஒரு கலைஞனா என்று தோன்றியது)

தொண்டுக் கிழமாக சாக்ரடிஸ் வசனம் பேசிய அழகா, ‘அவர்களும் பேசிப்பார்க்கட்டுமே; ம்..ம்..பேசித்தோற்றவர்கள்’ என்று கரகரத்த குரலில் சொல்வாரே அந்த அழகைச் சொல்லவா?

சாம்ராட் அசோகனில் அந்த ‘ ரத, கஜ, துரக, பதாதிகள்’ என்ற சொற்றொடரை நாங்கள் உச்சரிக்க முயன்று தோற்போமே அதைச் சொல்லவா?

உயர்ந்த மனிதனில் சாப்பிட்டுவிட்டுப் பல்குத்திக்கொண்டே பேசுவாரே..இல்லை, ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’ என்ற பாட்டுக்கு 14 வித நடை நடந்து அசத்துவாரே அதைச் சொல்லவா?

திடீரென்று ஆள் ட்ரிம்மாக ஆகி, எங்க மாமாவில் நடனம் ஏது ஆடாமலேயே தோளைக் குலுக்குவதை மட்டும் வைத்தே அழகாக நடனம் ஆடுவதுபோன்ற ஒரு பிரம்மையை உண்டாக்குவாரே அதை நினைவு கூறவா?

வ.உ.சி.யாகவே மீண்டும் வந்து வாழ்ந்து காட்டினாரே அதைச் சொல்லவா?

இல்லை, பாசமலரில் மனம் நெகிழ ‘கைவீசம்மா கைவீசு’ என்றதைச் சொல்லவா?

உத்தம புத்திரனில் காண்பித்த வேறுபட்ட குணச்சித்திரங்களைச் சொல்லவா?

அதையெல்லாம் விடுங்கள் – தெய்வமகனில் அந்த convent bred இளைய மகனின் சேட்டைகளை வேறு யாரும் செய்தால் அரவாணி போல்தானே இருந்திருக்கும்.

சரி, விடுங்கள். It is an endless list…

அடுத்த ஆள், நம்ம எம்.ஜி.ஆர். என்னைப் பொறுத்தவரை அவர் நடித்த ஒரே படம் ‘பெற்றால்தான் பிள்ளையா?’. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னது போல, ‘பாவம்..அவர். சோகம்னா வேகமா போய் ஒரு தூணில் முகத்தை மூடி வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்குவார்; அவருக்கு அவ்வளவுதான் பண்ண முடியும்’.

இப்படி நடிப்பில் இரு எதிர் எதிர் துருவங்களாக இருந்தும் திரைஉலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெயர் என்னவோ எம்.ஜி.ஆருக்குத்தான். சிலருக்கு இப்படிதான் ஒரு ஸ்டார் இருக்கும்போல; நம்ம ரஜினி, அமிதாப்..பாருங்களேன், இந்த தருமிக்குக் கூட ஸ்டார் ஸ்டேட்டஸ் ஒரு வாரத்திற்குக் கிடைக்கலை, அது மாதிரிதான் எல்லாமே போலும்!

நான் சொல்ல வந்த விஷயம் அது இல்லை. ரொம்ப நல்ல நடிகரா ஒருத்தர். அரசியல் நடிகரா இன்னொருவர். இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை ‘அவன்,இவன்’ என்றும், எம்.ஜி.ஆரை ‘அவர், இவர்’ என்றும் பேசுவது வழக்கம். இதில் என்னைப் போன்றவர்களும் அடக்கம். திடீரென்று ஒரு நாள் அது உறைத்தது. ஏறத்தாழ எல்லோருமே இது போல் இருந்ததைக் கண்டேன். ஒர் ஆராய்ச்சி…!முடிவு தெரிந்தது.

சிவாஜியின் பெயர் கணேசன் என்று முடிகிறது; இதனால், (சிவாஜி)கணேசன் நடித்தான்;(சிவாஜி)கணேசன் கொன்னுட்டான்’டா… இப்படித்தான் சொல்ல எளிதாகிறது. அடுத்த பெயரைச் சொல்லிப் பாருங்கள்: எம்.ஜி.ஆர். நடித்தார் என்பதுதான் எளிதாக வரும். நல்லா வாள் சண்டை எம்.ஜி.ஆர். போட்டான் என்றால் நல்லாவா இருக்கு.
ஆக, கண்டுபிடிச்சது என்னென்னா, பெயரின் விகுதியை ‘அர்’, ‘ஆர்’ என்பதுபோல வைத்தால் பின்னால் கூப்பிடுபவர்கள் பெரும்பாலும் மரியாதை கொடுத்துவிட வாய்ப்புகள் அதிகம். இதை விட்டு விட்டு, கணேசன் என்று ‘அன்’ விகுதியோடு பெயர் வைக்கிறீங்கன்னு வையுங்க…பிள்ளைங்க உங்கள பின்னால வையுங்க!

இந்த மாதிரி இலக்கணம் பாத்து பெயர் வச்சீங்கன்னா நல்லா இருக்குமா…அதை விட்டுட்டு numerology அது இதுன்னு போட்டு மக்கள குழப்பாதீங்க. இந்த numerology அதோடு சேர்ந்த மூ–தனமான விஷயங்களைப் பற்றியும் சீக்கிரம் எழுதணும்; அது ஒரு சமூகக் கடமையல்லவா?

96. எம்.ஜி.ஆர். vs எம்.ஆர்.ராதா

1968- 1969 -எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை; ஆனாலும் தமிழ் நாட்டையே உலுக்கிய நிகழ்வல்லவா? எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்; சுட்டது எம்.ஆர். ராதா. கென்னடியைச் சுட்டபோது குண்டுபாய்ந்த இடத்திலேயே – சில மில்லி மீட்டர்கள் தள்ளி – எம்.ஜி.ஆருக்கும் கழுத்தில் – carotid artery பக்கத்தில் – குண்டு பாய்ந்தது. அவர் செய்த தருமம் அவர் தலை காத்து, ‘நான் செத்துப் பொழச்சவண்டா’ன்னு பாட்டுப் பாட வச்சிது; குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்தபடியே, அந்த போஸ்டரைப் போட்டே தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றது – இப்படிப் பல செய்திகள். உண்மைகள்…?

அது என்ன காரணம்னே தெரியாது. அவர் ரொம்ப நல்லவர் அப்டி, இப்டின்னு எல்லாருமே சொன்னாலும் எனக்கு என்னவோ அவரைச் சிறு வயதிலேயே பிடிப்பதில்லை. நடிகனாக இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் அவர் புகழ் பெற்றார் என்பது என் எண்ணம். உதாரணமாக, ‘காமராஜர் என் தலைவர்’ என்றோ, ‘வழிகாட்டி’ என்றோ இவர் பேசிவிட, ‘எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு’ என்று இவர் சொல்லலாம் என்று கழகக்கண்மணிகள் கோபித்துக்கொள்ள, இவர் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்க, அப்போது ரிலீசான ஒரு புதுப்படம் (கைராசி என்று நினைக்கிறேன்) ஈயாட, தயாரிப்பாளர் இவர் கையில கால்ல விழ, இவர் மன்னிப்புக் கோரி தாய்க்கழகத்திற்குத் திரும்பியதும், படம் பிச்சுக்கிட்டு போச்சு.தி.மு.க.விலிருந்து இவரே வெளியே போயிருந்தால்கூட அனேகமாக அப்படித்தான் நடந்திருக்கும். அதிலும் எங்க ஊர்க்காரர் ஒருத்தராலதான் அவரை வெளியே தள்ளி பெரிய ஆளாக்கினதா சொல்லுவாங்க. சரி, அத விடுங்க.

60-களில் மாணவர்களாக இருந்த அனேகம்பேர் போலவே நானும் அப்போது ஒரு தி.மு.க.-வின் ஆதரவாளனாய் இருந்த போதும் அவருக்கும் நமக்கும் ஒத்து வந்ததேயில்லை. ஒருவேளை அதன் அடிப்படைக் காரணம் நான் ‘பிரேமித்த’ சிவாஜிக்குக் கிடைக்காத ‘numero uno postion’ இந்த மனிதருக்குத் திரைஉலகில் கிடைத்தனால் இருக்கலாம். நன்றாக நினைவில் இருக்கிறது; தஞ்சையில் வேலை பார்த்து வந்த நாட்களில் தீபாவளிக்கு வந்த இரு படங்களில் சிவாஜியின் ‘இரு மலர்கள்’ (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா)படத்தை இரண்டாம் தடவையாக மாலைக் காட்சி பார்த்து விட்டு வெளியே வந்தோம். அன்றோடு அந்தப் படம் கடைசி. அடுத்த காட்சி -கடைசிக் காட்சி- க்குக் கூட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்தத் தியேட்டருக்கு எதிர்த்தாற்போல் இருந்த இன்னொரு தியேட்டரில் ‘விவசாயி’ படத்திற்கு எக்கச் சக்கக் கூட்டம். ‘கருமண்டா சாமி’ன்னு தலியில அடிச்சிக்கிட்டேன். ஏன்னா, இதுவரை வந்த திரைப்பட விமர்சனங்களில் எனக்கு மிகவும் பிடித்தது விவசாயி படத்திற்கு குமுதத்தில் வந்த விமர்சனம்: அப்போது திரையிடப்பட்டு வந்த ஒரு அரசின் செய்தித் தொகுப்பைப் பற்றி விலாவாரியாக எழுதிவிட்டு, இறுதியாக குமுதம் இவ்வாறு எழுதியிருந்தது: இந்த செய்திப் படத்தோடு ‘விவசாயி’ என்றொரு சினிமாப் படமும் காண்பிக்கப்பட்டது. ஆனா, இப்போ காலம் கடந்து ஒரு உண்மை புரிந்து விட்டது. இன்றைக்கு யாராவது நடிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதும் கூறுவது கிடையாது. சகாப்தம் அப்டி இப்டின்னு சொல்லுவாங்களே தவிர நல்லா நடிச்சார்னு யாருமே இப்போவெல்லாம் பொய் சொல்றதில்லை. (இதேமாதிரிதான், நாளைய உலகில் கமல்-ரஜினி விதயம் இருக்குமோ? இதப் போய் ரஜினி ராம்கியிடம் யாரும் சொல்லிடாதீங்க!)

பாத்தீங்களா, நம்ம பேச ஆரம்பிச்ச விதயம் என்னென்னே மறந்து போச்சு…சுட்ட கேஸ்…சுடாத கேஸ்… அதாவது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டார்; சரி.
ஆனால் எம்.ஆர்.ராதாவைத் திருப்பி யாரும் சுட்டார்களா, இல்லையா? யாரும் சுடலைன்னா
எம்.ஆர்.ராதாவுக்கு இருந்த காயம் எப்படி வந்தது? prosecution சொன்ன மாதிரி அவர் தன்னையே சுட்டுக்கிட்டாரா?…இப்படிப் பல கேள்விகள். குற்றவியலில் ஒன்று சொல்வார்கள். தடயங்களைச் சரியாகத் திரட்டி, சரியான முறையில் அவைகளைச் சோதித்தால் உண்மை கட்டாயம் வெளிச்சத்துக்கு வரும் என்று. வேண்டுமென்றே, கேஸை கோட்டைவிடுவதற்காகவே – அதாவது, நமது C.B.I.நம்ம அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்கமாய் கேஸ் போடுவார்களா அது மாதிரி - தகுந்த தடயங்களை பத்திரமாக வெளியில் வைத்துவிட்டு கேஸை நம் நீதிதவறா நீதியரசர்களிடம் கொண்டு போவார்களே, அப்படி போனால் எந்த கேஸ்தான் நிற்கும்; படுத்தே விடும். நம் ஊரில் நீதி தேவதை என்றைக்கு முழித்திருந்தது? கண்ணை வேறு நாம் கட்டிவிட்டோமா – இதுதான் சமயம் என்று நம் ஊர் நீதி தேவதை தூங்கிப்போய் ரொம்ப நாளாச்சு; அது தெரியாமல் நாம் அதன் கையில் ஒரு தராசை வேறு வைத்து விட்டோம்; பாவம்!

அடடா..மறுபடி, மறுபடி digression! இனிமே அப்படியில்லாம straight hit at the bull’s eye! சரிதானே…

கோர்ட்டில் கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தினசரிகளில் சுடச் சுட செய்திகள்; தவறாமல் படித்து விடுவோம். இறுதிக் கட்டம். எம்.ஆர்.ராதாவுக்கு வாதாடிய வழக்கறிஞரின் இறுதி விவாதம் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள்கூட (இங்கே நாங்கள் என்பது, நானும் என் மற்ற இரு அறை நண்பர்களும்..எல்லோருக்கும் இந்த விஷயத்தில் ஒரே புத்தி!)ஆஹா, நம்ம ஆளு எம்.ஆர்.ராதா விடுதலை ஆயிடுவார் போல இருக்கே; இவ்வளவு பாயிண்ட்டுகள் எம்.ஆர்.ராதாவுக்குச் சாதகமா இருக்கேன்னு நினச்சோம். வாதாடிய வழக்கறிஞரின் பெயர் வானமாமலைன்னு நினைக்கிறேன். அவரின் அந்தக் கடைசி நாள் விவாதத்தைச் சொல்லட்டுமா…?

அப்போதுதான் matinee idol என்ற வார்த்தை எங்களுக்குத் தெரிய வந்தது. எம்.ஜி.ஆரின் வழக்கறிஞர் தன் வாதத்தை முடிக்கும்போது,எம்.ஜி.ஆரை வானளாவப் புகழ்ந்து விட்டு….’ஆகவே, இப்படிப்பட்ட என் கட்சிக்காரரைக் கொல்ல முயற்சித்த எம்.ஆர்.ராதாவுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும்படிக் (கனம் கோட்டாரவர்களை !) கேட்டுக்கொண்டு தன் வாதத்தை முடித்திருந்தார். பதிலளிக்க வந்த எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர், வழக்கமாக நடக்கும் ஆயிரக்கணக்கான கேஸ்களில் இதுவும் ஒன்று; சம்பந்தப்பட்டவர் matinee idol என்பதால் உள்ள பரபரப்பைவைத்து இது ‘ஆயிரத்தில் ஒரு கேஸ்’ என்று கனம் கோர்ட்டார் அவர்கள் நினைக்கக்கூடாது. மற்ற இது போன்ற எல்லா கேஸ்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றார். (ஆஹா, கொன்னுட்டார்’டா! – இது நாங்க!)

குண்டடி பட்டு, அதுவும் தொண்டையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ஒரு மனிதரை அவருக்கு வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், முதலில் அவரை எங்கே கொண்டு செல்வார்கள்? நிச்சயமாக, மிக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு; அப்படியே இல்லாவிட்டாலும், போலிசுக்கு ஃபோன் செய்யலாம்; அதன் பிறகாவது உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர். விஷயத்தில் நடந்தது என்ன?அந்த critical-ஆன நேரத்திலும் முதலில் அவர் அவர்களது வழக்கறிஞர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின் வழக்கறிஞரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று F.I.R. போட்டுவிட்டு, அதன் பின்பே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்; அதுவும், மிகவும் தொலைவிலுள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு. ஏதும் பின்னணியோ, கேஸை ஜோடிக்கவேண்டிய அவசியமோ இருந்ததால்தான் இந்தத் தலைகீழான நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். ஆகவே, prosecution தரப்பு வக்கீல் சொல்வதுபோல எம்.ஆர்.ராதா வந்தார்; சுட்டார் என்பதெல்லாம் நம்பமுடியாத விஷயங்கள். (ச்சே!..பின்னிட்டாண்டா, மனுஷன்! – இது நாங்க!)

அடுத்த பாயிண்ட் அசத்தல் பாயிண்ட். சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகளும், இரண்டு spent bullets கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. அதில் forensic test-ன்படி ஒரு bullet எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்தப் பட்டது. ஆனால், மற்றொரு bullet எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பதைக் கண்டு பிடிக்கமுடியவில்லை என்று சொல்லப் பட்டது. நம்ம வழக்கறிஞர், அதாங்க..எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர்தான் கொடுத்த வாதம் உண்மையிலேயே உண்மை நிறைந்தது. அதுக்காக, சத்தியமே ஜெயதே – அப்டின்னா எல்லோரும் நம்பி விடறதா?

எந்த ஒரு ballistic expert-க்கும் அடிப்படைப் பாடமே spent bullets எந்தத் துப்பாக்கியிலிருந்து எந்த குண்டு வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதுதான். ஒரே ஒரு comparison micrsocope வைத்துச் செய்யப்படும் அடிப்படை டெஸ்ட்தான் இது. இருப்பது இரண்டு துப்பாக்கிகளும் இரண்டு குண்டுகளும்; இதில் ஒன்றை மட்டும் என் கட்சிக்காரரின் துப்பாக்கியில் இருந்து வந்ததைத் தெளிவாகக் கண்டுபிடித்தவர்களுக்கு, அடுத்த குண்டு இந்த இரண்டு துப்பாக்கிகளில் எதிலிருந்து வந்தது என்றோ, அல்லது இந்த இரண்டு துப்பாக்கிகளுக்குமே தொடர்பில்லையென்றோ நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எந்தக் காரணத்திற்காகவோ உண்மை மறைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் பலமும், புகழும் இதற்குக் காரணங்கள் என்றார். (பரத்திட்டார்’டா; இதுக்குக் கோர்ட் கட்டாயம் போலீசிடமிருந்து பதில் பெற்றேயாகணும்; at least benefit of doubt-ன்னு ஒண்ணு இருக்கே ! – இது நாங்க!)

ஆனா, நாங்களா அப்போ நீதிபதியாக இருந்தோம்…!

95. என் மனக் காய்ச்சல்…

நமக்கோ சுயக் கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தேனும் கிடையாது; ஆனாலும் நாம் எல்லோருமே பெரிய படிப்பாளிகள்; சிலர் படைப்பாளிகள்கூட. ஆயினும் என்ன? என் வாழ்நாளில் நான் சந்தித்த இருபது இருபத்தோரு வயதுக்கும் குறைவான என் மாணவர்களைவிடவும் மோசமாக நடந்து கொள்ளும் பதிவாளர்களைக் காணும்போது, அதுவும் இவர்களின் கையில் நாளை என் நாடு என்னும்போது பயம்தான் வருகிறது.

என் மாணவர்களிடம் நான் சொல்லும் ஒரு வழக்கமான விதயம்: உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்களும் உங்கள் எல்லை தெரிந்து அதை முற்றாகவும், நன்றாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் – என்று சொல்வதுண்டு. அவர்கள் புத்திசாலிகள். ஒரு சில நேரங்களில் தவிர அவர்கள் அவர்கள் எல்லைக்குள் இருந்து நான் எந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு கொடுத்ததில்லை. அவர்களுக்கும் என்னை நன்கு தெரியும். எல்லைக் கோட்டைத் தாண்டினால் அது எனக்கும் அவர்களுக்குமே நன்றாக இருக்காது என்று.

இது சுய புராணமில்லை. நடந்தது.

முதலில், காசி முன்னறிவிப்புகள் இன்னும் கொடுத்து, தனி மடல்களிட்டு, பிறகு நீக்க நினைக்கும் பதிவுகளை நீக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால், அதற்கு நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம். நேற்றுவரை நல்லவன், வல்லவன் என்றெல்லாம் நாம்தானே புகழ்ந்தோம்; இன்று நாமே வரைமுறையில்லாமல் பேசுகிறோமே என்றாவது நமது அறிவுஜீவிகள் கொஞ்சம் யோசிக்க மாட்டார்களா? ‘என்னைத் தூக்கி வெளியே போட்டுட்டியா; போகுது போ; நீ நல்லா இரு; நானும் வாழ்ந்து காண்பிக்கிறேன்’ என்றால் அல்லவா உங்கள் தகுதிகளுக்குப் பொருந்தும். புனைப்பெயர்களுக்குள்ளும், அனானிமஸ்களாகவும் உலா வருவதால் வரும் தைரியமா?

சரி, காசி தவறே செய்து விட்டார்; தட்டிக் கேட்கணும்னா, அதுக்கு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்ற விவஸ்தைகூட இல்லாமல் எவ்வளவு அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘நாங்கள் இவ்வளவுதான்’ என்று நிரூபிப்பது எவ்வளவு சரி?

சிலர் கடுமையான வார்த்தைகள் என்றால், சிலர் அங்கதம் என்றொரு பாணியாமே, அதில் விளையாடுகிறார்கள்; நேரமா அதற்கு இப்போது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா திறமை?

‘உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று பைபிளில் ஓரிடத்தில் வரும். கல் எறியுங்கள்; அதற்கு முன் உங்களையே கண்ணாடிகளில் பார்த்துக் கொள்ளுங்கள்…

இந்தத் தடங்கல்களையும், இரு புற மனக் காயங்களையும் தாண்டி நாமும், நம் தமிழ்மணமும் தொடர்ந்து வளர்வோம் என்று நம்புகிறேன்; விழைகிறேன்.

we have miles to go………

94. தல புராணம்…4

சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் – வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அந்தப் பழக்கமும் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே – அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!

பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு – எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட – ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்! அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.

காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.
Image hosted by TinyPic.com

ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும்.(படம் -கீழே) இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?
Image hosted by TinyPic.com

இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.

இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் – இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது – இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் போவது என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை. அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது – Pavlov-ன் நாய் மாதிரி – மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.
Image hosted by TinyPic.com
தியேட்டருக்கு எதிரேயுள்ள டவுன்ஹால் ரோடும்,
முடிவில் தெரியும் மீனாட்சி அம்மன் கோவிலின்
மேற்குக் கோபுரமும்.

தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் – ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் – எம்.ஜி.எம்., கொலம்பியா, – என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி – இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் – ரெடியாக வேண்டும். அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை தியெட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.

இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் – ஒரே படத்த இரண்டு instalments-ல் – பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.

இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது. ( குடு குடு கிழவனுக்கு அது எப்படி சாத்தியம் என்று நல்ல ‘மனிதன்’ யாரும் கேட்டுவிடக்கூடாதேன்னு பயமா இருக்கு!) Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும். சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?

ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?

93. என் போட்டோவும்…இன்ன பிறவும்…!!

Image hosted by TinyPic.com

நம்ம கதை வான்கோழிக் கதைதான்.

இளவஞ்சி மாதிரி பட்டாம்பூச்சி கவிதயும் எழுதத் தெரியாது. சின்னவன் மாதிரி ஒரு பக்கம் பாத்தா மயிலு மாதிரியும், இன்னொரு பக்கம் பாத்தா வான்கோழி மாதிரியும் தெரியிறது மாதிரி தட்டான பத்தி கவிதயும் எழுதத்தெரியாது. அதுக்காக சும்மா விட்றதா? அதுக்குத்தான் இந்தத் தட்டான். அது கவித எழுதுறதாக நீங்களே எதுனாச்சும் நினச்சுக்கங்க…வேண்ணா, அது அந்த ‘ஊசி இலை மேல தூங்கற பனித்துளியை நினச்சு பாடறதாகக் கற்பனை பண்ணிக்கீங்க…

Image hosted by TinyPic.com

இவ்வளவு கற்பனை பண்றவங்க படம் எடுத்த ஆளையும் கற்பனை பண்ணவா முடியும்; அதான் அடுத்த படம்..

இங்கேயும் கற்பனை தேவைதான் … இல்ல?

Image hosted by TinyPic.com

92. பழசக் கிண்டினேன்…

ஸ்டார் ஸ்டேட்டஸ்ல இருக்கும்போதே பலரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக ஏற்கெனவே நான் பதிய ஆரம்பித்த காலத்தில் எழுதிய சில விதயங்களை மறுபதிப்பு மூலம் உங்கள் பார்வைக்கு மீண்டும் கொண்டு வர நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் அவைகளைப் பலர் பார்க்காமல் போயிருக்கலாம் என்பதாலும், அவைகளில் சில எனக்குப் பதில் தெரியாதவைகளாகவோ, அல்லது அதைப்பற்றி நாம் கொஞ்சம் நினைக்கவேண்டுமென நான் நினைத்ததாலோ மறுபதிப்பிட நினைத்தேன். நாலைந்து பதிவுகளின் சுருக்கம் தர நினைத்திருந்தேன். இப்போது அவைகளைச் சுருக்கி மூன்றாக்கியுள்ளேன்:

ஒன்று – தலித் பற்றியது;

இரண்டு – common wealth பற்றியது;

மூன்று – human evolution

இத்தலைப்புகளில் உங்களைத் தொடும் ஏதேனும் இருப்பின் தருமிக்குப் பதில் தருவீர்கள் அல்லவா… அதற்காகத்தான். link கொடுத்துள்ளேன் மேலே; சுருக்கித் தந்துள்ளேன் கீழே.

I. தலித் பற்றியது:
THE HINDU Monday, MAY 2, 2005 pp11

DALITS all over the world have something to rejoice about. Durban was not in vain. On April 19, 2005, the U.N. Commission on Human Rights adopted a Resolution to appoint two Special Rapporteurs to tackle caste-based discrimination.

பள்ளத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட வெளியிலிருந்து தூக்கிப்போடும் கயிறு போல இது. தேவைதான். அதைவிடவும் உள்ளிருந்து சில முயற்சிகள் அவசரமாகத் தேவை.

1. சில தொழில்களுக்கு என்று சிலரை ஒதுக்கிவைத்து, அதை சாதியாக்கி…கீழிறக்கி, தாழ்த்தி ‘வர்ண’மயமாக்கியாயிற்று. இது நடந்துபோனது. இனி நடக்கவேண்டியது – இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். பரம்பரையாகச் செய்துவரும் தொழில்களை விட்டேயாகவேண்டும். சில தொழில்களை கலை என்ற பெயர் சூட்டி (தப்பாட்டம்,பறையாட்டம்) தலையில் கட்டியுள்ளார்கள்; இன்னும் சிலவற்றை இவர்கள்தான்செய்யவேண்டும் என்று ‘பட்டயம்’ கட்டியுள்ளார்கள்.

யாருக்கும் யார் வேண்டுமென்றாலும் சவக்குழி வெட்டமுடியும்.
சங்கு யார் ஊதினாலும் சத்தம் வரும். வேண்டுமென்பவர்கள் ஊதிக்கொள்ளட்டுமே…..

II. Common Wealth:
ஆண்டான் – அடிமை என்ற உறவால் வந்ததா, இல்லை வேறு காரணமா என்று தெரியாது – முதலிலிருந்தே இந்த ஆங்கிலேயர்கள் என்றாலே எனக்கு ஆகி வருவதில்லை. அவர்களை நினைத்தாலே எனக்குக் கோபம் வருவதுண்டு. இத்தனூண்டு நாடு; உலகமெல்லாம் காலனி ஆதிக்கம், சூரியன் மறையாத பேரரசு என்ற திமிர்; செல்லும் இடமெல்லாம் தங்கள் பிரித்தாளும் கொள்கையால் இன்று நாமும் பாகிஸ்தானும் மட்டுமல்ல அவர்கள் கால் பதித்த இடமெல்லாம் பல உலக நாடுகளுக்குள் பகை. ஸ்ரீலங்கா, gulf நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், அயர்லாந்து…பட்டியல் நீளுமென்று நினைக்கின்றேன். சுரண்டியே பிழைப்பை ஓட்டி வந்தவர்கள். சுரண்டியது ஏராளம்; கொடுத்தது ஆங்கிலமும், கிரிக்கெட்டும், அங்கங்கு ஒரு கலப்பினமும்….

அவர்களின் ஆட்சிக்கு கீழ் கஷ்டப்பட்டவர்களை எல்லாம் அதோடு விட்டுவிடாமல் இன்னும் common wealth என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தன் பழைய ‘அடிமை’களை இன்னும் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். இந்த அமைப்பால் யாருக்கு என்ன லாபமோ, அவர்களுக்குநிச்சயமாக இறுமாப்பும் அதனால் ஏற்படும் திமிரும் கட்டாயமாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் எதற்காக இந்தியாவும், மற்ற நாடுகளும் அந்த அமைப்பில் இன்னும் இருக்க வேண்டும்? இது நமக்கு இழிவு இல்லையா? நான் ஒரு காலத்தில் உன் அடிமை என்ற நினைப்பைத் தந்து கொண்டேயிருக்கும் ஒரு அமைப்பல்லவா இது.

ஆனால் இன்னும் அது நீடிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்; ஆனால் எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

ஏங்க சொல்லுவீங்களா…?

III. Human evolution:
(அறி. 1) பரிணாமக்கொள்கையாளர்களுக்கு தருமியின் ஒரு கேள்வி…

போக்குவரத்து பெருகியுள்ள இந்த நாளிலும்கூட பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்வது, குடும்பமாக புதிய இடம் செல்வது என்பது மிக அரிது. ஆனால், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் இடம் பெயர்ந்து ஒவ்வொரு கண்டமாகச் சென்றது என்று தெரிகிறது.

குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோது தேவைகளுக்கான போட்டியும் (competition for resources)இருந்திருக்காது. choices நிறைய இருந்திருக்கும். பின் மனித குலம் கண்டம் கண்டமாக migrate ஆகி, அதோடு, வரண்ட பெரும் பாலைவனங்களையும், பனியால் உறைந்து கிடக்கும் (godforsaken places)பகுதிகளையும்கூட தம் இருப்பிடங்களாக்கி, உலகமெங்கும் அந்த முந்திய காலத்திலேயே நிறைத்திருக்க வேண்டிய தேவை என்ன?

எதுக்குங்க…?

91. PASSING SHOT…

நேரம்; மதியம்: 3.48;
ஞாயிற்றுக் கிழமை,
09.10.’05.
இன்றிரவோடு star of the week’ முடிகிறது.

உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மறக்க முடியாத வாரமாக இந்த நாட்கள் கழிந்தன. ஆனால், முடியும் தருவாயில் வந்த ஒரு பின்னூட்டம், பின்னூட்டமா அது என்னைக் கொஞ்சம் – கொஞ்சமென்ன கொஞ்சம் – நன்றாகவே தடுமாற வைத்துவிட்டது. எழுத நினைத்து வைத்தவைகளை எப்படி சொல்ல முடியுமோ, தெரியவில்லை. அந்தப் பின்னூட்டம் வந்து சில நிமிடங்களே ஆயின. இப்போது தொடர மனமில்லை. சிறிது நேரம் கழித்து வந்து தொடர்கிறேன்.

திங்கட்கிழமை
காலை: 8.58
10.10.;05

இந்தப் பதிவு நட்சத்திரப் பதிவோடு சேராது என்றே எண்ணுகிறேன். நேற்று இரவு எழுத முயற்சித்தும் முடியாது போயிற்று.

நன்றாகச் சென்ற ஒரு வாரம், என்னை cloud9–ல் ஏற்றிவைத்த பின்னூட்டங்கள், நமக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வரும்போலும் என்ற நினைப்பு – இவையெல்லாமே கடைசி நேரத்தில் ‘மனிதன்’ என்ற பெருமனிதனால் சிதைந்தது வருத்தத்தையே தருகிறது. ஆனாலும் அந்த ‘மனிதனின்’ உயர் சிறப்புகளைப் பாடாமல் இருக்க முடியவில்லை. பாருங்களேன், தமிழ்மண நிர்வாகிகளுக்கும், காசிக்கும், மதிக்கும் வலைப்பதிவன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தன் புகழைப் பாட வைத்த அந்த ‘ம்னிதனின்’ திறமையையும், பெருமையையும் என்னென்று சொல்வது! வேறு எந்தப் பதிவில் போட்டிருந்தாலும் நான் அநேகமாக அதைக் கண்டு கொண்டிருக்கமாட்டேன். ஆனால்..

***அந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்த அவரின் மனிதாபிமானத்திற்கு என் வாழ்த்துக்கள்.
இதுபோன்ற ‘வேலை’களைச் செய்ய எவ்வளவு அழகான, பொருத்தமான ஒரு பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துள்ளார்.
***அந்த அறிவுக்கூர்மைக்கு தலை வணங்குகிறேன்.
என்ன அழகான வார்த்தைகளால் என்னை ‘அர்ச்சித்திருக்கிறார்’.
***அந்த அழகு மொழிக்கு அவரை வாழ்த்துகிறேன்.
4 என்பது எங்கெங்கே பதிவில் வந்திருக்கிறது என்று தேடித் தேடி எடுத்து, தன் உயர்ந்த கருத்துக்களுக்கு அவைகளைச் சான்றாக நிறுவி உள்ளார்.
***இந்தப் பொறுமைக்கும், அவரது ஆராய்ச்சித் திறனுக்கும் வாழ்த்துக்கள்.
***அதற்கு மொந்தை எழுத்துக்களில் பதிலும் கேட்டிருக்கும் அவரது புலமைக்கு வாழ்த்துக்கள்.
***எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் நான் இப்படி எழுதியிருக்கிறேன் என்று ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருக்கிறாறே அந்த நேர்மைக்குத் தலை வணங்கித்தானே ஆக வேண்டும்.
***என்னே ஒரு தெளிவு, என்னே ஒரு நேர்மை. என்னே ஒரு கொள்கைப் பிடிப்பு. இவரல்லவோ ஒரு தனி ‘மனிதப்பிறவி, கொள்கைக் கோமான்” வாழ்க அவர்தம் கொள்கையும்,தொண்டும்.
****
****
***** ****
****
****

தமிழ்மணம் பற்றி…இல்லை இல்லை.. தமிழ்மணத்தில் உள்ள தமிழ் பற்றியும், வலைஞர் பற்றியும் எழுத ஆசை. மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று எடுத்துக் கொள்ளும்படி முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்மணம் தமிழுக்குச் சேவை செய்கின்றதா? இது என் முதல் கேள்வி. இல்லை என்பது அநேகமாக பலரது பதிலாக …………….. இதுபோன்று பல் விதயங்களை எழுத எடுத்து வைத்திருந்தேன். இப்போது முடியவில்லை. வேறொரு சமயம் இதைத் தொடர்கிறேன்.நான் எழுத நினைத்தவைகளை எழுதுவேன். தயவசெய்து இப்போது பொருத்தருள்க. நட்சத்திரப் பதிவுகளை மட்டுமேயா வாசிப்பவர்கள் நீங்கள்.

********************* ***************************
********************************

நட்சத்திரமாக்கி, என்னை ஒரு வாரம் தனி உயரத்தில் ஒளிர வைத்து, நித்தம் நித்தம் புத்தம் புது நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி, அதையெல்லாம் விட எனக்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கையைக் கொடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்போருக்கும் என் நன்றி.

சிறப்பாக இருவர் பெயர் சொல்ல வேண்டும். முதல்வர்; காசி: எல்லோரும் அவர் தமிழ்மணத்திற்குச் செய்த, செய்துகொண்டிருக்கும் technical விதயங்கள் பற்றிச் சொல்வார்கள். அது என்ன மாதிரி க. கை. நா. -க்கு (கம்ப்யூட்டர் கை நாட்டு) அவ்வளவு புரியாது. ஆனால் என்னைக் கவர்ந்தது அவரது ‘என் கோடு; உன்கோடு; யூனிகோடு’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரைதான். அது என்னை தமிழ்மணத்தின் மேல் காதல் கொள்ளச் செய்தது. கம்ப்யூட்டர் விதயங்களை இவ்வளவு எளிதாக, அதைவிடவும் சுவையாகவும் சொல்ல முடியுமா என்ற வியப்பு. வெறும் பாராட்டல்ல, காசி; 37 வருடங்களாக கல்லூரியில் ஆசிரியனாக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்தக் கட்டுரை it is a piece of art . இது போன்ற art of writing எல்லோருக்கும் வருவதில்லை. நீங்கள் அதே மாதிரி பல கட்டுரைகள் எழுதி – என் போன்றோருக்காக மட்டுமல்ல – உங்கள் திறனையும் தமிழ் உலகமே அறியச் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த சேவையைத் தொடர வாழ்த்துக்கள். நிச்சயமாக இதை ஒரு வெறும் புகழ் மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மதி, முதலில் என் ‘புதுவீடு’ நன்றாக இருக்கிறது’ என்று சொன்ன பலரின் பாராட்டுக்களை உங்களுக்குத் திசை திருப்பி விடுகிறேன். அந்த process-ல் நான் எப்படிப்பட்ட க.கை.நா. என்பதை உங்களிடம் நன்கு நிரூபித்து விட்டேன் என்று நினைக்கிறேன். செய்த உதவிகளுக்கு – உங்கள் உடல் நலக் குறைகளோடும் – மிக்க நன்றி. இன்னும் உதவி கேட்டு வருவேன்! இனிய சேதியைக் கொண்டு வந்ததை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனாலும் உங்களுக்கு என்னைப்பொருத்தவரையில் அசாத்திய பொறுமை. அதே சமயம் உங்கள் கோபம் (என்னிடமில்லை; நான் பார்த்த வேறிடங்களில்) மிகவும் நன்றாக இருக்கிறது!

அனைத்து நண்பர்களே, ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் யாரோ, நான் யாரோ என்றிருக்கும்போது ஒரே ஒரு பின்னூட்டம் நம்மை எவ்வளவு நெருங்கி வரச்செய்து விடுகிறது. ஒரு மடலில் நண்பர்களாகிவிடும் மாயம் நம் தமிழ்மணத்தில் எவ்வளவு சாதாரணமாகி விடுகிறது. ஒரே மடலில் ஒருவரை ஒருவர் சர்வ சாதாரணமாகப் பெயர் சொல்லி அழைத்து, காலை வாரி, கேலி செய்து, லொள்ளு பண்ணி,…ஓ, என்ன ஒரு இனிய உலகம் இது. நான் இப்போதெல்லாம் காலங்கார்த்தால கணினி முன் உட்காரப் போகும் முன் வீட்டில் சொல்வது: ‘ என் நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்; போய்ப் பார்த்துட்டு வர்ரேன்’. அது உண்மைதான். சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன். இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை. அடிக்கடி ‘பேசிக்குவோம்’ – அதான் இருக்கே நம்ம தமிழ்மணம். நன்றியெல்லாம் நண்பர்களுக்குள் தேவையா என்ன?

என்றும் அன்புடன்………….தருமி