76. ஒரு மதுர சேதி…

எல்லோருக்கும் மதுர எப்படியோ, எங்க வைகை நதின்னாலே ஒரு இளக்காரம். அதில் தண்ணியே ஓடாது என்கிற மாதிரி ஒரு நினப்பு. ஆனா கடந்த நாலஞ்சு நாளா வெள்ளம் எப்படி போகுது தெரியுமா? பாக்கிறதுக்கே எப்படி இருக்குது தெரியுமா?

எவ்வளவு தண்ணி போகுதுன்னு கேக்றீங்களா? நல்ல வெள்ளம். அநேகமா ஆளு உள்ள இறங்கினா கழுத்து இல்ல..இல்ல… கண் புருவம் மறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்…உள்ளே இறங்கி தலைகீழா நிக்கணும்; அவ்வளவுதான்!!

75. கா.நூ.தா.நி. கவிதை…5

சித்தாளாக இருந்த போது
துறைத் தலைவரிடம் எடுத்ததெற்கெல்லாம்
‘வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்தில் எழுதியது…

முன்னால் வந்தால் முட்டி
பின்னால் போனால் உதைத்து
அருகில் வந்தால் குரைத்து
செக்குக்குள் போட்டு ஆட்டாதீரும், செட்டியாரே*!

* just rhyme-க்காக போட்ட வார்த்தை. உண்மைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை

74. THIS IS TOO MUCH.!

Let me first tell that I am a cricket-hater. Still……….

அதுக்காக நான் ஒண்ணும் யார்கூடயும் போய் சண்டையெல்லாம் போடுறதில்ல. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். என்ன, காலையில தினசரிகளைப் பார்க்கும்போது, சன் டி.வி. செய்தி பார்க்கும்போது எரிச்சல் வரும். இப்போ அது கூட இல்லை. ஏன்னா, இந்து செய்தித் தாளில் கிரிக்கெட் செய்தி எங்கேயிருக்கோ அத திரும்பிக்கூட பாக்காம போய்க்கிட்ட இருக்கிற மாதிரி மனச வளத்துகிட்டேன்; சன் டி.வி,யில் அந்தப் பகுதி வந்ததும் எழுந்து போய்டுவேன். எதுக்கு டென்ஷன்; பாத்தா கடுப்பாகும். என்ன, தெருவில அசிங்கம் கிடந்தா ஒதுங்கிப் போறதில்லையா; அது மாதிரி.

ஏம்பா, இப்படி கிரிக்கெட்..கிரிக்கெட்டுன்னு அலைறீங்க அப்டீன்னு ரொம்ப நாளைக்கு முந்தி நண்பன் ஒருவனிடம் கேட்டேன்; Oh! What a game! It is filled so much with uncertainities; can you ever say what would happen in the next ball?-ன்னு கேட்டான். அதுக்கு, நான் கூட சின்னப்பிள்ளையில் கிராமத்தில் விளையாண்ட தாயக்கட்டத்தில கூட செம uncertainity இருக்குமே, எப்ப தாயம் விழுகும், யார் காய்க்கு எப்ப வெட்டு விழும்னு தெரியாம ஒரே டென்ஷனா இருக்குமே என்றேன். அதுக்கு அவன் பாத்த பார்வையே சரியாயில்லை. இன்னொரு ஒற்றுமையும் தாய விளையாட்டோடு உண்டு. வியர்க்க விறுவிறுக்க விளையாடவேண்டாம். மற்ற field games பாத்திருக்கீங்களா? உதாரணமா, கால்பந்து விளையாடும்போது அந்த அம்பயர்கூட சட்டை, கால்சட்டை எல்லாம் தொப்பு தொப்புன்னு நனஞ்சி இருப்பார். ஆனா, இங்க நாள் முழுவதும், இல்ல வாரக்கணக்கில கூட விளையாடுவாங்க..அக்குள்ல கூட வியர்வையின் அடையாளம் தெரியாது. அஞ்சு நாள் மாங்கு மாங்குன்னு விளையாடுவாங்க..ஆனா முதல் நாளே அல்லது இரண்டாம் நாளே சொல்லிடுவாங்க இது டிரா ஆகும்னு. கேட்டா ‘nail biting finish’!

சரி, அது உங்க விளையாட்டு; எனக்குப் பிடிக்கலைன்னா நான் ஒதுங்கிப் போறதுதான் மரியாதை; அத குத்தம் குறை சொல்லக்கூடாதுதான். ஏன்னா, tastes differ, இல்லீங்களா? பிறகு ஏன் இப்படி ஒரேடியா ‘இது’ன்ற அப்டீங்கிறிங்களா?

கடந்த ஒரு வாரத்து The Hindu பாத்தா அப்படி கேக்க மாட்டீங்க. இந்த நாட்கள்ல பூராவும் முதல் பக்கத்து செய்திகளில் கண்டிப்பா கிரிக்கெட் செய்தி உண்டு; ஒண்ணு B.C.C.I. ELECTION சேதிகள்; இல்ல, சாப்பல்-கங்குலி தகராறு. வயத்தெரிச்சல் என்னன்னா, ஏதோ யுத்தச் செய்திகள் மாதிரி பாவர் படம் எல்லாம் போட்டு, அவர் ‘மதியாலோசனை’ பற்றி எழுதிய அன்று, சானியாவின் முதல் சுற்று வெற்றி முதல்பக்க மூலையில் சிறிதாக (அதாவது போட்டார்களே!)வந்தது. அப்படி என்னப்பா வந்திச்சு, ஏதோ வெளியூர்ல போய் விளையாடினாங்க, ஜெயிச்சாங்க தோத்தாங்க – சரி, நியூஸ் போடுறீங்க; போட்டுத் தொலைங்க..அவங்க குடுமிபிடி சண்டைக்குமா இந்த முக்கியத்துவம்? அதான் கடைசியில விளையாட்டுக்களுக்குன்னு இடம் விட்டுருக்கே; அங்கேயாவது போட்டுத் தொலைக்கக்கூடாதா?

சன் டி.வி. கேட்க வேணாம்.
‘மற்ற விளையாட்டெல்லாம் விளையாட்டல்ல; கிரிக்கெட் விளையாட்டே விளையாட்டு’

கிரிக்கெட் விளையாடுபவரே விளையாடுபவர்; மற்றெல்லார்
அவரடி போற்றுவார் காண்’ – என்ற தத்துவத்தில் கரைகண்டு, மற்ற விளையாட்டுச் செய்திகள் கூறுவது பாவம் என்றுள்ளனர். ‘விளையாட்டுச் செய்திகள்’ என்ற பெயரையாவது ‘கிரிக் கெட்(ட) செய்திகள்’ என்றாவது மாற்றலாம்.

இதல்லாம் போகுது. ஒலிம்பிக்ஸில் நம் வீரர்கள் வெறும் கையோடு (இம்முறை ரத்தோருக்கு நன்றி!) வரும் ஒவ்வொரு முறையும்,’கிரிக்கெட்டுக்கு மீடியாக்களில் கொடுக்கப்படும் அதிதீவிர இடமே மற்ற விளையாட்டுக்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது; அதனால்தான் இந்தப் பின்னடைவு’ என்று பிலாக்கணம் பாடுவது இதே மீடியாக்கள்தான் என்பதே irony!

என்ன சொல்லுங்கள், எவ்வளவு சொல்லுங்கள், நல்லதனமாகச் சொல்லுங்கள், லாஜிக்கோடு எடுத்துச் சொல்லுங்கள் ….ஹுஹும்… பப்பு வேகாது; யார் சொல்லி யார் கேட்பது…?

73. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை..4

ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றைக் கனவில் காண்கிறார். பின்பு, “நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?”, என்று கேட்கிறார்.

எனக்கே என்னைப் பற்றிய ஆச்சரியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மேலே சொன்னது ஒரு பெரிய zen தத்துவ ஞானி. ஆனால் நான் எனது 8-12 வயதுகளில் இதைப்போன்று யோசித்திருக்கிறேனே; அது எப்படி? காலையில 5 மணிக்கே எழுப்பி கோயிலுக்கு விரட்டி விடுவார்கள். ‘பூசை’ பாத்துட்டு, அதன் பிறகு அங்கே பக்கத்திலேயே சாமியார்கள் நடத்தும் பால் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிட்டு வரணும். அப்படி காலங் கார்த்தால தனியா அந்த அரை இருட்டில ஒண்ணு எதையாவது எத்திக்கிட்டே நடந்து போகணும்; இல்லாட்டி எதையாவது நினச்சுகிட்டு – சில பேரு அதை ‘கொசுவத்திச் சுருளு’ம்பாங்க; நம்ம parlance-ல ‘குதிர ஓட்டுறது’ன்னு பேரு; ஏன்னா, அந்தக் கால கதையில எல்லாம் ‘அவன் மனம் என்னும் குதிரையில் ஏறி…’ அப்டின்னுதான எழுதுவாங்க – நடந்து போகணும். இது Frost கவிதையில வர்ர மாதிரி..

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. – before I sleep அப்டிங்கிறதுக்குப் பதிலா, before i go home அப்டின்னு வச்சுக்க வேண்டியதுதான். அப்போ, நம்ம ‘குதிர’ அதுபாட்டுக்கு வாயு வேகத்தில, மனோ வேகத்தில பாஞ்சு பாஞ்சு போகும்.

அப்போ, அடிக்கடி வர்ர ஞாபகம் என்னன்னா, ‘ இப்போ இருக்கிற வாழ்க்கை, நடக்கிற நடப்புகள் எல்லாமே ஒரு கனவுதான்; முழிச்சி எழுந்திரிச்சா அம்மாவை நிஜமாவே பார்க்க முடியும்; அதுவரை கொஞ்சம் adjust பண்ணித்தான் ஆகணும்; அதுதான் உண்மையான வாழ்க்கையா இருக்கும். ‘ அப்டின்னு அடிக்கடி நினைப்பேன்.

All that we see or seem
Is but a dream within a dream. …………………அப்டீங்கிற Alan Poe-வின் கவிதையும் நினைவுக்கு வருகிறது.


zen master நினச்சதுக்கும், நான் நினச்சதுக்கும் என்ன பெரிய வேறுபாடு சொல்லுங்க.

ஆனா, பாருங்க இப்ப என்னய. எப்படியிருந்த நான் . . . இப்படி ஆயிட்டேன்…

இதுக்கும், கீழே வர்ர கவிதைக்கும் என்ன தொடர்புன்னு கேக்காதீங்க; சரியா…?

கரும்பெடுத்து ஆலையிட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

கனியெடுத்துப் பிழிந்திட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

இப்பிறவியெடுத்து
வாழ்ந்து களித்தேன்;
வாழ்ந்து கழித்தேன்.

என்னதான் மிஞ்சியது ?

no…no…கை தட்றதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்ல…!

72. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை…3

அடி ராக்கம்மா!

இல்லாதவைகள்
இருந்தவைகளாக ஆனபோது
இருந்தவைகள் இனித்தன.

இருந்தவைகள்
இல்லாதனவாக ஆனபோது
இருந்தவைகள் எரிக்கின்றன.

பி.கு: நிச்சயமாக இம்முறை பதவுரை, பொழிப்புரை தருவதாயில்லை.

71. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை…2

அடி ராக்கம்மா!

என்ன ஆரம்பம் இது என்று யோசிக்கிறீர்களா? ‘கண்ணம்மா’ என்ற பெயர் பிடிக்கும். ஆனால் அந்த ‘முண்டாசுக்கவிஞன்’ எனக்கு முன்பே பிறந்த ஒரே காரணத்தால் அதை லவட்டிக்கொண்டு போய்விட்டான். என்ன செய்யலாமென யோசிச்சுக்கொண்டிருந்த போது ‘ பட்டிக்காடா பட்டணமா?’ன்னு ஒரு படம் வந்தது – என்னடி ராக்கம்மா என்றொரு பாட்டோடு. இதில் இன்னொரு விதயம் சொல்லணுமே! சிவாஜி கணேசனுக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா? படம்; அவர் மகன் பிரபுவுக்கோ ‘சின்னத்தம்பி’ன்னு ஒண்ணு. இந்த இரண்டு படமும் ஏன் இப்படி பிச்சுக்கிட்டு ஓடிச்சின்னு இன்னைக்கு வரை யாருக்கும் பதில் தெரியாது.

எந்த சிறப்பம்சமும் இல்லாமல் – வழக்கமா சிவாஜிக்கின்னாவது இரண்டு மூன்று சீன்கள் இருக்கும் நடிக்கிறதுக்காகவே’ அப்படியும் ஏதும் இல்லாமல் – காரணம் தெரியாமலே ஓடிய படம். அதைப்போலவே இந்த ‘சின்னத்தம்பி’யும். கதவிடுக்கில மாட்டின எலி கத்துமே அதுமாதிரி பாடுமே ஒரு பொண்ணு, அதாங்க, ஸ்வர்ணலதா- ஆஹா, கருத்தம்மா பாட்டு கேட்டதில்லையான்னு சண்டைக்கு வராதீங்க, ஏதோ அது மாதிரி ஒண்ணு இரண்டு தேரும்; இல்லைன்னு சொல்லலை – அந்தப் பொண்ணு பாடின பாட்டு ‘போவோமா?..’ அதுவும், ‘தூளியிலே..’ பாட்டும் தேறும். வேற என்ன இருந்திச்சு அந்தப் படத்தில. வேணும்னா இன்னொண்ணு சொல்லலாம்; குஷ்பூ கடைசி சீன்ல சாமான் செட்டு எல்லாம் போட்டு உடைச்சு ரகளை பண்ணுமே, அப்போ காமிக்கிற அந்த வீட்டுத் தரை ரொம்ப நல்லா இருக்கும் பள பளன்னு. அதென்னமோ ஒரு ராசிங்க இந்த பி. வாசுவுக்கு. அவரு குப்பை நிறைய நல்லா ஓடிருக்கு; நான் ஒண்ணும் ‘சந்திரமுகி’ பற்றிச் சொல்லலை. பாருங்களேன்; சந்தான பாரதிகூட சேர்ந்து ‘பன்னீர்ப் புஷ்பங்கள்’ன்னு ஒரு படம் -நல்ல matured movie ‘ வந்திச்சு. இரண்டு பேரும் பிரிஞ்சாங்க. அவரு பாவம் அவுட்டு; இவருக்கு ஒரே வெற்றிக் குப்பைதான்.

சரி..சரி… இப்ப என்ன சொல்லவந்தேன். ஆங்…என்னடி ராக்கம்மா பத்தியில்ல. ஆமாங்க…அப்பல்லாம் நான் “கவிதை” எழுதினப்போ (அதையெல்லாம் ‘வாக்கியங்களை உடைச்சுப் போட்டுட்டா கவிதையான்னு’ ஒருத்தங்க பின்னூட்டத்தில் பின்னிர்ராங்க..என்ன பண்றது. இப்படிதான் பெரிய கவிஞர்களை அவங்க life time-ல் பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை..போனாப் போகட்டும், விட்டிருவோம் அவங்களை – பொறாமையில் பேசுறாங்கன்னு!) பட். பட். படத்திற்குப் பிறகு ராக்கம்மாதன் நம்ம standard கதாநாயகி..இல்ல..இல்ல..கவிதாநாயகி. ஆச்சா, புரிஞ்சு போச்சுங்களா. இனிமே கவிதைக்கு வருவோமா?

அடியே ராக்கம்மா!

நம் கண்களுக்கு
மட்டுமே தெரியும்
வண்ணங்களில்
நான் வரைந்த சித்திரங்கள்
இன்று
உன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன ?

70. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை…

எல்லாரும் கவிதை எழுதுறீங்க; நாங்களும் அந்தக் காலத்தில் எழுதியிருக்க மாட்டோமா; பழைய குப்பையைக் கிளறும்போது அது தற்செயலாகக் கையில் சிக்காதா; தொட்டால் ஒடியறது மாதிரி இருந்ததில் உள்ள அந்தக் கவிதைக்கு வயசு 25-30 வயசுன்னா, அப்போ அந்தக் கவிதை கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கிற கவிதைதானே ?

அரங்கேற்றத்திற்கு நம்ம ஏரியா (அதாங்க, மீனாட்சி கோவில் மண்டபம்) பக்கத்தில இருக்கிற பொற்றாமரைக் குளம் பக்கம் போகலாமாவென நினச்சேன்…சரி, அங்க தண்ணில்லாம் அவ்வளவு நல்லா இல்ல…ஒரே பாசி. அதனால, நம்ம தமிழ்மணத்திற்குப் போய்விடுவோமின்னு வந்திட்டேன். ஏதோ..பாத்து…

ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.

ஞானிக்கு
இது கண்டு
மனமெல்லாம் வேதனை.
வேதனையில் வதங்கி
உள்ளம் உருகி
ஊசிமேல் ஒற்றைக்கால் தவமிருந்து
கடவுளைக் கண்முன் கொணர்ந்த ஞானி
மனமுருகிக் கேட்டார் கடவுளிடம்:
மனித வாழ்விலிருந்து போலித்தனங்கள்
மறைவதெப்போ?

வந்த இறைவன்
பதில் சொல்லாது
சிரித்து நழுவினான்.

காடுவிட்டு நாடு ஏகிய ஞானி
தண்டோரா போட்டுச் சொன்னான்:
கடவுளைக் கண்டேன்;
கேட்டதெல்லாம் பெற்றேன்;
சித்தியும் அடைந்தேன்;
முக்திக்கு அச்சாரமும் பெற்றேன், என்று.

ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.

யார் கண்டது; அடுத்த பதிவுகளில் ரொமாண்டிக் கவிதைகள் கூட வரலாம்!

69. மதுரயே குலிங்கிடிச்சில்ல…
ஒரு பெரிய மாநாடே நடந்து முடிஞ்சிருக்கு; ஒரு ‘would-be-கொ.ப.செ.’ அதப்பத்தி எழுதலாட்டா, அது எப்படி நல்லாவா இருக்கும். அது என்ன..’would-be-கொ.ப.செ.’ அப்டீங்கறீங்களா? அது என்னென்னன்னா..அன்னைக்கு மச்சான் வந்து சொல்லிட்டு போனார்ல…. அதுக்குப் பிறகு, மறுபடி ஒரு கமிட்டி மீட்டிங் போட்டோம்; நானும் இருந்தேன்ல..அப்போ, நாந்தான் சும்மா இல்லாமா, கொ.ப.செ. எல்லாம் சரி; ஆனா எந்தக் கொள்கையைப் பரப்புறது’ன்னு ஒரு கேள்வியை எக்குத்தப்பா கேட்டுட்டேன்; உடனே எல்லாருமா பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டோம்ல. அது என்னென்னனா, முதல்ல கொள்கைகளை முடிவு பண்ணினதும் அண்ணனை – அதாங்க, நாந்தான் அந்த அண்ணன் – அ.உ.கொ.ப.செ.-வா போட்டுடுவோம்னு நாங்க எல்லாருமா முடிவு பண்ணிட்டோம்.

இருந்தாலும் இப்பவே வேலைய ஆரம்பிச்சா நல்லது இல்லையா..அதுதான் இந்தப் படங்கள் எல்லாம்.

49. நான் ஏன் மதம் மாறினேன்…? – 1

ஏனைய பதிவுகள்:  1, 2, 3, 4, 5, 6, 7, 8.

முதலில் பதித்த நாள்: 16.08.05

‘மிஸ்ஸியம்மா” படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, ‘வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை’ என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் – கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘சிடி சினிமா’ தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: ‘அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?’.பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பது
நிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை ‘மூளைச் சலவை’யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் ‘பைபிள்’ பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் – அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு…

மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று – with an OBJECTIVE VIEWING – பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து ‘அவைகளை’ யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.

அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது – பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு – புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு – கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை – மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற – அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு – நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் – விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் – Fidelity.

நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, – இந்துக்கள் சொல்வதுபோல், ‘க்ரஹஸ்தன்” என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் – மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே – பலத்த தயக்கங்களுக்குப் பிறகே – கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution – a very slow ‘blossoming’! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, ‘Why I am not a Chrisitian?” என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

‘சுயம்பு’ என்று வைத்துக்கொள்வோமே!!

இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்… தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை – ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்…

53. நான் ஏன் மதம் மாறினேன்…? – 2

 
ஏனைய பதிவுகள்:  1, 2, 3, 4, 5, 6, 7, 8.  

 

முதலில் பதிந்த நாள்: 18.08.05

இரண்டு விஷயங்கள்:
ஒன்று – இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .
இரண்டு – நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம். பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் – என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். ‘கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு’ என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? “கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்” என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே – அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

‘கடவுள்’ இருந்தால் – ‘அது’ முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். – omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் ‘முக்காலமும்’ உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது – என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை – PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை…) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே ‘அவன்’ திட்டப்படி நடப்பதாக இருந்தால் – மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், ‘கடவுளின்’ முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, ‘முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்’ என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் – predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் ‘ஜெபமே ஜெயம்’ என்ற கூற்று என்னாவது?

இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? – தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! – என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து – எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு “பத்துக்கட்டளைகள்” ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் – என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் – என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி…மெல்ல..மெல்ல…மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த ‘ஆட்டை’யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் … ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். ‘எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்’ – என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. “என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை” என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim – இங்கே, rationality என்பதற்கு ‘ பகுத்தறிவு’ என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து – தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.